CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 28, 2010

சாத்தானுக்கு விற்கப்பட்ட தேவதையின் மொழி

துடுப்புகளில்லாது திசையறியாது சமுத்திரத்தை குடித்துக்கொண்டு திரிந்த படகினை போலிருந்த எனக்கு கலங்கரைவிளக்கத்தின் மீது நின்று கொண்டு எனக்கான என் வாழ்க்கைக்கான திசையிதுவென அழைத்தாய்.
வெண்ணிற சிறகுகளோடு பறந்து வந்த நீ பேசிய மொழிகள் தான் எத்தனை இன்பமானது.உனது ஆசைகள்
என்று நீ சொல்லிய ஒவ்வொன்றும் எத்தனை அற்புதமானது.ஒரு பின்னிரவின் தனிமையில் மெல்லிசைதரும்
மென்மையும் இன்பத்தையும் உனது மொழிகள் தந்ததே எனக்கு..

தேவதை பூமியிலும் வாழும்.அதைவிட என்னுடன் வாழ்கிறது வாழக்கற்றுத்தருகிறது என்று நினைத்துப்பூரித்துப்போயிருந்த தருணத்தில் இந்த இரவுக்குள்ளும் உனக்குள்ளும் இத்தனை கொடூர வன்மங்களை கட்டவிழ்த்துவிட்டது யார்?.தேவதை உனது மொழிகள் எதற்காக யாருக்காக சாத்தானுக்கு விற்கப்பட்டது அல்லது விற்றுவிட்டாய்..புன்னகையால் என்னை சாய்த்துப்போட்டவள் இப்போது அலறுகிறாய் கூரியப்பற்களோடு என் குரல்வளை குருதியின் வாசம் தேடி..

யாருமே வாழமுடியாத வாழ்க்கையை நாம் வாழவேண்டுமென்று நீ முன் சொன்னபோது உன் பார்வையிலிருந்த எதிர்ப்பார்ப்புகள் ஏக்கங்கள் எல்லாம் இப்போது துளிகூட இல்லாமல் போயிருக்கிறது.ஒரு கொடிய சர்ப்பத்தின் பார்வையிலிருக்கும் வன்மம் தலைதூக்கி இருக்கிறது. என் கண்ணீரையும் செந்நீரையும் ருசிக்கவேண்டி நீள்கிறது உனது நாக்கு. எனக்கான தேவதை சிறகுகள் தீப்பிடித்து எரிகிறது..இப்போதும் என்னை அணைத்துக்கொள்கிறாய். வாழவேண்டி அல்ல உன் வெப்பத்தில் என்னை சாம்பலாக்கவேண்டி..

எப்படி இத்தனை வன்மமும் குரூரமும் குருதியின் மீதான இச்சையும் கடைசியில் மரணமும் தருமளவுக்கு சாத்தானின் மொழியாய் மாறிப்போயிருக்குமென சிந்த்தித்துக்கொண்டிருக்கிறேன்

.என் இரவுகளின் தூக்கத்தையும்
தின்று தின்று சிரிக்கிறது உன் அலறல்கள்,

நெஞ்சணைத்து தாலாட்டிதூங்கவைப்பேன் என்று சொன்னவள் இன்று முட்கள் நிறைந்த ஒரு நெருப்புத்தொட்டிலில் போட்டு தாலாட்டுப்பாடுகிறேனென்று கத்துகிறாய்.நீ பாடுவது மரணத்திற்கு பின்னான ஒப்பாரி ராகமென்று கூட தெரியாத அளவுக்கு வன்மத்தில் ஊறித்திளைத்திருக்கிறாய். நீ ஆசையாய் பாடுகிறாய் இல்லை இல்லை மரணவெறிப்பிடித்து பாடுகிறாய்.. நான் மரணத்தை சம்பவிக்க தொடங்கிவிட்டேன்..
வெகுவிரைவில் நமக்குள் நடந்த சம்பவங்களை மரணத்திற்குள் ஆழ்த்திவிட்டு மீண்டும் நீ தேவதை ஒப்பனையோடு புன்னகைக்கலாம் பற்களில் ஒட்டியிருக்கும் குருதியை துடைத்துவிட்டு......

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: