CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, July 25, 2008

செல்லப்பாண்டி கவிதைகள்...

ஆனாலும் உன‌க்கு
கெட்ட‌ எண்ண‌ங்க‌ள்
இவ்வ‌ள‌வு கூடாது!
என் உற‌க்க‌த்தைகூட‌வா
க‌வர்ந்து கொள்ள‌ வேண்டும்?..

என்றெல்லாம் என் நாட்குறிப்பில்
சோக‌ம் இழையோடியுல்ல‌தோ
அன்றெல்லாம்என்னிட‌ம்
நீ முக‌ம‌ல‌ர்ந்திருக்க‌மாட்டாய்
என்று அர்த்த‌ம்!

உனைப் பார்க்க‌ முடிவ‌தென்ன‌வோ
ஒரு சில‌ நிமிட‌ங்கள்தான் என்றாலும்
அது போதும் என் மீத‌முள்ள‌
நேர‌ங்க‌ளையும் ஆக்கிர‌மிக்க!..

புன்முறுவ‌லோடு நீ பூக்கும்
சிறு புன்ன‌கைகூட‌
ஒருவ‌கை போதை‌தான்..
அதிலிருந்து மீண்டெழுவ‌த‌ற்கு
என‌க்கு ப‌ல‌ ம‌ணி நேர‌மாகிற‌து!

சிறு பொய் கூறினேன் என்ப‌த‌ற்காக‌
என்மீது கொப‌ம் கொள்ள‌தே!
இல்லாவிடில் உனை சமாதான‌ப்ப‌டுத்த‌
ஆயிர‌ம் பொய்க‌ளை கூறி விடுவேன்..

உன‌க்கெதிரான‌ என் தீர்மான‌ங்க‌ள்
அனைத்தும் ஒரே நொடியில்
உடைந்து போய்விடுகின்ற‌ன‌..
உன் இத‌ழ்க‌ள் என‌க்காக‌
ஒரு துளி புன்ன‌கையை
உதிர்த்து செல்லும் பொழுது!

உன்மீது கொண்டுள்ள‌ என் அன்பு
என்ன‌வ‌கை என்று தெரிவ‌த‌ற்குள்
அடுத்த‌ க‌ட்ட‌த்திற்கு தாவிவிடுகிற‌து
என் அசுர‌ ம‌ன‌து!

சாத்திய‌மில்லை என்று தெரிந்தாலும்
எல்லாவ‌ற்றையும் என‌க்கு
சாத‌கமாக‌வே எடுத்துகொள்கின்றேன்..
உன்னிட‌மிருந்து ம‌ட்டும்!

என‌க்கே புரிவ‌தில்லை?
எப்ப‌டித்தான் திரும்ப‌ திரும்ப‌
உன்னிட‌மே ஏமாறுகிறேன் என்று!

உன்னை த‌விர்க்க‌ நினைத்து
த‌விர்க்க‌ நினைத்துமுன்பைவிட‌
அதிக‌மாக‌வேநெருங்கி விடுகிறேன்!

என‌க்கு தெரிந்து
அன்பு செய்வ‌தைவெறுக்கும் ஜீவி
உல‌க‌த்தில் நீ ம‌ட்டும்தான்!

சொன்னால் ந‌ம்ப‌மாட்டாய்!
நான் கூறும் பொய்க‌ளைம‌ட்டுமே
நீ ர‌சிக்கின்றாய்!

உன்னிட‌ம் ம‌ட்டுமேபொய்க‌ளை
அதிக‌மாக‌ எடுத்துகொள்கின்றேன்!
என் பொய்க‌ள் ம‌ட்டுமேஉனை
அதிகமாக‌ க‌வ‌ர்கிற‌தென்ப‌தால்!

நீ என்மேல்
எப்போதும் காட்டும் வெறுப்பைவிட,
எப்போதாவ‌து காட்டும் அன்புதான்
என் ம‌ன‌தில்ஆழமாக‌ ப‌திந்து விடுகிற‌து!

