CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, June 12, 2009

தேவதையானவள்:02




உன் சொல்லுக்கு
கட்டுப்பட்டவாறே விழிமூடுகிறேன்
இனியகனவு காண..

எந்தவித அபிமானமும்
இல்லாமல் மீண்டும் வனத்தினுள்
சென்று இரைதேட தொடங்கியது
என் கவிதை...

அதே
முகம் தெரியா
இறகுகளற்ற தேவதை உருவம்
வந்து செல்கையில்

அலைபேசி
சிணுங்குகிறது சிந்துபைரவி
ராகத்தோடு ..


"என்ன தேவதைகனவில் வந்தாளா"
என்ற கேள்வியுடன்
மீண்டும் உன் குறுந்தகவல்....

Thursday, June 11, 2009

சிவா மனசுல பிரியா.....

டேய் சிவா எந்திரிடா,டைம் ஆச்சு பொண்ணுவீட்ல 10 மணிக்கெல்லாம் வரேன்னு சொல்லியிருக்கோம்" பரப்பரப்பாய் கிளம்பிகொண்டிருந்தாள் சிவாவோட அம்மா..

அட போம்மா ...பொறுமையா போகலாம்,வேணாம்னு சொல்லப்போறேன் அதுக்கு போய்" முனகிகொண்ட சிவாவின் வார்த்தைகளுக்கு

என்னடா நீ தான கட்டினா பிரியாங்கற பேருள்ள பொண்ணை தான் கட்டுவேன்னு அடம்பிடிச்ச" எதிரம்பு
தொடுத்துவிட்டு

" ஏய் கீதா எங்கடி இங்க வச்சிருந்த பச்சை வளையலை காணோம்னு கேட்டுகிட்டே தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள் அம்மா..

ஏண்டா சிவாவுக்கு பிடிக்கலைன்னு யோசிக்கறீங்களா..வாங்க சிவாவை பத்தி ஒரு சின்ன அறிமுகம் பார்ப்போம்

" சிவா ஒரு லவ் பெயிலியர்..அதிலிருந்து கவிதை கதைன்னு ஆரம்பிச்சு குடிச்சு கூத்தடிச்சு எல்லாகெட்ட பழக்கமும் வச்சுட்டு சுத்திட்டு இருந்தவன்..27 வயசாகியும் பிரியாங்கற பேர் தவிர வேற எதுவும் பிடிக்காம கல்யாணம் பண்ணிக்காம இருந்தவன்..போன வருசம் தாங்க பேருந்தில் அம்முன்னு ஒரு பொண்ணை பாத்து டாவடிக்க ஆரம்பிச்சான்..அந்த பொண்ணும் லவ் பண்ணுது.ஆனா ரெண்டுபேரும் சொல்லமுடியாம தவிச்சுட்டிருக்காங்க."

இப்படியிருக்க சிவா என்ன பண்ணுவான் பாவம்..

போய் பிடிக்கலைன்னு சொல்லிட்டு வந்துடலாம்னு சிவாவும் அயர்ன் பண்ணாத சட்டைய மாட்டிகிட்டு நல்லா எண்ணைய தலையில வச்சுகிட்டு கிளம்பிட்டான்..

போனவனுக்கு பிரியாவீட்ல ஒரு பெரிய அதிர்ச்சி

".ஹே அம்மு நீ எங்க இங்க" சிவா

" என் வீடு தான் இது..இன்னைக்கு என்னை பொண்ணுபார்க்க வராங்கப்பா" அம்மு

" அட வாங்க வாங்க ,,என்று புன்னகையுடன் வரவேற்றவாறு
செம்பகம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க தண்ணி எடுத்துட்டு வா" என்றார் அம்முவின் அப்பா..

அம்முவும் சிவாவும் புரியாமல் திகைக்க

" என்ன பிரியா மாப்பிள்ளையை முன்னாடியே தெரியுமா" அம்முவோட அப்பா..

சிவாவுக்கு தலையே வெடிச்சிடும் போலிருந்தது.

".உங்க பேர் அம்முன்னு தானே பஸ்ல உங்க பிரண்ட்ஸ் எல்லாம் கூப்பிடுவாங்க.."

"ஆமா அது செல்லபேர்.."

அப்போ நீங்க தான் பிரியாவா"

ஆமாங்க"

நீங்க தான் பிரியான்னு தெரியாம இந்த சம்மந்தம் பிடிக்கலைன்னு சொல்லிட்டு போகதான் வந்தேன்"

நானும் தான் பிடிக்காம இருக்கறதுக்காக நகை மேக்கப்னு எதுவும் போடாம இருக்கேன்"

நீங்க யாரையாச்சும் லவ் பண்றீங்களா"


நீங்களும் யாரையாச்சும் லவ் பண்றீங்களா"

நீங்க சொல்லுங்க " சிவாவும் பிரியாவும் கோரஸாக

ஆமாங்க" திரும்பவும் கோரஸ்..

யாரு" அதே கோரஸ்..

