CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, October 1, 2010

நிலவுகள் அழும் இரவுகள்





01.

முன்னொருஇரவில் பச்சைநிற ஒளிகொண்ட
விட்டில்பூச்சியாய் அறிமுகமானாய்

பின்னொரு இரவில்
என் கைகளுக்கடங்காமல் வளர்ந்து
வெண்ணிற சிறகுகொண்ட தேவதையாய் சிரித்து
வாழ்தல் குறித்தும்
அதன் அவசியம் குறித்தும்
பேசிக்கொண்டே என்னையும் உன்னோடு
பறக்கச்செய்திருந்தாய்

ஒருபனிமலையின் குளிர்தாங்கா இரவில்
உன் உள்ளங்கைகளுக்குள்ளடங்கி
கண்மூடிக்கிடக்கையில்
உன் நகங்கள் வளரத்தொடங்கி
கண்களில் சிவப்பின் வெறியேறி
வழிந்தவெப்பத்தில் கண் திறந்துப்பார்க்கையில்
நீ மாறியிருந்தாய்
நான் அறிந்திராத மிருகமொன்றினைப்போல...


02.
உன்னுடனான இரவுகளிலும்
நீயற்ற இந்த இரவுகளிலும்
இரவுகளைப்போல
நிலவுகளும் மாறிக்கொண்டிருந்தன.
வடிவத்திலும்
வெளிச்சத்திலும்....

03.

அன்று
சிரித்திருந்த நிலவு
அழுதுலர்ந்து
ஒரு புள்ளியுமில்லாமல் மறையும் போது
கூடவே
மறைந்துபோகலாம்
நானும் உன் நினைவுகளும்..