CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, October 22, 2009

ஆருத்ராவின் உலகம் - இசை


நரம்புகள்
இல்லாத வீணையும்
இசைக்கும்!
ஆருத்ராவின்
மழலைமொழி!!





Wednesday, October 21, 2009

பிரிவின் கரங்கள்.


*
உன்னில்
தொலைந்து போகவென்று
லயித்திருந்த பொழுதொன்றில்
சலனமில்லாமல்
நுழைந்துவிட்டது
பிரிவின் கரங்கள்..

*

மௌனங்களை
மட்டுமே
பேசும் கரங்களின்
தீண்டல்
தீயின் சுவையை
நாவெங்கும் தடவி
வார்த்தைகளை எரித்துவிடுகிறது..

*

மெல்லிசையின்
செவிகளை அடைத்துவிட்டு
யாருமற்ற
பாலையொன்றில்
இழுத்து செல்லும்
இந்த கரங்களின் அழுத்தம்
மரணவலியுடையதாய் இருக்கிறது!

*
நீ
எப்போதும் போலவே
அழகாய் சிரித்துக்கொண்டிருக்கிறாய்...

Monday, October 19, 2009

ஆருத்ராவின் உலகம் -ரௌத்ரம்..





வெடுக்கென
கையிலிருந்து பிடுங்கப்பட்ட
ஐஸ்கிரிமின்
குளிர்சுவையிலிருந்தே
எரியத்துவங்குகிறது
ஆருத்ராவின் ரௌத்ரம்..

Sunday, October 18, 2009

ஆருத்ராவின் உலகம் - ரசனை


அழுகையை
நிறுத்தவேண்டி நீளும்
அம்மாவின் விரல்காட்டும்
ஐந்தாம் திசையிலிருந்தே
பிறக்கிறது
ஆருத்ராவின் ரசனை

Thursday, October 15, 2009

பெண் சமைத்தான் பிரம்மன்



பூவிதழ்களை
குழைத்தெடுத்து
பூமகளிவள் மேனியென
மெல்தூரிகையால்
வர்ணம் கொண்டு தீட்டியே
அன்னத்தின் வர்ணத்தை
பற்களுக்கென
பறித்து கொடுத்து
அழகென இவளைமட்டுமே
அவன் படைத்துவிட்டான்!

மீன்விழிப்பார்வையிலே
மான் துள்ளல் போடுமென்
மனமதை
மயக்கும் புன்னகையால்
மட்டுறுத்தி விடுகிறாள்!

இவளை
வர்ணிக்கவே
வார்த்தைகளின்றி
வறண்டு போகிறதென்
செந்தமிழ்!

பெண்ணென
தேவதையை சமைத்துவிட்டான்
பிரம்மன்!

தேவதையை
பெண்ணென சமைக்கதுடிக்கிறதென்
கவிதைகள்!!!

Wednesday, October 14, 2009

ஆருத்ராவின் உலகம் - மீள்வினை


தவறி உடைத்த
பொம்மையின் பாகங்களை
ஒட்டவைக்கும்
ஆருத்ராவின் முயற்சியால்
நிழலில்
மீள்கிறது அதே உருவம்!

Monday, October 12, 2009

மதுவோடு கோப்பை



#
மிகப்பிடித்தமாயிருக்கிறது
காலிக்கோப்பைக்கு
மதுவை..
மதுவுக்கு
காலிக்கோப்பையை
இவையிரண்டையும்
எனக்கு..

#

கோப்பையின் புறத்தில்
சித்திரமென
வரையப்பட்ட கொடிகள்
மது ஊற்றிய பின்னரே
துளிர்க்க துவங்குகின்றன.

#

சிலநேரங்களில்
காக்டெயில் கலவை
பிடித்தமாயிருக்கிறது
கோப்பையின்
விளிம்பிலிருக்கும் வறட்சிக்கு

#

ஒரு நீண்ட
வறட்சியின் பின்னால்
அதிகமாய்
குடித்துவிடுகிறது
கோப்பை

#

அளவுமீறி
ஊற்றும்போது
சலனமில்லாமல்
வழியத்துவங்குகிறது
வார்த்தைகள்..

#

காலிக்கோப்பையின்
மௌனமெல்லாம்
மதுவைக்கண்டதும்
இசையென
இனிக்கிறது....

#

காலிக்கோப்பை
"மலடி"
நிரம்பியக்கோப்பை
"நிறைமாதகர்ப்பிணி"

குழறும் வார்த்தைகளே
குழந்தைகள்...

#

அடிக்கடி
அளவுதாண்டி விட்டு
கவிழ்ந்து கிட்டபதும்
கோப்பையின்
வாடிக்கை..

#

மதுவில்லாத
நேரத்தில்
விரிசல்களை
ஏற்படுத்திவிடுகிறது
வறட்சி

#

கோப்பை
திடம்
மது
திரவம்
போதை
வாயு???????

#

பல
இரவுகள்
கோப்பையின்
போதையில்தான்
உறக்கம்கொள்கின்றன..

#

நான்
எழுந்த பின்னரே
எழுகிறது
கோப்பை!

வெற்றிடத்தோடு!!