நீங்க தான்" அட ஒன்னாவே கோரஸ் படிச்சு ரெண்டு பேருக்குள்ளும் வெட்கம் வந்துதொலைக்க

சிவா வானத்தில் பறக்க ஆரம்பிச்சான்..

சிரித்துகொண்டே பிரியா போய் அலங்காரமெல்லாம் பண்ணிகிட்டு வெட்கத்தோடு காபி தட்டை எடுத்துட்டு வந்தாள்..

காபி குடிச்சுட்டு கல்யாணத்துக்கு பூரணசம்மதம்..பொண்ணை நீங்க இப்படியே எங்க கூட அனுப்பிவெச்சாலும் பரவால்லன்னு சிவா சொல்லி முடிக்கையில்மயங்கிவிழுந்தான்..

எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உடனே அவனை அருகிலிருந்த பெரிய மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்..

ஏதேதோ டெஸ்ட் எடுத்து முடித்து வந்த டாக்டர் சொன்னது இன்னும் பெரிய அதிர்ச்சி..

" அவருக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கமும் குடிக்கிற பழக்கமும் இருக்கா" டாக்டர்

" ஆமாம் டாக்டர் " சிவாவோட அம்மா

"குடிச்சு குடிச்சே குடல் வெந்து கேன்சர் வேற அபெக்ட் ஆயிருக்கு.பைனல் ஸ்டேஜ்" டாக்டர்

" டாக்டர் என்ன சொல்றீங்க" ன்னு அலறினாள் சிவாவின் அம்மா..

இப்போ டேரக்டா பிரெயின வேற அபெக்ட் பண்ணிட்டதால இன்னும் ஒருநாளோ ரெண்டு நாளோதான் உயிரோட இருப்பார்னு

டாக்டர் சொல்லிமுடிக்கையில் சிவா கண்விழித்துகேட்டுகொண்டிருந்தான்..

கண்ணீரோடு

டாக்டர் என்னை எப்படியாவது காப்பாத்துங்க நான் இந்த பழக்கத்தையெல்லாம் நான் அம்முவை பாத்ததிலிருந்து விட்டுட்டேன்..அவளோட வாழனும்...என்னை காப்பாத்துங்க"ன்னு

அழ ஆரம்பிச்சுட்டான்..

இல்லப்பா இது பைனல் ஸ்டேஜ் என்னால முடியாதுப்பா..இனிமே அந்த ஆண்டவன் தான் காப்பாத்தணும்..டாக்டர் சொல்லிவிட்டு வெளியே செல்ல

டாக்டர் டாக்டர்...என்னை காப்பாத்துங்க பிளீஸ் பிளீஸ்னு

கத்திட்டு இருந்தவனை

" டேய் என்னடா தூக்கத்தில் கத்துற..டைம் ஆச்சு எந்திரிடா..பொண்ணுவீட்ல பத்து மணிக்கெல்லாம் வர்ரதா சொல்லியிருக்கேன்" என்று எழுப்பினாள் சிவாவின் அம்மா..

பிகு=

1)கதை இத்தோட முடிஞ்சு போச்சு..
2)இது சிவாவோட கனவுதான்
3) அப்போ அம்முவோட நிலை என்னன்னு யோசிச்சீங்கன்னா அம்முவும் சிவாவும் சேரணும்னு நினைச்சீங்கன்னா அம்மு பிரியாவோட செல்லபேரா இருக்கட்டும்..
4) இதெல்லாம் ஒரு கதைன்னு எழுதினியேடான்னு என்னை திட்டணும்னு நினைச்சாலும் திட்டலாம்..

Monday, June 8, 2009

இரவின் விசும்பல்கள்..

அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

எலியைவிழுங்கி விட்ட
பாம்பினை போல் வலியில்
முனகிக்கொண்டிருந்த
என் அன்னையை கண்டு

என் இதயத்தின் ஓரத்தில்
ஒழுகிய விசும்பல் அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

புலியின் துரத்தலில்
ஓடி ஓடி ஓய்ந்து போன
மானினை போல

எங்களுக்காய் உழைத்து
கால் வலியில் சாய்ந்துகிடந்த
என் தந்தையை கண்டு மனசுக்குள்

கேட்டுக்கொண்ட
வார்த்தைகள் அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

ஊற்றை உள்கொண்டு
கரடுமுரடாய் வெளிப்படும்
என் மனதினை

அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

ஆறுதலாய் பேசவோ
அவர்களை கண்டு அழவோ
அவர்களை கவனிக்கவோ

என் மனதிற்கு
தெரிந்திருக்க வில்லை!

என்றாவது
ஓர் நாள் வெளிப்படலாம்

பாலைவனத்தில்
தடுத்துவைக்கப்பட்ட மழையை போல!

தேவையில்லை......

வீட்டுக்கூரையின்
அந்தரத்தில் சுழலும் அந்த
மின்விசிறி ஏதோ சொல்கிறது!

