CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, December 23, 2009

ஒரே நாளின் இரண்டு இரவுகள்
1.
ஊர்சுற்றியது போதுமென
பூமியின் பார்வையிலிருந்து
புதைந்துகொண்டிருந்தது
சூரியன்..

வெள்ளொளி மறைய
மெல்ல மெல்ல கருக்கத்தொடங்கிய
அந்த அந்திமப்பயணத்தின்
குறுக்கில்
குருதிதோய்ந்த சதைப்பிண்டங்களாய்
சிதறிக்கிடந்தது
ஈருருளியொன்று...


யாருக்கோ
அல்லது
யார்யாருக்கோ
இருட்டத்தொடங்கியிருந்தது...


2.

உலகின்
அத்தனை சப்தங்களின்
செவிகளையும் அடைத்து
நிசப்தங்களாய் மாற்றிய
இரவொன்றில்
அடர்வனத்தில்
மெலிதாய் தொடங்கிய
தென்றலின் குளிர்ச்சியில்
சில பறவைகள் கீச்சிடுகின்றன!
நிலவைப்போர்த்தியிருந்த
மேகங்கள் சட்டென விலகியிருந்த
ரம்மியமான அந்த பொழுதில்
உனக்கென மட்டும்
தொடக்கமும் முடிவுமில்லாத
பூக்களை உதிர்க்கும் பாதையொன்றை
சமைத்துச்சிரிக்கிறது
என் கனவு...

Sunday, December 20, 2009

மிருகம் விழித்த இரவு...


நடுநிசித்தாண்டியும்
உறக்கத்தில் ஆழ்ந்து போகாத
என் விழிகள் வன்மங்களை
கட்டவிழ்த்துக்கொண்டு
தெருவிலிறங்கி
ஓடிக்கொண்டிக்கையில்
தூரத்திலொரு
உருவம் எவ்வித ஒப்பனைகளுமின்றி
என்னைப்பார்த்து சிரிக்கிறது!

ஏதோவொரு பயணத்தில்
தெரியாமல் இடித்துவிட்டு
உதட்டுப்புன்னகைக்கு பின்னால்
மன்னிப்பென்ற வார்த்தையை
உதிர்த்துவிட்டு போனவள் தான்
இவள்!

சிவப்பின் வெறியேறியிருந்த
என் கண்கள் நிர்வாணத்தை
உடுத்திக்கொண்டு அவளை
இருட்டின் போர்வைக்குள்
அழைத்துச்செல்கின்றது...

தன் வானத்தில் கால்பதித்து
தலைகீழாய் நடக்கும் என்னை
வெறுத்துக்கண்மூடிக்கொண்டது
தெருவிளக்கு...

Friday, December 18, 2009

தனித்த இரவொன்றின் கனவு....


அந்தக்கனவு
எனக்கு மிகப்பிடித்தமாய் இருக்கிறது!

ஒரு
குழந்தை என்னைப்பார்த்து
புன்னகைத்துக்கொண்டிருந்தது!

ஒரு
இருக்கையை விட்டுக்கொடுத்தற்காக
இயலாமையொன்று
நன்றி நவின்றது!

ஒரு
மற்றும்
இன்னொரு
குரல் காதல்மொழியை
பேசிக்கொண்டிருந்தன!

அதே
பேருந்தில் தான்
அவளென் அருகில்
நின்று புன்னகைத்தாள்!

அந்தக்கனவு
எனக்கு மிகப்பிடித்தமாய் இருக்கிறது!

Saturday, December 5, 2009
01.

நீ
எங்காவது
சந்தித்திருக்கலாம்
என்னைப்போல் ஒருவனை..

இப்போது
தான் பார்க்கிறேன்
உன்னைப்போல் உன்னை..

02.

ஒரு
மயிலிறகின் மென்மையைப்போல்
ஒரு
பூவின் வாசத்தைப்போல்
ஒரு
கனவு பலிப்பதைப்போல்
ஒரு
உயிர் ஜனனிப்பதைப்போல்

நீயும்
அதிசயமும்
அற்புதமும் நிறைந்தவளே!

03.

பாலைவனம்
ருசிக்கும்
மழையைப்போலவே
நீயும்
என்னுள் ஊறிப்போகிறாய்!

04.

குழந்தை
பாதங்களின் மென்மையை
உள்ளடக்கியே
உதைக்கிறது
உன் கோபங்கள்..
ரசிக்கத்தான் முடிகிறது;-)


05.

வலைவிரித்து
காத்திருக்கும் மீனவனாய்
உனக்கான சொற்களுக்காய்
காத்துக்கொண்டிருக்கிறேன்..

கிடைத்தால்
கண்டிப்பாய் என் காதல்
கவிதையாய்
வடிக்கப்படும்!

06.

நீ
எங்காவது
சந்தித்திருக்கலாம்
என்னைப்போல் ஒருவனை..

இப்போது
தான் பார்க்கிறேன்
உன்னைப்போல் உன்னை..

Thursday, December 3, 2009

நான்கு கவிதைகள்

1.
தனிமை
இரவின் உறக்கமற்றப்பொழுதுகள்
மதுவோடு புழங்குதல்
புகையோடு கைக்கோர்த்திருத்தல்
வறட்டுபுன்னகை உதிர்க்கும்
உதடுகள்
எல்லாம் தொலைந்துபோயிருக்கிறது
இரண்டாமவள் உருக்குலைந்து
மூன்றாமவள் உருப்பெற்றிருப்பதால்...


2.

எப்போதாவது
எதிர்படும் பழைய நண்பர்கள்
பழைய நட்போடே
தேநீர் அருந்த கூப்பிடும்போது
பழையன
புதுப்பிக்கப்படுகிறது..

3.

மொத்தமாய்
நனைந்து போன உடை
ஒரு கையில் சிகரெட்
ஒருகையில் தேநீர்

மழை இனிக்கிறது...

4.

அதிவேக
பைக் டிரைவிங்
பிடித்தமான எனக்கு
எப்போதாவது லிப்ட் கேட்கும்
சிறார்களோடான
மிதவேகமும்
பிடித்தமாயிருக்கிறது..

Thursday, October 22, 2009

ஆருத்ராவின் உலகம் - இசை


நரம்புகள்
இல்லாத வீணையும்
இசைக்கும்!
ஆருத்ராவின்
மழலைமொழி!!

Wednesday, October 21, 2009

பிரிவின் கரங்கள்.


*
உன்னில்
தொலைந்து போகவென்று
லயித்திருந்த பொழுதொன்றில்
சலனமில்லாமல்
நுழைந்துவிட்டது
பிரிவின் கரங்கள்..

*

மௌனங்களை
மட்டுமே
பேசும் கரங்களின்
தீண்டல்
தீயின் சுவையை
நாவெங்கும் தடவி
வார்த்தைகளை எரித்துவிடுகிறது..

*

மெல்லிசையின்
செவிகளை அடைத்துவிட்டு
யாருமற்ற
பாலையொன்றில்
இழுத்து செல்லும்
இந்த கரங்களின் அழுத்தம்
மரணவலியுடையதாய் இருக்கிறது!

*
நீ
எப்போதும் போலவே
அழகாய் சிரித்துக்கொண்டிருக்கிறாய்...

Monday, October 19, 2009

ஆருத்ராவின் உலகம் -ரௌத்ரம்..

வெடுக்கென
கையிலிருந்து பிடுங்கப்பட்ட
ஐஸ்கிரிமின்
குளிர்சுவையிலிருந்தே
எரியத்துவங்குகிறது
ஆருத்ராவின் ரௌத்ரம்..

Sunday, October 18, 2009

ஆருத்ராவின் உலகம் - ரசனை


அழுகையை
நிறுத்தவேண்டி நீளும்
அம்மாவின் விரல்காட்டும்
ஐந்தாம் திசையிலிருந்தே
பிறக்கிறது
ஆருத்ராவின் ரசனை

Thursday, October 15, 2009

பெண் சமைத்தான் பிரம்மன்பூவிதழ்களை
குழைத்தெடுத்து
பூமகளிவள் மேனியென
மெல்தூரிகையால்
வர்ணம் கொண்டு தீட்டியே
அன்னத்தின் வர்ணத்தை
பற்களுக்கென
பறித்து கொடுத்து
அழகென இவளைமட்டுமே
அவன் படைத்துவிட்டான்!

மீன்விழிப்பார்வையிலே
மான் துள்ளல் போடுமென்
மனமதை
மயக்கும் புன்னகையால்
மட்டுறுத்தி விடுகிறாள்!

இவளை
வர்ணிக்கவே
வார்த்தைகளின்றி
வறண்டு போகிறதென்
செந்தமிழ்!

பெண்ணென
தேவதையை சமைத்துவிட்டான்
பிரம்மன்!

தேவதையை
பெண்ணென சமைக்கதுடிக்கிறதென்
கவிதைகள்!!!

Wednesday, October 14, 2009

ஆருத்ராவின் உலகம் - மீள்வினை


தவறி உடைத்த
பொம்மையின் பாகங்களை
ஒட்டவைக்கும்
ஆருத்ராவின் முயற்சியால்
நிழலில்
மீள்கிறது அதே உருவம்!

Monday, October 12, 2009

மதுவோடு கோப்பை#
மிகப்பிடித்தமாயிருக்கிறது
காலிக்கோப்பைக்கு
மதுவை..
மதுவுக்கு
காலிக்கோப்பையை
இவையிரண்டையும்
எனக்கு..

#

கோப்பையின் புறத்தில்
சித்திரமென
வரையப்பட்ட கொடிகள்
மது ஊற்றிய பின்னரே
துளிர்க்க துவங்குகின்றன.

#

சிலநேரங்களில்
காக்டெயில் கலவை
பிடித்தமாயிருக்கிறது
கோப்பையின்
விளிம்பிலிருக்கும் வறட்சிக்கு

#

ஒரு நீண்ட
வறட்சியின் பின்னால்
அதிகமாய்
குடித்துவிடுகிறது
கோப்பை

#

அளவுமீறி
ஊற்றும்போது
சலனமில்லாமல்
வழியத்துவங்குகிறது
வார்த்தைகள்..

#

காலிக்கோப்பையின்
மௌனமெல்லாம்
மதுவைக்கண்டதும்
இசையென
இனிக்கிறது....

#

காலிக்கோப்பை
"மலடி"
நிரம்பியக்கோப்பை
"நிறைமாதகர்ப்பிணி"

குழறும் வார்த்தைகளே
குழந்தைகள்...

#

அடிக்கடி
அளவுதாண்டி விட்டு
கவிழ்ந்து கிட்டபதும்
கோப்பையின்
வாடிக்கை..

#

மதுவில்லாத
நேரத்தில்
விரிசல்களை
ஏற்படுத்திவிடுகிறது
வறட்சி

#

கோப்பை
திடம்
மது
திரவம்
போதை
வாயு???????

#

பல
இரவுகள்
கோப்பையின்
போதையில்தான்
உறக்கம்கொள்கின்றன..

#

நான்
எழுந்த பின்னரே
எழுகிறது
கோப்பை!

வெற்றிடத்தோடு!!

Tuesday, September 22, 2009

அழுதுலர்ந்த மலரொன்றின் மரணம் குறித்து....


மகிழ்ச்சியின் அத்தனையெல்லைகளையும்
கடந்து போயிது தன்னெல்லையென
மனங்கள் யாவற்றையும் வியப்பில்
ஆழ்த்தி விடுவதென்று வேர்களை
ஆழமாய் பரப்பிக்கொண்டு
தூரல்களிலிருந்து கனத்து போன
மழையனைத்திலும் நனைந்தவாறே
மெல்லமாய் பூக்கத்துவங்கியிருந்த
பூவொன்றின் வாசமானது
பூமியெங்கும் வீசத்தொடங்கியத்தருணத்தில்
நீ அந்த பூவினை கசக்கிவிட்டெறிந்திருக்கிறாய்!

உனக்கும் அவனுக்கும் மிகப்பிடித்தமான
அந்த பூவின் நிலைகண்டு
அவனுக்கு மட்டுமான வலியில்
ஜனனித்த உப்புநீரானது அவன்
மரணத்தின் மீது தெளிக்கப்போகும்
பன்னீர்த்துளிகளின் மாதிரிகளாய்
உணர்ந்தழுது உலர்ந்து போகலாம்
உன்னால் கொலைசெய்யப்பட்ட பூ..........

Wednesday, August 19, 2009

ரசிக்கவியலாத மழை....

காதலியுடன் உரையாடியவாறு மொட்டைமாடியிலேயே கவிழ்ந்துபோன தலையை தட்டி எழுப்பி அலுவலகம் கிளம்புடா நேரம் ஆயிடுச்சுன்னு அம்மா
சொல்லிமுடித்த நிமிடத்திலிருந்து சிறிதாய் ஆரம்பித்த தூரலில் நனைந்தவாறே அரைமணிநேரத்தில் அலுவலுக்கான வேடம் பூண்டு கிளம்பிவிட்டேன்!

அடுத்த சிலநொடிகளில் தாமதமாவது கூட தெரியாமல் தூங்குகிறாயே என்று வானம் கொஞ்சம் வேகமாய் தான் கொட்டத்தொடங்கியது! ஏற்கனவே நனைந்து காய்ந்திராத என் முடிகள் மேலும் நனையத்தொடங்கியதில் காதலியின் நேற்றைய முத்தத்தினை கதகதப்புக்காய் கடன் வாங்கிக்கொண்டிருந்தது நினைவுகள்!

மெல்லிய புன்னகையானது எனக்கு மட்டும் உரித்தானதாய் நினைத்துக்கொண்டு புன்னகைத்துக்கொண்டே தொடர்ந்த ஈருருளி பயணத்திற்கு விளக்கேதும் தேவையில்லை என்பதாய் வெளிறத்தொடங்கியது வானம்!

அவளும் இந்நேரம் விழித்திருப்பாள் ..அதனால் தான் எனக்கு வெளிச்சம் வந்துவிட்டதாய் அல்பமாய் சிந்தித்துக்கொண்டிருந்த மனதில் ஏனோ அவளின் முகத்தை நேரில் காணமுடியாத ஒரு வருத்தமும் சிலமழைத்துளிகளின் மூலமாய் வந்து ஒட்டிக்கொண்டிருக்கலாம்!

அவைகளை துடைத்தெறியும் எண்ணமேதுமின்றி நண்பனிடம் ஈருருளியை கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறி யாருமற்ற பின்புற இருக்கையில் உட்கார்ந்துக்கொண்டு ஜன்னலோரத்தில் ஒழுகிக்கொண்டிருந்த சில மழைத்துளிகளை தொட்டு தொட்டு கீழ் தள்ளி ரசித்துக்கொண்டிருந்தேன்!

சிலமைல் தூரத்திற்கு அப்பால் ஒரு பேருந்துநிறுத்தத்தின் அருகில் ஒரு பெண்மனியின் அழுக்குச்சேலையை போர்வையாக்கி என்னசெய்வதென்று புரியாமல் இங்குமங்குமாய் விழிந்த்துக்கொண்டிருந்தது அவளின் காலுக்கு கீழ் நான்கு கண்கள் ..மொத்தமாய் நனைந்துபோன கற்றை கற்றையான அந்த ஒட்டிய முடிகள் ஏதோ ஒரு விளம்பரத்திற்கு வரும் நாயகனின் தலையை ஒத்திருந்தது!