உண்மையில் என‌க்கான
க‌விதை சுர‌ங்க‌ம் நீதான்!
வ‌டிவ‌மைக்கும் ப‌ணிம‌ட்டும்
தான் என்னுடைய‌து..

நீ என்மேல் பொழிவ‌து
விஷ அ(ன்)ம்புக‌ள் என்று
என‌க்கு தெரிய‌ப்போவ‌தில்லை..
நான் சாகும் வ‌ரையில்!

என் முன்னால் யாரிட‌மும்
அதிக‌மாக‌ அன்பு காட்டாதே!
இல்லாவிடில் அவ‌ர்க‌ள்
என்னால் ச‌பிக்க‌ப்ப‌டுவார்க‌ள்!

இது தாண்டா போலிஸ்..

கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு

கருப்பொருள் அறிந்தோ
அறியாமலோ உறுதிமொழி
எடுப்போம் நாங்கள்..

காந்தி ஜெயந்தியாகட்டும்
சுதந்திர தினமாகட்டும்
மது அருந்தலாம்.
கைக்காசு தீர்ந்தால்
கடமை எங்கள் கண்முன்
வந்து நிற்கும்..

லைசன்ஸ் இருந்தாலும் சரி
இல்லையென்றாலும் சரி
எங்களுக்கு கைக்காசு தீரும் போது
நீங்கள் தலைகவசம் அணியாவிட்டாலும்
கடமை கண்முன் நிற்கும்..

கொலைகள் நடக்கட்டும்
கொள்ளைகள் நடக்கட்டும்
கேள்விகள் கேட்கபட்டால் மட்டுமே
கட்டுப்பாடு எங்களுக்குள்
விட்டுகொடுக்காமல் வந்துவிடும்..

அப்பப்பா..எத்துணை
அருமையானது எங்கள்காவலின்
கண்ணியமான சேவை..

அரசியல்வாதி ஒருவனின்
வருகைக்காக காலையிலிருந்து
இரவு வரை வெயிலடித்தாலும்
மழைவந்தாலும் பொம்மை போல
நின்றிருப்பீர்கள்.

இந்த பிழைப்பு பிழைப்பதற்கு
எங்களோடு வரிசையில் நின்று
ரேஷனில் அரிசி வாங்கி
தின்று வாழலாம்....

Thursday, July 24, 2008

அப்படியாப்பா??? இது கவிதைன்னு சொல்ல முடியாது

இந்தியா சுதந்திரம் அடைந்து
விட்டது!!!

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே"

காந்தி சுட்டு கொல்லபட்டார்!!

"ஐயகோ என்னே கொடுமை"

அரசியலில் முழுக்க ஊழல்

ஆரம்பிச்சுட்டாங்களா??

அதிகாரிகளும் ஊழல் பண்றாங்க

அடப்பாவிங்களா???

நான்கு வயது சிறுமி கற்பழிப்பு

அப்படியா?

அண்ணன் தம்பி சண்டையில்
அரிவாள் வெட்டு அண்ணனுக்கு

அப்படியா?

அடுத்தவன் பொண்டாட்டியோடு
கள்ளக்காதல்..
கணவனின் ஆவேசம்
மனைவி,காதலன் இரட்டை கொலை

அப்படியா?

அணு ஒப்பந்தம் ஆட்சி கவிழ்ப்பாகலாம்
நம்பிக்கை ஓட்டெடுப்பு.
மத்தியில் எம்பிக்களிடம்
பணபுழக்கம்

அப்படியாப்பா?

அசோக்நகர்,வடபழனியில்
தொடர்கொலை-சைகோ யார்?
தேடுதலில் தீவிரமான போலிஸ்.

அப்படியாப்பா?

இந்துமதம் எங்கே போகிறது?
கேள்வியை தலைப்பாக்கி
கட்டுரைதொடர்..