என் தொண்டைக்குழிக்குள்
ஏதோ சொல்லமுடியாத அளவுக்கு
பெரிய வார்த்தை சிக்கிகொண்டிருக்கிறது!

என் வாய்திறந்தாலே
வாயு மட்டுமே வார்த்தைகளுக்கு பதிலாய்

சீதனமாய் தரப்பட்ட
அந்த ஆளுயர கண்ணாடியில்
வீங்கிப்போன என் கண்கள்
வித்தியாசமாய்!

யாரிடமும் பேச முடியாமல்
வார்த்தை தொலைத்த மௌனமொழியால்
பேசத்தொடங்குகிறேன்..

திருட்டுதனமாய் சமையலறையில்
சாமான் உருட்டும் பூனையிடம்,

இருபது வயதில்
என்னை அவன் வீட்டுக்கு அனுப்பி
தன் கடமை முடிந்ததாய்
என் தந்தை சந்தோசமாய் இருந்திருக்க
தேவையில்லை!

உண்மையான அன்புகொண்டு
என் கருவறையில் ஒரு உயிரை
அவன் உருவாக்கியிருக்க தேவையில்லை!

சந்தோச செய்தியுடன்
அலுவலுக்காய் புறப்பட்ட அவனை
எதிர்வந்த வாகனமும் சிதைத்திருக்க
தேவையில்லை!

பல ஆயிரங்களை வாங்கிக்கொண்டு
அவனின் காலை எடுத்தால் பிழைப்பான்
என்று மருத்துவர்கள் அவன் உயிரை
இழுத்துப்பிடித்திருக்க தேவையில்லை!

அறுவை சிகிச்சையில்
அவன் குடலில் இருந்த கற்கள் கிழித்து
சிறுநீர் கலந்து அவன் இறந்திருக்கவும்
தேவையில்லை!

இது அத்தனையும்
இந்த மூன்று மாதத்தில் நடந்திருக்க
தேவையில்லை!

இத்தனை பெரியவார்த்தைகள்
என் தொண்டைக்குழியுள் சிக்கி
எனை ஊமையாய் மாற்றியிருக்கவும்
தேவையில்லை!

தனியாய்
அமர்ந்து அந்தரத்தையே
நோக்கி அமர்ந்திருந்த என்னிடம்

கூரையில் சுழலும்
அந்த மின்விசிறி
தேவையே இல்லை என
சொல்லிக்கொண்டிருந்தது யாருக்கும்

புரியாத சப்தத்தோடு!

இவை எவையும் புரியாத
அந்த பூனை வெளியில் ஓடத்தொடங்கியது

அர்த்தமற்ற கவிதை.....

அந்த வறண்டுபோன
பொட்டல்காட்டில் தனித்திருக்கும்
இலையுதிர்த்த மரத்திற்கு

எப்பொழுதாவது
இளைப்பாற தஞ்சமடையும்
பறவைகளை போலவே

நடுநிசி தாண்டியும்
வெறிகொண்டு அலையும்
என் தனிமைகளுக்கு

எப்பொழுதாவது
நினைவில் வந்து போகும்
உன்னுடனான நிகழ்வுகள்!

பெற்றக்குழந்தைக்கு
தாய்ப்பால் கொடுக்க மறுக்கும்
உடலழகு விரும்பியின் உதவாத

சதைப்பிண்டமாகவே
உன் அழிசாட்சியங்கள் என்னில்
பெரும்பாலும் உணரப்படுகிறது!

வழிதெரியா மீன்கள்...

அகலவாய்விரிக்கும் சூரியனின்
பசியில் வற்றிபோகும்
ஏரிக்கு எவ்வித வருத்தமுமில்லை!

மேகக்கருவறைக்குள் குடிபுகுந்து
அடுத்தகணமே அவைகளுக்குள்
கூடலோ கைகலப்போ
ஏற்படின் மீண்டும் உயிர்பெறும்!

நீராடையை உடுத்தி
வாழ்ந்த மீன்களோ
மானம் போனதாய் மரணத்தை
உட்கொள்ளுகிறது!

இப்போது
ஏரியாய் நீயும்
மீன்களாய் உன் நினைவுகளும்.....

Wednesday, June 3, 2009

பிடிமானம்..



தூக்கி கொஞ்சப்படும்
குழந்தை நம்மீது சிறுநீர்
கழிக்காதவரை இறக்கிவிடுவதில்லை!


சிலகொஞ்சல்களோடு
திட்டிக்கொண்டே விடுவிக்கப்படும்
இந்த பிடிமானத்தில் எவ்வித
வெறுப்புகளும் இருப்பதில்லை!


கிளையொடிந்து கீழ்விழும்
சிறுவனின் கை தரைவரும் வரை
கிளையை விடுவதில்லை!


அதிபயத்தோடு
முனகிக்கொண்டே விடுவிக்கப்படும்
இந்த பிடிமானத்தில் எவ்வித
வெறுப்புகளும் இல்லை!


இப்படியாகவே
சில உறவுகளின் மீதான பிடிமானமும்!