மெல்லமாய் தலைமுடியிலிருந்து வழியத்தொடங்கிய மழைத்துளிகளோடு
கலந்து கொண்டிருந்த ஆறுகண்களின் உப்புநீரை பார்த்து கதறத்தொடங்கிய பேருந்து நகர்ந்தும் அங்கேயே நகராமல் நின்று கொண்டிருந்த மனமானது
அதுவரை சன்னலோடு விளையாடிக்கொண்டிருந்த விரல்களை மெல்லமாய்
உள்ளிழுத்துக்கொண்டு அமைதியானது!

மதமெனும் பெயரில் புனையப்பட்ட கற்சிலைகள் அல்லாததொரு எனக்கான கடவுளொன்று இருப்பதாய் இன்று வரை நான் வணங்கிக்கொண்டிருக்கும் ஒரு உருவமற்ற கடவுளிடம் இவர்களுக்காய் வேண்டத்தொடங்கினேன்!

"இறைவா ! இந்த மழையொன்றும் அவ்வளவாய் ரசிக்கத்தகுந்ததாய் இல்லை"

Tuesday, August 18, 2009
*
உன்
இமைகள் திறப்பதனாலேயே
என்
பொழுதுகள் விடிகிறது!

*
உன்
இதழ்கள் திறப்பதனாலேயே
என்
மொழிகள் பிறக்கிறது!

*
இரவும்
பகலும்
உன் இமைகளால் நிர்ணயிக்கப்படுகிறது!

மொழியும்
மௌனமும்
உன் இதழ்களால் உருவாக்கப்படுகிறது!

*
நீ
எனக்கு கொடுத்த
முத்தத்தின் ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளவே
சூரியனும் தன் கதிர்களை
நீட்டியிருக்கலாம்!

ஓசோனின்
ஓட்டைக்கு உன் முத்தமும்
காரணம் தான்!

*
என்
உயிருக்குள் புதைக்கப்பட்ட
அந்த முதல் முத்தத்தினை
எதாலும் தொடமுடியாத படி
ஒளித்துவைத்திருக்கிறது காதல்!

*
அந்த
முத்தத்தின் இனிமையை
மாதிரியாய் கொண்டே என்னால்
பலமுத்தங்கள் தரமுடிகிறது!

*
உன்
இதழ்களிலிருந்து
வருபவை போலில்லை என்று
திட்டி தீர்க்கிறது
என் முத்தம்!

*
ஒரு
முறை உன்னிதழிலிருந்து
என்னிதழுக்கு இனிமையை
ஒட்டிக்கொள்ளவா?

*
"ச்சீ போடா"
என்று மெல்லமாய் தலைத்தூக்கி
விழிமூடி கிடக்கையில்
சட்டென திருடிக்கொள்கிறது
என்னிதழ்கள்
உன் இனிமையை!

*
"இவ்ளோ தானா" என்று
நீ உதட்டை பிதுக்கும் போது
ஒரு சில முத்தங்களை
காற்று திருடிக்கொண்டிருக்கலாம்!

*
காற்றோடு
மல்லுக்கட்டி நானே
ஜெயித்துவிடுகிறேன்!
இடைவெளியில்லாமல்
இதழ் பதித்தவாறு........

*
நம்
இருவரின் முத்தத்தையும்
மூச்சிலிருந்து உள்வாங்கி
வீசத்தொடங்கியதால் தான்
காற்றின் பெயர் தென்றல்..

*
நீ
தரும் முத்தங்கள்
தன்னை விட இதமாய் இருக்கிறதென்று
பொறாமையில் வேகமாய்
வீசுவதனால் தான்
தென்றலின் பெயர் புயல்...

*
உலகுக்கே
உயிரூட்டும் காற்றுக்கு
பலப்பரிமாணங்களை தரும்
நம் காதல் கடவுள்!*

Sunday, July 19, 2009

நேசம் முறிந்த பகலுக்கான இரவொன்றில்...
எதிர்வீட்டுக்காரனின் வாயால்
உதைபட திராணியற்று பண்பலையின்
தொண்டையை அறுத்துவிட்டு
வறண்டுகிடக்கும் வெறும்குடலினை
மல்லாக்கவோ
குப்புறப்படுக்கவைத்தோ
ஒப்பாரி வைத்துச்சென்றது சிகரெட்...
இரைச்சல்களூடான யாருமற்ற
நிசப்தத்தில் நாளைக்கு போதையில்
ஆழ்த்திவிடுவதாய் ஆறுதல் சொல்லிவிட்டு
அறையின் மூலையில் கிடந்தது
கோபமாய் வீசியெறியப்பட்ட சட்டைப்பை...

நாளையோ அதற்கடுத்தநாளோ
ஏதாவதொரு கொலையை அல்லது
தற்கொலையை செய்துமுடிக்குமாறு
கட்டளையிட்டவாறு விசும்புகிறது மனது...
எந்தக்காரணங்களுமின்றி
எனை சல்லடையாக்கிய அவளின்
வார்த்தைகளின் தாக்கம் குறைவதாயில்லை


Wednesday, July 15, 2009

என் இரக்கத்திற்குரிய ஒரே கடவுளுக்கு!


பொழுதுபோக்கிற்காகவோ
பிழைப்பு நடத்துவதற்காகவே
என் பாதங்களில் நசுங்கி மடியும்
சிற்றுயிரிலிருந்து என் கண்களுக்கு
எட்டாத கிரகங்கள் என எல்லாமும்
படைத்துவிட்டு எங்கேயோ போய்
முகம் மறைத்துக்கொண்டு இருக்கிறாய்!

நீ எனக்கு படைத்த புலன்களை
வரைந்துவிட்டு உன்னை யாம் படைத்து
உன்னிலிருந்தே ஆரம்பித்தோம் எம்மில் பிரிவுதனை!

மதமென்னும் வாளெடுத்துக்கொண்டு
வெட்டி வெட்டி பிரித்தோம்!
உயிர்களை மட்டுமல்ல
இனம் அதற்கொரு மொழி என்று
பலப்பல இத்யாதிகளாய் பிரிந்தோம்!

நீ இயற்கையாய் தரும் மரணங்களையும்
தாண்டி நாமே செயற்கையாய் தருகிறோம்
எமக்கு பிடிக்காதவனுக்கோ
அல்லது பிடிக்கொடுக்காதவனுக்கோ!


இது எல்லாவற்றையும் நீ பார்த்துகொண்டிருப்பதாய்
நாம் வைத்த பெயர்களோடு எம்மவர்களே
உன்பெயரில் அருள்வாக்கு தந்துகொண்டிருக்கிறார்கள்!

என் காதலியின் அழிச்சாட்சியத்தில்
தொலைந்துபோன என் காதலின் முடிவிலிருந்து
நீ இல்லவே இல்லை என்று வாதிட்டுகொண்டிருந்த
எனக்கும் ஏனோ உன் மேல் இரக்கம்
வரத்தொடங்கியிருக்கிறது இப்போதெல்லாம்!

ஆம்
என் இரக்கத்திற்குரிய கடவுளே!

உன்னை மையப்படுத்தியே சுழலவேண்டிய
உலகம்
உன்மேல் பழிசுமத்தியே சுழன்றுகொண்டு
இருக்கிறது!

ஒருவேளை உன் கண்கள் குருடாயிருந்தாலும்
நான் கண்தானம் செய்துவிட்டு இறந்துபோகிறேன்!

எடுத்துப்பொருத்திக்கொண்டு
இங்கு வந்துதான் பார்த்துவிட்டுப்போயேன்
உன் படைப்பின் அவலத்தை!

Friday, July 10, 2009

தனிமையில் உன்னுடன்....


நெரிசல்களோடான
என் பயணத்தில் எனை ஆட்கொண்ட
தனிமையின் நினைவில்
ஏதோ ஒரு பிரதேசத்தில்
கைக்கோர்த்தபடியே நடந்துகொண்டிருந்தோம்!
ஒருகையில் உன் விரல்களை
பின்னிக்கொண்டு
ஒரு கையில் செவ்வானத்தை
இழுக்கமுற்படும் என் மௌனங்களின்
சப்தம் யாருக்குமே கேட்டிருக்கவாய்ப்பில்லை!
உன்னை உரசியபடியே
அதோ தூரத்தில் பறக்கும் அவ்விரு
பறவைகளின் நேசத்தையும்
உனையே சுழலும் என் காதலையும்
என்னுடன் பயணிப்பவர்களுக்கோ
உனக்கோ தெரிந்திருக்கவாய்ப்பில்லை!
ஏனோ உனக்கு தெரியப்படுத்தவும்
எனக்கு தெரியவில்லை!

Friday, June 12, 2009

தேவதையானவள்:02
உன் சொல்லுக்கு
கட்டுப்பட்டவாறே விழிமூடுகிறேன்
இனியகனவு காண..

எந்தவித அபிமானமும்
இல்லாமல் மீண்டும் வனத்தினுள்
சென்று இரைதேட தொடங்கியது
என் கவிதை...

அதே
முகம் தெரியா
இறகுகளற்ற தேவதை உருவம்
வந்து செல்கையில்

அலைபேசி
சிணுங்குகிறது சிந்துபைரவி
ராகத்தோடு ..


"என்ன தேவதைகனவில் வந்தாளா"
என்ற கேள்வியுடன்
மீண்டும் உன் குறுந்தகவல்....

Thursday, June 11, 2009

சிவா மனசுல பிரியா.....

டேய் சிவா எந்திரிடா,டைம் ஆச்சு பொண்ணுவீட்ல 10 மணிக்கெல்லாம் வரேன்னு சொல்லியிருக்கோம்" பரப்பரப்பாய் கிளம்பிகொண்டிருந்தாள் சிவாவோட அம்மா..

அட போம்மா ...பொறுமையா போகலாம்,வேணாம்னு சொல்லப்போறேன் அதுக்கு போய்" முனகிகொண்ட சிவாவின் வார்த்தைகளுக்கு

என்னடா நீ தான கட்டினா பிரியாங்கற பேருள்ள பொண்ணை தான் கட்டுவேன்னு அடம்பிடிச்ச" எதிரம்பு
தொடுத்துவிட்டு

" ஏய் கீதா எங்கடி இங்க வச்சிருந்த பச்சை வளையலை காணோம்னு கேட்டுகிட்டே தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள் அம்மா..

ஏண்டா சிவாவுக்கு பிடிக்கலைன்னு யோசிக்கறீங்களா..வாங்க சிவாவை பத்தி ஒரு சின்ன அறிமுகம் பார்ப்போம்

" சிவா ஒரு லவ் பெயிலியர்..அதிலிருந்து கவிதை கதைன்னு ஆரம்பிச்சு குடிச்சு கூத்தடிச்சு எல்லாகெட்ட பழக்கமும் வச்சுட்டு சுத்திட்டு இருந்தவன்..27 வயசாகியும் பிரியாங்கற பேர் தவிர வேற எதுவும் பிடிக்காம கல்யாணம் பண்ணிக்காம இருந்தவன்..போன வருசம் தாங்க பேருந்தில் அம்முன்னு ஒரு பொண்ணை பாத்து டாவடிக்க ஆரம்பிச்சான்..அந்த பொண்ணும் லவ் பண்ணுது.ஆனா ரெண்டுபேரும் சொல்லமுடியாம தவிச்சுட்டிருக்காங்க."

இப்படியிருக்க சிவா என்ன பண்ணுவான் பாவம்..

போய் பிடிக்கலைன்னு சொல்லிட்டு வந்துடலாம்னு சிவாவும் அயர்ன் பண்ணாத சட்டைய மாட்டிகிட்டு நல்லா எண்ணைய தலையில வச்சுகிட்டு கிளம்பிட்டான்..

போனவனுக்கு பிரியாவீட்ல ஒரு பெரிய அதிர்ச்சி

".ஹே அம்மு நீ எங்க இங்க" சிவா

" என் வீடு தான் இது..இன்னைக்கு என்னை பொண்ணுபார்க்க வராங்கப்பா" அம்மு

" அட வாங்க வாங்க ,,என்று புன்னகையுடன் வரவேற்றவாறு
செம்பகம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க தண்ணி எடுத்துட்டு வா" என்றார் அம்முவின் அப்பா..

அம்முவும் சிவாவும் புரியாமல் திகைக்க

" என்ன பிரியா மாப்பிள்ளையை முன்னாடியே தெரியுமா" அம்முவோட அப்பா..

சிவாவுக்கு தலையே வெடிச்சிடும் போலிருந்தது.

".உங்க பேர் அம்முன்னு தானே பஸ்ல உங்க பிரண்ட்ஸ் எல்லாம் கூப்பிடுவாங்க.."

"ஆமா அது செல்லபேர்.."

அப்போ நீங்க தான் பிரியாவா"

ஆமாங்க"

நீங்க தான் பிரியான்னு தெரியாம இந்த சம்மந்தம் பிடிக்கலைன்னு சொல்லிட்டு போகதான் வந்தேன்"

நானும் தான் பிடிக்காம இருக்கறதுக்காக நகை மேக்கப்னு எதுவும் போடாம இருக்கேன்"

நீங்க யாரையாச்சும் லவ் பண்றீங்களா"


நீங்களும் யாரையாச்சும் லவ் பண்றீங்களா"

நீங்க சொல்லுங்க " சிவாவும் பிரியாவும் கோரஸாக

ஆமாங்க" திரும்பவும் கோரஸ்..

யாரு" அதே கோரஸ்..

நீங்க தான்" அட ஒன்னாவே கோரஸ் படிச்சு ரெண்டு பேருக்குள்ளும் வெட்கம் வந்துதொலைக்க

சிவா வானத்தில் பறக்க ஆரம்பிச்சான்..

சிரித்துகொண்டே பிரியா போய் அலங்காரமெல்லாம் பண்ணிகிட்டு வெட்கத்தோடு காபி தட்டை எடுத்துட்டு வந்தாள்..

காபி குடிச்சுட்டு கல்யாணத்துக்கு பூரணசம்மதம்..பொண்ணை நீங்க இப்படியே எங்க கூட அனுப்பிவெச்சாலும் பரவால்லன்னு சிவா சொல்லி முடிக்கையில்மயங்கிவிழுந்தான்..

எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உடனே அவனை அருகிலிருந்த பெரிய மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்..

ஏதேதோ டெஸ்ட் எடுத்து முடித்து வந்த டாக்டர் சொன்னது இன்னும் பெரிய அதிர்ச்சி..

" அவருக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கமும் குடிக்கிற பழக்கமும் இருக்கா" டாக்டர்

" ஆமாம் டாக்டர் " சிவாவோட அம்மா

"குடிச்சு குடிச்சே குடல் வெந்து கேன்சர் வேற அபெக்ட் ஆயிருக்கு.பைனல் ஸ்டேஜ்" டாக்டர்

" டாக்டர் என்ன சொல்றீங்க" ன்னு அலறினாள் சிவாவின் அம்மா..

இப்போ டேரக்டா பிரெயின வேற அபெக்ட் பண்ணிட்டதால இன்னும் ஒருநாளோ ரெண்டு நாளோதான் உயிரோட இருப்பார்னு

டாக்டர் சொல்லிமுடிக்கையில் சிவா கண்விழித்துகேட்டுகொண்டிருந்தான்..

கண்ணீரோடு

டாக்டர் என்னை எப்படியாவது காப்பாத்துங்க நான் இந்த பழக்கத்தையெல்லாம் நான் அம்முவை பாத்ததிலிருந்து விட்டுட்டேன்..அவளோட வாழனும்...என்னை காப்பாத்துங்க"ன்னு

அழ ஆரம்பிச்சுட்டான்..

இல்லப்பா இது பைனல் ஸ்டேஜ் என்னால முடியாதுப்பா..இனிமே அந்த ஆண்டவன் தான் காப்பாத்தணும்..டாக்டர் சொல்லிவிட்டு வெளியே செல்ல

டாக்டர் டாக்டர்...என்னை காப்பாத்துங்க பிளீஸ் பிளீஸ்னு

கத்திட்டு இருந்தவனை

" டேய் என்னடா தூக்கத்தில் கத்துற..டைம் ஆச்சு எந்திரிடா..பொண்ணுவீட்ல பத்து மணிக்கெல்லாம் வர்ரதா சொல்லியிருக்கேன்" என்று எழுப்பினாள் சிவாவின் அம்மா..

பிகு=

1)கதை இத்தோட முடிஞ்சு போச்சு..
2)இது சிவாவோட கனவுதான்
3) அப்போ அம்முவோட நிலை என்னன்னு யோசிச்சீங்கன்னா அம்முவும் சிவாவும் சேரணும்னு நினைச்சீங்கன்னா அம்மு பிரியாவோட செல்லபேரா இருக்கட்டும்..
4) இதெல்லாம் ஒரு கதைன்னு எழுதினியேடான்னு என்னை திட்டணும்னு நினைச்சாலும் திட்டலாம்..

Monday, June 8, 2009

இரவின் விசும்பல்கள்..

அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

எலியைவிழுங்கி விட்ட
பாம்பினை போல் வலியில்
முனகிக்கொண்டிருந்த
என் அன்னையை கண்டு

என் இதயத்தின் ஓரத்தில்
ஒழுகிய விசும்பல் அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

புலியின் துரத்தலில்
ஓடி ஓடி ஓய்ந்து போன
மானினை போல

எங்களுக்காய் உழைத்து
கால் வலியில் சாய்ந்துகிடந்த
என் தந்தையை கண்டு மனசுக்குள்

கேட்டுக்கொண்ட
வார்த்தைகள் அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

ஊற்றை உள்கொண்டு
கரடுமுரடாய் வெளிப்படும்
என் மனதினை

அவர்களுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

ஆறுதலாய் பேசவோ
அவர்களை கண்டு அழவோ
அவர்களை கவனிக்கவோ

என் மனதிற்கு
தெரிந்திருக்க வில்லை!

என்றாவது
ஓர் நாள் வெளிப்படலாம்

பாலைவனத்தில்
தடுத்துவைக்கப்பட்ட மழையை போல!

தேவையில்லை......

வீட்டுக்கூரையின்
அந்தரத்தில் சுழலும் அந்த
மின்விசிறி ஏதோ சொல்கிறது!

என் தொண்டைக்குழிக்குள்
ஏதோ சொல்லமுடியாத அளவுக்கு
பெரிய வார்த்தை சிக்கிகொண்டிருக்கிறது!

என் வாய்திறந்தாலே
வாயு மட்டுமே வார்த்தைகளுக்கு பதிலாய்

சீதனமாய் தரப்பட்ட
அந்த ஆளுயர கண்ணாடியில்
வீங்கிப்போன என் கண்கள்
வித்தியாசமாய்!

யாரிடமும் பேச முடியாமல்
வார்த்தை தொலைத்த மௌனமொழியால்
பேசத்தொடங்குகிறேன்..

திருட்டுதனமாய் சமையலறையில்
சாமான் உருட்டும் பூனையிடம்,

இருபது வயதில்
என்னை அவன் வீட்டுக்கு அனுப்பி
தன் கடமை முடிந்ததாய்
என் தந்தை சந்தோசமாய் இருந்திருக்க
தேவையில்லை!

உண்மையான அன்புகொண்டு
என் கருவறையில் ஒரு உயிரை
அவன் உருவாக்கியிருக்க தேவையில்லை!

சந்தோச செய்தியுடன்
அலுவலுக்காய் புறப்பட்ட அவனை
எதிர்வந்த வாகனமும் சிதைத்திருக்க
தேவையில்லை!

பல ஆயிரங்களை வாங்கிக்கொண்டு
அவனின் காலை எடுத்தால் பிழைப்பான்
என்று மருத்துவர்கள் அவன் உயிரை
இழுத்துப்பிடித்திருக்க தேவையில்லை!

அறுவை சிகிச்சையில்
அவன் குடலில் இருந்த கற்கள் கிழித்து
சிறுநீர் கலந்து அவன் இறந்திருக்கவும்
தேவையில்லை!

இது அத்தனையும்
இந்த மூன்று மாதத்தில் நடந்திருக்க
தேவையில்லை!

இத்தனை பெரியவார்த்தைகள்
என் தொண்டைக்குழியுள் சிக்கி
எனை ஊமையாய் மாற்றியிருக்கவும்
தேவையில்லை!

தனியாய்
அமர்ந்து அந்தரத்தையே
நோக்கி அமர்ந்திருந்த என்னிடம்

கூரையில் சுழலும்
அந்த மின்விசிறி
தேவையே இல்லை என
சொல்லிக்கொண்டிருந்தது யாருக்கும்

புரியாத சப்தத்தோடு!

இவை எவையும் புரியாத
அந்த பூனை வெளியில் ஓடத்தொடங்கியது

அர்த்தமற்ற கவிதை.....

அந்த வறண்டுபோன
பொட்டல்காட்டில் தனித்திருக்கும்
இலையுதிர்த்த மரத்திற்கு

எப்பொழுதாவது
இளைப்பாற தஞ்சமடையும்
பறவைகளை போலவே

நடுநிசி தாண்டியும்
வெறிகொண்டு அலையும்
என் தனிமைகளுக்கு

எப்பொழுதாவது
நினைவில் வந்து போகும்
உன்னுடனான நிகழ்வுகள்!

பெற்றக்குழந்தைக்கு
தாய்ப்பால் கொடுக்க மறுக்கும்
உடலழகு விரும்பியின் உதவாத

சதைப்பிண்டமாகவே
உன் அழிசாட்சியங்கள் என்னில்
பெரும்பாலும் உணரப்படுகிறது!

வழிதெரியா மீன்கள்...

அகலவாய்விரிக்கும் சூரியனின்
பசியில் வற்றிபோகும்
ஏரிக்கு எவ்வித வருத்தமுமில்லை!

மேகக்கருவறைக்குள் குடிபுகுந்து
அடுத்தகணமே அவைகளுக்குள்
கூடலோ கைகலப்போ
ஏற்படின் மீண்டும் உயிர்பெறும்!

நீராடையை உடுத்தி
வாழ்ந்த மீன்களோ
மானம் போனதாய் மரணத்தை
உட்கொள்ளுகிறது!

இப்போது
ஏரியாய் நீயும்
மீன்களாய் உன் நினைவுகளும்.....

Wednesday, June 3, 2009

பிடிமானம்..தூக்கி கொஞ்சப்படும்
குழந்தை நம்மீது சிறுநீர்
கழிக்காதவரை இறக்கிவிடுவதில்லை!


சிலகொஞ்சல்களோடு
திட்டிக்கொண்டே விடுவிக்கப்படும்
இந்த பிடிமானத்தில் எவ்வித
வெறுப்புகளும் இருப்பதில்லை!


கிளையொடிந்து கீழ்விழும்
சிறுவனின் கை தரைவரும் வரை
கிளையை விடுவதில்லை!


அதிபயத்தோடு
முனகிக்கொண்டே விடுவிக்கப்படும்
இந்த பிடிமானத்தில் எவ்வித
வெறுப்புகளும் இல்லை!


இப்படியாகவே
சில உறவுகளின் மீதான பிடிமானமும்!

Wednesday, May 20, 2009

அனுதினமும் அவளோடு -4

எனை
காத்திருக்க வைப்பதே
உனக்கு வாடிக்கையாகிவிட்டது!

நீயும்
அரசியல் வாதி தான்

எனை
இயல்பாய் வழிநடத்தும்
அரசு நீ!

பலபோட்டிகளுக்கு
நடுவே உனையே முதல்வராய்
தேர்ந்தெடுத்தது
என் ஜனநாயகம்!

வாக்குறுதிகளை
காப்பாற்றுவாய் என நம்புகிறேன்
உறுதியாகவே!

காக்கவைத்து
முத்தத்தால் மூச்சடைக்கும் போது
மட்டும் நீ ஏன்
கொடுங்கோலாட்சி செய்கிறாய்!

அதிலும்
நான் நலம் பெறுகிறேன்!

நான்
தவறுகள் செய்யும் போது
குட்டுவைத்து கொஞ்சிபேசி
செங்கோலாட்சி செய்கிறாய்!

உன்
இரு ஆட்சிமுறையும்
எனை ஆட்டிபடைத்தாலும்
போட்டியின்றி தேர்ந்தெடுக்கிறேன்

உன்னுடனான
என் நேரங்களை!

வாக்குறுதியே தராமல்
என் வயிறு நிரப்புகிறது
உன் நினைவுகள்!

மின்வெட்டானாலும்
மின்னல் வெட்டிப்போகும்
உன் பார்வைக்கு ஈடாகுமா
இலவசகலர் டிவி!

விலையே
இல்லாமல் என் மனம்நிரப்பும்
மானியமுத்தங்கள்

இதுவரை
எந்த திட்டங்களுக்கும்
ஈடுபடுத்தவில்லை!

எந்தமாநிலத்தோடும்
சண்டையிடாமல் உன் எச்சிலால்
என் தாகம் தீர்த்த
சாணக்கிய அரசியல்வாதி நீ!

என்
பாராளுமன்றத்தில்
உனை பற்றிய அறிக்கையை
தாக்கல் செய்தேன்!

முடிவும்
எனக்கே சாதகமாய் வந்தது!
நீ
இனிமேல்
என் நா(வீ)ட்டு அதிபர்!

அனுதினமும் அவளோடு-3

என்
வாழ்க்கை
உனக்கான தேடல்!

என்
சொர்க்கம்
உன்னுடனான கூடல்!

என்
நரகம்
உன்னுடனான ஊடல்!

என்
கோடைக்கால குளிர் நீ!

என்
குளிர்கால வெம்மை நீ!

முரணாக
தெரிந்தாலும்

என்
தட்பவெப்பங்களை
நடுநிலையாக்கும் அரண் நீ!

உனை
மட்டுமே சிந்திக்கும்
என் சிந்தை!

எனக்கு
காதல் நடை கற்பித்த
தந்தை நீ!

உன்
கைப்பிடித்தே
மேலோங்கி நடந்தது
என் காதல்!

கெஞ்சலில்
தொடங்கி கொஞ்சிய
முத்தங்கள் தந்து பாடம்
நடத்திய ஆசானும் நீ!

நான்
காதல் தேர்வில்
கரையேறி முதல்மாணவனாய்
முன்னின்றது உன் திறமையால்!

என்
எழுதுகோலின் சிந்தை
உனையே சிந்திக்கும்!

என்
கவிதைகளனைத்தும்
உனையே வர்ணிக்கும்!

அவனன்றி
ஓர் அணுவும் அசையாது!

அவன் தந்த
உனையன்றி
என் அணுக்கள் அசையாது!

என்
வாழ்க்கை
உனக்கான தேடல்!

என்
சொர்க்கம்
உன்னுடனான கூடல்!

என்
நரகம்
உன்னுடனான ஊடல்!

~ஆம்~

என்
வாழ்க்கைக்கும்
வாழ்க்கைக்கு பின்னும்
என் விதியை
தீர்மானிக்கும் கடவுள் நீ!

Sunday, May 17, 2009

அனுதினமும் அவளோடு -2

உன்
புன்னகை
பூக்களை சேர்த்தெடுத்து
மாலையாக்க நினைக்கிறேன்!

நீயோ
உதட்டை விட்டு
உதிர்ப்பதாய் இல்லை!

ஒரு
மழைவரா விடினும்
என்னால்
வானவில்லை பார்க்க
முடிகிறது!

தலை முதல்
கால் வரை வர்ணங்களை
வாரியிறைத்திருக்கிறான்
உனைபடைத்த
ஓவியன்!

அருவிகளின்
பிறப்பிடம் மலை!
என் கவிகளின்
பிறப்பிடம் பிரம்மனின் கலை!

~ஆம்~
உன்னிலிருந்தே
தொடங்குகிறது என்
எல்லா கவிதைகளும்!

என்
நெஞ்சத்தில்
காதல் நோயை
வளர்த்துவிட்டது

உன்
புன்னகை கிருமி!

அவைகளை
அழிக்க போவதில்லை!
இன்னும்
அதிகமாக்க நான்
என்ன செய்ய வேண்டும்!

என்
தமனி முதற்கொண்டு
சிரை வரை எல்லாமே
சுத்த இரத்தத்தையே
எடுத்து திரிகிறது!

உன்
நினைவுகள் என்
இரத்தம் முழுக்க
கலந்ததால் நான்
பரிசுத்தமாயிருக்கிறேன்!

உன்னால்
வீசியெறியப்பட்ட
பயணசீட்டும்
என்னால் பத்திரமாய்
பாதுகாக்க படுகிறது
என் சான்றிதழ்களை விட!

வேடந்தாங்கலில்
எல்லா குயில்களும்
கழுத்து வரை நீரில் நின்று
சாதகம் கற்றுகொள்கிறதாம்!

உன்
குரலை தோற்கடிக்க!

இப்போதெல்லாம்
நியூட்டனின் புவி ஈர்ப்புவிசை
வேலை செய்யவே இல்லை போல

நான் பறந்துகொண்டே
இருக்கிறேன் உன்
நினைவுகளில்!

அனுதினமும் அவளோடு...1

இப்போதெல்லாம்
நான் கர்வத்தோடே
அலைகிறேன்..

உலகின்
குறிப்பிட தகுந்த அழகியை
மிக அருகில் பார்த்தவர்களில்
நானும் ஒருவன் என்பதால்...

ஆம் ~
ஒருதேடல் பயணத்தில்
ஒன்றை தொலைத்துவிட்டு
திரும்பியிருந்தேன் உன்னிடத்தில்!

முன்பெல்லாம்
எதுவாயினும் தொலைந்துபோயின்
என் மனம் பதறும்..

இந்த முறை
பதறுவதற்கு மனமில்லை
தொலைந்ததே அதுவாயிருக்கையில்...

நீ
என் மனம்
திருடினாய்!
உன் நினைவுகள்
என் தூக்கம் திருடின!

இந்த
இழப்புகள் எவையும்
எனக்கு வலிக்கவே இல்லை!
இதமாகவே இருக்கிறது!

உன்
நினைவு உரத்தால்
என் தனிமைப்பூக்கள்
அதிகமாய் பூக்கின்றன!

என்
தனிமைப்பூக்களை
பறிக்கும் உரிமையை
உனக்கே கொடுப்பதாய்
என் செயற்குழு தீர்மானம்
நிறைவேற்றியாயிற்று!

உன் கண்கள்
எந்த வைரத்தால் செய்தது
என சொல்லேன்!
எனக்கு மட்டும்
இரவுகள்வெளிச்சமாக இருக்கிறது
உன் பார்வையால்!

ஒரு வேளை
உனை மீண்டும்பார்க்க நேர்ந்தால்
உன் கண்களை பார்க்கவே
கூடாதென்று தான் வந்தேன்!

மூடாத
உன் விழிகள்இரண்டும்
தேடுவதெது என்பதைபார்த்துக்கொண்டே
இருக்கும்படிஆகி விட்டதே!

சரி !
இனி நீயே கண்களை மூடிக்கொள்
என்னால் பார்க்கவும் முடியவில்லை
பார்க்காமல்இருக்கவும் முடியவில்லை!

ஒரு குழந்தையிடம்
ஒரேயொருமுத்தம் கேட்டு
கெஞ்சிக்கொண்டிருந்தாய்!

கொஞ்சப்படவேண்டிய
சித்திரம் கெஞ்சிக்கொண்டிருப்பதில்
ஆதங்கம் எனக்கு!

நான் மட்டும்
அந்த குழந்தையாய் இருந்திருந்தால்
உன் கன்னத்திலிருந்து
என் உதட்டை எடுத்திருக்கவேமாட்டேன்!

என்
சீதல உடம்பு இப்போதெல்லாம்
வியர்ப்பதில்லை!
உன் மீதானகாதலால்
உறைந்து போயிருக்கிறது!

உன்
பெயர்கேட்க நினைக்கையில்
நான் உயர்இரத்த அழுத்தத்திற்கு ஆளாகிறேன்!

உன்
அருகில்வர நினைத்தாலோ
அணுக்கள் பிளவுபட்டு
நிலைகுலைந்து போகிறேன்!

(தொடரும்.......

Friday, March 20, 2009

பாற்கடல் எறும்பு நான்!!!

உனை பார்த்துகொண்டே இருப்பதும்
உன்னிடம் பேசதுடிப்பதும்
பேசாமலே போய்விடுவதும்
எனக்கு வாடிக்கையாகிவிட்டது!

உனை சந்திக்கும் தருணங்களில்
எனை ஆட்கொள்ளும் இன்பதுன்பங்களை
புலம்பிதீர்த்தவாறே முடிந்துவிடுகிறது
என் பேனாவின் தூக்கமற்ற இரவுகள்!

உனக்கு மனவருத்தமில்லாமலும்
எனக்கு மனவருத்தம் நீங்குமபடியாயும்
என் காதலை உன்னிடம் சொல்லிவிட
வழிவகை தேடியே என் நினைவுகள்!

எங்கு
எப்படி
எதனை
பயன்படுத்தி உன்னிடம் சொல்வதெனது
காதலை!

பாற்கடலில் மூழ்கிவிட்ட எறும்பினைபோல்
திக்குமுக்காடி கிடக்கிறேன்!
கரையேறவா ? இல்லை உன்னிலே
கரைந்துவிடவா என?

மதுவை விட உன் நினைவுகள்
எனை நிலைகுலைய செய்வதால் தானோ
மாது நீ!

Tuesday, March 17, 2009

மர்மநாவல்

மெல்ல மெல்ல நகரும்
நாவலின் கடைசி பக்கத்தின்
அதிர்ச்சி மர்மத்தையே
நீயும் கொண்டிருந்தாய்!

ஆறாண்டு காலங்கள்
புரட்டிய காதல்பக்கங்கள்
கடைசியில் கண்ணீரில்
நனைந்து அழிந்து போகையில்

நீயும் ஒரு
மர்ம நாவலாகவே
தெரிந்தாய் எனக்கு!

படித்துமுடித்த நாவலின்
சம்பவங்கள் ஆட்கொள்ளும்
நிகழ்வுகள் என்னமோ
சிலகாலம் மட்டுமே!

நீ
நீங்காத வலிதந்த
நீளமான நாவலாகவே
நீள்கிறாய் என் வருடங்களில்!

உனை மறக்கும் யுக்திகளில்
தோற்று தோற்று இப்போது
இறக்கும் யுக்திகளை மேற்கொள்கிறேன்!
அவைகளும்தோற்றுபோகிறது
உன் நினைவுகளால்

வரலாறு எழுதாத நிகழ்வுகளாய்
என் வ‌லிக‌ள் க‌விதைக‌ளாய்!

Saturday, March 14, 2009

நரம்பறுந்த வீணை

நீ முழுவதுமாய்
எனை ஆட்கொண்டிருந்த
தருணங்களில் வேறெதுவும்
சிந்திக்காத என் சிந்தை
ஆயிரம் சிற்பிகளின் கைகள் பெற்றதாய்
நினைத்துகொண்டு செதுக்கிய
உன் பார்வைக்காய் தவங்கிடந்த
என் கவிதைகள்
உன்னால் ரசிக்கப்பட்ட தருணங்களை
நினைத்து அங்கலாய்த்து
சிறகடித்துகொண்டிருக்கும் என் அறைமுழுக்க!

பிரிதொரு நாளிலுன்
பிரியத்தினின்று வெளித்தள்ளப்பட்ட
என் கவிதைகள் அனைத்தும்
என் இருகைகளாலே கிழிக்கப்பட்ட
கணங்களில் அழுதுதுடித்த
காகிதத்தின் வலியின்
பலமடங்கினை கிழிப்பதற்காய்
அடைந்தேன் நான்!

அழகாய் வடிவமைத்து மீட்ட
மீட்ட இன்பம் தந்து நரம்பறுந்து
பரணேறிய வீணையின்
நினைவுகளாய்

அறைமுழுக்க
பரவிகிடக்கும் இந்த கவிதைகள்
அனைத்தும் உன்மீதான
என் அளவில்லாத பிரியங்கள்!

Saturday, March 7, 2009

ஒரு நாயகன் உதயமாகிறான்!!!!ஹா ஹா ஹா ஹா சும்மா டெர்ரர் மாதிரியே இல்ல..(இல்லதான்னு சொல்லகூடாது).படிக்காதவன் படம் பாத்துட்டு இருந்தப்ப ஒரு சீன்ல தனுஷை இந்தமாதிரி போஸ்ல ஒரு ஸ்டில் எடுப்பாங்க..அதை பார்த்த தேனுவும் ஹை தணி தணி நீ தான்னு கத்த ஆரமபிச்சுடுச்சு..அப்ப நாமளும் இந்தமாதிரி ஒரு ஸ்டில் எடுக்கோணும்னு ஒரு ஆசை..அது இப்போதான் நிறைவேறிச்சு...
மீதி கீழே இருக்கும் படம் சும்மா ஹி ஹி ஹி ஹி ஹி


Wednesday, January 28, 2009

சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:03
நாளை கண்டிப்பாய் அவள் என்னை ஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கையுடனே என் அந்தி மாலை முடிந்தது.இரவுக்குள் நுழைந்த நான் எழுதுகோலெடுத்து என்னவள் பெயரை என் நோட்டுபுத்தகங்கள் முழுக்க எழுதிகொண்டிருந்தேன்..
எவ்வளவு எழுதியும் என் தாகம் தீர்வதாயில்லை.எனக்கு வயிற்றுபசிதான் எடுத்ததாயில்லை..சாப்பிட அழைத்த அம்மாவிடம் படிக்கவேண்டும் என்றுபொய் சொல்லிவிட்டு உனக்காய் உன் முகம் பற்றிய சிலவரிகளை கிறுக்கினேன்.

பௌர்ணமி நிலவினுள்
ஓர் அமாவாசைஅழகாகவே!

என்னவளின் உதட்டோரமச்சம்!

உன் உதட்டுக்கு கீழிருந்த அந்த மச்சம் எத்தனை அழகாய் இருக்கும்.இதை எழுதிவிட்டு பார்த்தேன்.அந்த ஐந்து வார்த்தைகளிலே நான் கவிதை எழுதிவிட்டதாய் சிலாகித்துகொண்டு இருந்தேன். இப்படியே சிலநேரம் அதை ரசித்து விட்டு அடுத்து ஒரு உதட்டையும் அதன் கீழ் இடது ஓரத்தில் மச்சமும் வரைந்து உன்னையே வரைந்ததாய் நினைத்து வெகுநேரம் பார்த்திருந்தேன்.

நள்ளிரவையும் தாண்டி நான் விழிகளை மூடாமல் கனவு கண்டுகொண்டிருந்தேன்..நாளை அவள் முன் அழகாக தோன்றவேண்டுமென்று அர்த்தராத்திரியில் இஸ்திரி பணியில் இறங்கிய என்னை பார்த்து என் தந்தை என்ன தான் ஆச்சோ இவனுக்கு என்றபோது மனதுக்குள் சிரிப்பு மட்டுமே!
கட்டுரைப்போட்டியில் முதல்பரிசாய் வென்ற அலாரம் எனக்கு அன்று தேவைப்பட ஒரு அரைமணிநேர தேடலுக்கு பின் ஐந்து மணிக்கு அலாரம் வைத்தபோது மணி நான்கினை தொட்டிருந்தது.ஒரு வழியாய் கண்மூடி படுக்கையில் நாளை என்ன நடக்கும் என்ற ஆவலிலே என்னன்னவோ கற்பனை. நீயாகவே என்னிடம் வந்து பேசுவது போலவும் அதன் பின் திருமணம் குழந்தை என ஒரு பத்து பதினைந்து வருடங்களை தாண்டி பயணித்துகொண்டிருந்த மனதை அலாரம் திசை திருப்ப வேக வேகமாய் எழுந்து கிளம்பினேன்.

வழக்கமாய் வெறுப்புடன் நடந்து செல்லும் மூன்றரை கிலோமீட்டர் தூரம் கூட எனக்கு பெரிதாய் தெரியவே இல்லை.ஏழரை மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்தவன் உன் வருகைக்காக பேருந்து நிலையம் வரை வந்து காத்திருந்தேன்!
சில நிமிட காத்திருப்பின் பின்னர் இறங்கி வந்த நீ எதையுமே அறியாதவள் போல் நடக்க தொடங்கினாய்.நேற்றைய கனவுகோட்டைகள் எல்லாம் நொருங்கி விடுமோ என்ற பயத்துடனே உன் பின்னே நடக்க ஆரம்பித்தேன்!

கடைசிவரை திரும்பாதவள் உன் வகுப்பறைக்குள் நுழையும் முன் திரும்பி புன்னகைத்து சென்ற கணம் வேரோடு புடுங்கவிருந்த ஒரு மரத்திற்கு கொடுத்த முட்டுகொம்பினை போல் இருந்தது!
பின் மதியவேளை வரை உனை காணும் வாய்ப்பு கிட்டாமல் வகுப்பறையில் தலைவலி என்று சொல்லி ப்டுத்திருந்தேன்.மதியம் ஓடிவந்து அத்தை மகளிடம் கேட்டபோது அவளின் முகத்தில் இருந்த சந்தோசமே சம்மதம் என காட்டியது !
ஆமாடா ! அவள் ஓகே சொல்லிட்டான்னு சொல்லும் போது சில அடி தூரத்தில் நின்றிருந்த உனை பார்க்கையில்இதழ்விரித்து நீ புன்னகைத்தாய் மீண்டும்! ரொம்ப நன்றி சத்யா என்று சொல்லிவிட்டு சிட்டென பறந்து ஓடிப்போய் என் நண்பர்களிடம் மச்சான் சக்சஸ்டா என்று சொன்ன போது வலிகளுக்கு பின்னால் வரமாய் பிறக்கும் குழந்தையினை பெற்ற தாயின் மகிழ்ச்சியை பெற்றிருந்தேன்!

ஒருவழியாய் என் நினைவுகள் பூலோகம் திரும்பி வந்து உன்னிடம் எப்படி பேசுவதென்ற யோசனைக்குள் இறங்கினேன்....
பேசுவதறகான இடம்,பொருள் தேடி...............


தொடரும்....

Tuesday, January 27, 2009

சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:02
இரண்டு மாதங்களுக்கு பிறகு நீயும் மேல்நிலைபடிப்பிற்காக வருவாய் என எப்போதுமே சேர்க்கை நடக்கும் மேடையையே பார்த்திருந்தேன்.ஆனால் நீ என் கண்ணில் தென்படவே இல்லை.சேர்க்கை முடிந்தது என தொங்கிய பலகையை பார்த்தபோதுஎன் காதலும் முடிந்ததாய் அழுதுகொண்டிருந்தேன்.அடுத்த நாளில் புதியமாணவர்கள் அனைவரும் வருவார்கள் என அறிவிப்பு கேட்டும் எந்த வித சலனமும் இல்லாமல் சென்றேன்.
இரவு எனக்கு வெறுமையையும் அழுகையுமாகவே முடிந்தது.சோகம் தோய்ந்த முகத்துடனே வழக்கம் போல் வந்தேன் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி.நான் வளாகத்துள் நுழைந்து நேரே என் அறைக்கு செல்ல முற்படும் போது ஒரு முப்பது அடி தூரத்தில் நீ நின்றிருந்தாய்!

வெயிலின் வாட்டத்தில் வறண்டு போய் வெடிப்புகள் விட்ட ஒரு நிலத்தில் அடைமழைபெய்யும் போது இருக்கும் இனிமையில் நான் !என்ன செய்வதென்று புரியாமல் நான் அப்படியே உன்னையே பார்த்திருந்தேன்.நீயும் புன்னகை மறைத்த இதழோடு விழி விரித்து என்னை நோக்கினாய்!
ஒரு சில நிமிடங்கள் அசையாமல் நின்றவன் நினைவுக்கு வந்து வகுப்பறை நோக்கி நடந்தேன்.திரும்பிய உடலும் திரும்பாத நினைவுமாய்! அறைக்குள் சென்றவன் அடுத்தகட்ட போருக்கு ஆயத்தமாக யோசித்தேன்..

இடைவேளையின் போது உன்னறை நோக்கி வந்தபின்புதான் தெரிந்தது..உன்னுடன் மீண்டும் என் அத்தைமகள் சேர்ந்தே படிப்பது..ஒரு வழியாய் அவளிடமே மீண்டும் என் காதலை தூதனுப்ப முடிவுகட்டி கடிதம் எழுதவா? முன் எழுதிய கவிதையினையே எழுதி தரலாமா ? என்று யோசனைகள் இருநாட்களை கடத்தியிருந்தது..

பின் எதுவுமே இல்லாமல் மீண்டும் ஒரு முறை எனக்காய் அவளிடம் சொல்வாயா? என்று என் அத்தைமகளிடம் கேட்டேன்.அவளும் சரி என்று சொன்னது தான்..நீயே சரி என்று சொல்வதாய் எனக்கு பட்டு வானுக்கும் கீழுக்கும் பறந்தேன். மறுநாள் விடியலை எதிர்நோக்கி காலை ஏழு மணிக்கெல்லாம் வகுப்பறையில் குடிபுகுந்தேன்..மதியவேளை வரை உனை பார்க்கவோ நான் முயற்சிக்கவில்லை..

மதிய உணவையும் மறந்து என் அத்தை மகளிடம் வந்து சொன்னாயா ? என்றேன்.ம்ம்ம்ம்..இது மட்டுமே பதிலாய்.. அவள் உதடு விரியாதா? பதில் தெரியாதா என ஏக்கத்துடன் அவள் என்ன சொன்னாள் என்று கேட்டேன்..
சிலநாழிகை மவுனத்திற்கு பின் ஒரு நாள் நேரம் வேண்டும் அவள் யோசிப்பதற்கு " என்று சொன்னதுமே என் காதல் அலை அவள் மனதில் அடித்து இருக்கும் என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு சுதந்திரம் பெற்ற போராளியாய் மகிழ்ச்சியோடு மறுநாளினை நோக்கி பயணிக்க தொடங்கிய மனதோடு உன்னை பார்க்க வந்தேன்!

புன்னகை மட்டும் தந்தவளாய் சென்று கொண்டிருந்தாய்!நாளைக்கு நல்லதொரு முடிவும் வருமென்ற நம்பிக்கையில் நானும் நடக்க ஆரம்பித்தேன்......

தொடரும்...............