அப்படியாப்பா?

இஸ்லாம் சொல்வதொன்றும்
செய்வதொன்றும்

அப்படியாப்பா?

தாயையே மதிக்காத மகனாய்
இயேசு..இங்கே அவரையும்
வணங்க ஆட்களென ஆதங்கம்

அப்படியாப்பா?

என்னப்பா அப்படியாப்பா?

நீங்களும் தான் காலகாலமாக
நல்லது கெட்டதென செய்திகளாய்
என் காதுகிழிய சொல்கிறீர்கள்.

நல்லது நடந்தது சரி..

தீயவைக்கு முற்றுபுள்ளி வந்ததாகவே
தெரியவில்லை..

இப்படியே போனால் அப்படியாப்பா
"அடப்போங்கப்பா"

எனக்கூட மாறும்..
என் மேல் வருத்தப்படவேண்டாம்.

-இது வரை நான்..இதற்கு மேல் கவிஞர் ருத்ரா...

த‌ணிகைம‌லை மாம‌ணியே
முருகைய்யா.."===============ருத்ரா

ம‌துரை சோமு இன்று
இப்ப‌டித்தான் பாடியிருப்பார்.
பேனாவுக்கு ப‌தில்
ஒரு வேலாயுத‌த்தை வைத்து
கூர்மையாக‌ குத்தி குத்தி
எழுதியிருக்கிறீர்க‌ள்.

உங்க‌ள் "அப்ப‌டியாப்பா?.."
"செய்தீ" வ‌ரிக‌ளில்
அப்ப‌டியும் இல்லாம‌ல்
இப்ப‌டியும் இல்லாம‌ல்
"அலி"ப்பாக்க‌ள் எனும்
ஒருவ‌கை"க‌லிப்"பாக்க‌ள்
அல்ல‌வா எழுதியிருக்கிறீர்க‌ள
ஒரு புதிய‌ யாப்பில‌க்க‌ண‌த்தில்
த‌ர‌வு கொச்ச‌க‌ க‌லிப்பா என்று
இதை சொல்லிக்கொள்ள‌லாம்.

ம‌னித‌முக‌ங்க‌ள்
எத்த‌னை வ‌கையாய் பூத்திருக்கின்ற‌ன‌?
ஒரு நேர‌ம் ரோஜாப்பூ
ம‌று நேர‌ம் எருக்க‌ம்பூ
இன்னொரு நேர‌ம் அல்லிப்பூ.
அப்புற‌ம் பார்த்தால் க‌ள்ளிப்பூ.

இந்த‌ பூக்க‌ள் எல்லாம்
எப்ப‌டி கொலைவாள்க‌ளாய்
மாறின‌?
ம‌னித‌ ஆத்மா தின‌மும்
ப‌டுகொலை செய்ய‌ப்ப‌டுகிற‌து.

இந்த‌ சித்திர‌ங்க‌ளின்
க‌லைடோஸ்கோப் காட்சிக‌ளை
இல்லை இல்லை...
கொலைடோஸ்கோப் காட்சிக‌ளை
நீங்க‌ள் காட்டியிருப்ப‌து
ந‌ம்மை திடுக்கிட‌ வைக்கிற‌து.

க‌விதைக‌ள்
முகில்க‌ள் போலும் உல‌வ‌லாம்.
திகில்க‌ள் ஊட்டியும்
திக் விஜ‌ய‌ம் செய்ய‌லாம்.
உங்க‌ள் எழுத்துக்க‌ளின்
..இந்த‌"திக் திக் விஜ‌ய‌த்துக்கு"
நிச்ச‌ய‌ம் வெற்றி தான்.

வாழ்த்துக்க‌ளுட‌ன்ருத்ரா.

பிரியாத நினைவுகள்...

நிஜங்கள் முடிவுக்கு
வரும்போதெல்லாம்
நினைவுகள் ஆரம்பமாகிவிடுகிறது.
சுகமாகவும் சோகமாகவுமே!
சுகத்தில் மூழ்க நினைத்தால்
சோகம் ஆட்கொண்டு அணைக்கும்.

தனிமையின் அசைபோடுதலில்
வருடும் தென்றலில் கொஞ்சம்
நனைக்கும் மழையில் கொஞ்சம்
வெளிவிடும் புகையில் கொஞ்சமென
நினைவுகள் உதிர்த்துபோகும்..

மறக்கபடகூடாதவைகள் விடுபட்டும்
மறக்கதுடிப்பவைகள் விடுபடாமலும்
நின்று அடம்பிடிக்கும்..

நானும் அடம்பிடித்துகொண்டிருப்பேன்
தேங்காயை உருட்டும் நாயினை போல....

Wednesday, July 23, 2008

தேவையற்ற வெள்ளாமை..

கோபத்தின் வெள்ளாமையில்
பகைமை விளைச்சலில்
தலை கவிழ்தலோ
தவறுகளின் ஆரம்பமோ தான்
முடிவாயிருக்கும்..

ஆசுவாசத்தின் கழிவிறக்கம்
அமைதியின் பலனை
நினைவிருத்தினாலும்
பருவங்களில் வெள்ளாமையெடுக்கும்
கோபம் தணிந்ததாகவே இல்லை..

தேவையற்ற வெள்ளத்தின்
சேதங்கள் மட்டும் அடிக்கடி
அரங்கேறிகொண்டு தானிருக்கும்..

கோபத்துக்கான காரணங்களை
அர்த்தமாக்க முற்பட்டுகொண்டே.......

Monday, July 7, 2008

புணர்தலென்பது.. - சுயம்சொன்னால்பருவம் முதல் படையெடுக்கும்
காமத்தில் சிக்குண்ட உடல்கள்
எத்தனையோ..

உடல்களின் புணர்தல் பெருகியும்
காமத்தின் உணர்தல் மட்டும்
தணிந்ததாயில்லை..

மனைவியோடு புணர்தலென்பது
பிரேதத்தின் உணர்தலாகவே
இருக்குமெப்போதும்...

~ஆயினும்~

உடல்களின் தேடல்கள் மட்டும்
தொடர்ந்துகொண்டேயிருக்கும்..

கார்த்திகையில் நாயை போலவே..

Friday, July 4, 2008

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாணி அக்கா...


எனக்கு இணைய குழுமத்தில் அறிமுகமாகி இதுவரை முகமறியாத என் அன்புக்குரிய அக்கா ..இவர் எனக்கு அதிகம் பரிச்சயமில்லையெனினும் அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இவர் இரண்டு மூன்றுமுறை அரட்டையில் பேசியிருக்கிறார்.
இவர் தற்போது இந்தியாவின் கோவை பகுதியில் இருக்கிறார் எனதெரிந்ததும் அவரிடம் அலைப்பேசி எண்ணை கேட்டு மடல் அனுப்பியிருந்தேன்..என்னிடம் பேசுவதற்கு இந்த அன்பு அக்கா பூஸ்ட் குடித்து எனர்ஜியோடு நாளை என் அழைப்புக்காக காத்திருப்பதாகவும் திரும்ப மடல் வந்திருந்தது...
வேலை நிமித்தமாய் என்னால் அழைக்க முடியாமல் போய் மாலை நேரத்தில் அழைப்பு விடுத்தேன்..என் அழைப்பை ஏற்று ஹேய் சொல்டா என எனை அன்போடு அரவனைத்த முதல் வார்த்தை..
தொடர்ந்து என்னை பற்றி விசாரிக்க தொடங்கியது முதல் இருவரும் எந்தவொரு புதியவர் என்ற தயக்கமுமில்லாமல் பேசினோம்..
அமெரிக்காவில் தமிழ் பள்ளியில் பகுதிநேர ஆசிரியையாக அ ஆ இ இந்த மூன்றெழுத்து மட்டுமே கற்று தரும் ஆசிரியையாய் இருந்தாலும் அமெரிக்காவில் சென்று தமிழ்பணி செய்வதில் இவர் மீது எனக்கு இன்னும் பற்று அதிகமானது..
இருபது நிமிடம் பேசியிருப்போம் நாங்கள்..தான் ஒரு குழுமசந்திப்புக்கு செல்வதாகவும் பின்னர் அழைத்து பேசுவதாகவும் பை சொல்லி கொண்டே பத்து நிமிடம் பேசிகொண்டிருந்தோம்..இருவருக்குமே அழைப்பை துண்டிக்க மனமில்லை..
என்னக்கா பை என்று நாம் பேசிகொண்டிருக்கிறோம் என்று சொன்ன கணம் எனக்கு இதுவரை நானாக அழைப்பை துண்டித்ததில்லை என என் பழக்கத்தையே சொல்லி என் தோழி கதீஜா பேகமை நினைவுக்கு கொண்டுவந்துவிட்டார்..
பின்னர் தான் தெரிந்தது..இன்று அவருக்கு பிறந்தநாள் என்று..நேற்றே அவரிடம் அரட்டை பகுதியில் வாழ்த்து சொல்லிவிட்டு ட்ரீட் கேட்ட போது நான் இங்கே இருக்கும் அனாதை இல்லத்தில் தான் என்னுடைய பிறந்தநாளை கழிக்க விரும்புகிறேன்..நீயும் வரியாடா என்று என்னையும் அழைத்ததொரு நல்லுள்ளம்...
இது போல் இன்னும் பல பிறந்தநாள்கள் உங்கள் வாழ்க்கையில் வரவேண்டும்..நீங்கள் இதே போல எந்நாளும் சந்தோசமாய் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
என் அன்பு அக்கா...

Wednesday, July 2, 2008

நான் நானாக இருந்ததே இல்லை..சிலநேரம் அழுதிருப்பேன்
சிலநேரம் சிரித்திருப்பேன்
சிலநேரம் மௌனமாயிருந்திருப்பேன்
சிலநேரம் பேசிகொண்டேயிருந்திருப்பேன்
சிலநேரம் கோபங்களை கக்கியிருப்பேன்
சிலநேரம் வேசம் போட்டிருப்பேன்

தேவைக்கேற்றோ அல்லது
தேவைகளின்றியோ

எல்லா தருணங்களிலும்
எல்லா உணர்வுகளும் மாறி மாறி
என்னுள் பயணித்திருக்கும்.

நான்
நானாக இருந்ததே
இல்லை எப்போதுமே..

நான்
விரும்பியவைகள் நிலைக்காமலோ
விரும்பாதவைகள் நின்றுகொண்டோ
அடம்பிடித்துகொண்டிருக்கும்..

~ஆயினும்~

விருப்பங்களோ வெறுப்புகளோ
இல்லாமல் இருந்ததே இல்லை..

காற்றின் அசைவுக்கெல்லாம் இசையும் மரத்தினை போல....

Tuesday, July 1, 2008

நான் கடவுளாகி விட்டேன்..

திடீரென ஒரு மாற்றம்
என் தலையைசுற்றி
ஒளிவட்டம் சுற்றுகிறது..

எல்லா உணர்வுகளையும்
உள்ளடக்கி தேவையானதருணங்களில்
வெளிபடுத்த தயாராகிவிட்டேன்..

எதையும் மாற்றியமைக்க
முடிகிறது என்னால்- ஆம்
நான் இப்போது கடவுளாகிவிட்டேன்.

என் சக்தியை வெளிபடுத்த
தொடங்கிவிட்டேன் இப்போது..

இலேசான தென்றலாய் ஆரம்பிக்கிறது
எனது சக்தி..திடீரென மேலெழும்பி
குளிர்காற்றாய் மாறி தூரலில்
கீழறங்கும் போது அசுரமழையாய்
முடிகிறது..

யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை..
எல்லாரும் பரிசுத்தமாய் மாறினர்.
மனிதம் ஜனனமெடுக்கிறது..

ஆணும் பெண்ணும் சமத்துவமாய்
பேணுகிறார்கள் குடும்பத்தை..

கையேந்திய குழந்தைகளெல்லாம்
பூங்காவில் விளையாடிகொண்டிருக்க

அடுத்தவனின் மரணநாள் குறிப்பவன்
அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்தனுப்ப

அரசியலெங்கும் சந்தனம் வீசுகிறது
அவரவர் பணிமட்டுமே செய்கிறார்கள்

எங்கோ கால் இடறியவனை ஓடிப்போய்
எல்லாரும் தாங்கமுற்படுகிறார்கள்..

புற்றுநோயாய் புரையோடிய இலஞ்சம்
என்ற பேரையே மறந்துவிட்டிருக்கிறார்கள்..

போர்களோ பொருட்சேதமோ உயிர்சேதமோ
எதுவும் காணவில்லை பூமியில்..

தெரியாமல் இடித்துவிட்டால் கூட
பணிவோடே மன்னிப்புகள் கேட்பதும்

இதெற்கெல்லாமா என்று தட்டிகொடுத்து
சகஜமாய் மானுடர்கள் மகிழ்ச்சியாய்..

-ஆம்

மனிதம் தழைத்து விட்டது..
மனங்களில் மகிழ்ச்சி மட்டுமே..

கடவுளுக்கு நன்றி சொல்ல
கடமைபட்டுள்ளதாய் மக்கள்
குழுமிவிட்டார்கள்..

என்னை பூஜிப்பதாய் எனக்கு
படையல்கள் வந்த வண்ணம்..

யார் முதல் செய்வதென்று மீண்டும்
பிரிவினை வரவே என்னையும்
பிரிக்க வந்துவிட்டனர்..

ஐயகோ!!!
மீண்டும் ஏன் மானிடனே?
இதற்காகவா
நான் ஜனனமெடுத்தேன்?

கதறிகொண்டே ஓட
ஆரம்பிக்கிறேன்..

தரையில் விழுந்த என்னை
என்னவாயிற்று என அன்னை
தழுவுகிறாள்..

அப்பப்பா இதுவும்
கனவு தான்..

கனவில் கூட மனிதனின்
பிரிவினை முன்னிற்பதை
நொந்துகொண்டு

அலுவலகத்தில் மூழ்குகிறேன்..

தினசரியாய்
நடக்கும் நிகழ்வுகள்
நடந்துகொண்டே இருக்கின்றன!!

காற்றும் காலகாலமாய் வீசிகொண்டிருப்பதாய்.....

தனிமைகள்.
சில வெறுப்புகளுக்காகவோ
சில விருப்பங்களுக்காகவோ
சில தோல்விகளுக்காகவோ
சில தேடல்களுக்காகவோ
சில மகிழ்ச்சிக்காகவோ
சில நிம்மதிக்காகவோ
சில கொலைபிண்ணனிக்காகவோ
சில தற்கொலைகளுக்காகவோ

என வாழ்வின் ஒவ்வொரு
தருணங்களிலுமே

காரணங்களேயன்றியும்
காரணங்களை உட்நுழைத்தும்

தனிமைகணங்கள்
பின்னப்படுகின்றன..

சிலவற்றில் தீர்வுகள் கிடைத்தும்
பலவற்றில் தீர்வுகள் கிடைக்காவிடினும்

காரணங்களை உட்நுழைத்து
தனிமைபூக்கள் மலர்ந்துகொண்டே இருக்கும்..

கரையை நோக்கியே அலையின் தேடல் போல...