CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, January 28, 2009

சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:03
நாளை கண்டிப்பாய் அவள் என்னை ஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கையுடனே என் அந்தி மாலை முடிந்தது.இரவுக்குள் நுழைந்த நான் எழுதுகோலெடுத்து என்னவள் பெயரை என் நோட்டுபுத்தகங்கள் முழுக்க எழுதிகொண்டிருந்தேன்..
எவ்வளவு எழுதியும் என் தாகம் தீர்வதாயில்லை.எனக்கு வயிற்றுபசிதான் எடுத்ததாயில்லை..சாப்பிட அழைத்த அம்மாவிடம் படிக்கவேண்டும் என்றுபொய் சொல்லிவிட்டு உனக்காய் உன் முகம் பற்றிய சிலவரிகளை கிறுக்கினேன்.

பௌர்ணமி நிலவினுள்
ஓர் அமாவாசைஅழகாகவே!

என்னவளின் உதட்டோரமச்சம்!

உன் உதட்டுக்கு கீழிருந்த அந்த மச்சம் எத்தனை அழகாய் இருக்கும்.இதை எழுதிவிட்டு பார்த்தேன்.அந்த ஐந்து வார்த்தைகளிலே நான் கவிதை எழுதிவிட்டதாய் சிலாகித்துகொண்டு இருந்தேன். இப்படியே சிலநேரம் அதை ரசித்து விட்டு அடுத்து ஒரு உதட்டையும் அதன் கீழ் இடது ஓரத்தில் மச்சமும் வரைந்து உன்னையே வரைந்ததாய் நினைத்து வெகுநேரம் பார்த்திருந்தேன்.

நள்ளிரவையும் தாண்டி நான் விழிகளை மூடாமல் கனவு கண்டுகொண்டிருந்தேன்..நாளை அவள் முன் அழகாக தோன்றவேண்டுமென்று அர்த்தராத்திரியில் இஸ்திரி பணியில் இறங்கிய என்னை பார்த்து என் தந்தை என்ன தான் ஆச்சோ இவனுக்கு என்றபோது மனதுக்குள் சிரிப்பு மட்டுமே!
கட்டுரைப்போட்டியில் முதல்பரிசாய் வென்ற அலாரம் எனக்கு அன்று தேவைப்பட ஒரு அரைமணிநேர தேடலுக்கு பின் ஐந்து மணிக்கு அலாரம் வைத்தபோது மணி நான்கினை தொட்டிருந்தது.ஒரு வழியாய் கண்மூடி படுக்கையில் நாளை என்ன நடக்கும் என்ற ஆவலிலே என்னன்னவோ கற்பனை. நீயாகவே என்னிடம் வந்து பேசுவது போலவும் அதன் பின் திருமணம் குழந்தை என ஒரு பத்து பதினைந்து வருடங்களை தாண்டி பயணித்துகொண்டிருந்த மனதை அலாரம் திசை திருப்ப வேக வேகமாய் எழுந்து கிளம்பினேன்.

வழக்கமாய் வெறுப்புடன் நடந்து செல்லும் மூன்றரை கிலோமீட்டர் தூரம் கூட எனக்கு பெரிதாய் தெரியவே இல்லை.ஏழரை மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்தவன் உன் வருகைக்காக பேருந்து நிலையம் வரை வந்து காத்திருந்தேன்!
சில நிமிட காத்திருப்பின் பின்னர் இறங்கி வந்த நீ எதையுமே அறியாதவள் போல் நடக்க தொடங்கினாய்.நேற்றைய கனவுகோட்டைகள் எல்லாம் நொருங்கி விடுமோ என்ற பயத்துடனே உன் பின்னே நடக்க ஆரம்பித்தேன்!

கடைசிவரை திரும்பாதவள் உன் வகுப்பறைக்குள் நுழையும் முன் திரும்பி புன்னகைத்து சென்ற கணம் வேரோடு புடுங்கவிருந்த ஒரு மரத்திற்கு கொடுத்த முட்டுகொம்பினை போல் இருந்தது!
பின் மதியவேளை வரை உனை காணும் வாய்ப்பு கிட்டாமல் வகுப்பறையில் தலைவலி என்று சொல்லி ப்டுத்திருந்தேன்.மதியம் ஓடிவந்து அத்தை மகளிடம் கேட்டபோது அவளின் முகத்தில் இருந்த சந்தோசமே சம்மதம் என காட்டியது !
ஆமாடா ! அவள் ஓகே சொல்லிட்டான்னு சொல்லும் போது சில அடி தூரத்தில் நின்றிருந்த உனை பார்க்கையில்இதழ்விரித்து நீ புன்னகைத்தாய் மீண்டும்! ரொம்ப நன்றி சத்யா என்று சொல்லிவிட்டு சிட்டென பறந்து ஓடிப்போய் என் நண்பர்களிடம் மச்சான் சக்சஸ்டா என்று சொன்ன போது வலிகளுக்கு பின்னால் வரமாய் பிறக்கும் குழந்தையினை பெற்ற தாயின் மகிழ்ச்சியை பெற்றிருந்தேன்!

ஒருவழியாய் என் நினைவுகள் பூலோகம் திரும்பி வந்து உன்னிடம் எப்படி பேசுவதென்ற யோசனைக்குள் இறங்கினேன்....
பேசுவதறகான இடம்,பொருள் தேடி...............


தொடரும்....

Tuesday, January 27, 2009

சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:02
இரண்டு மாதங்களுக்கு பிறகு நீயும் மேல்நிலைபடிப்பிற்காக வருவாய் என எப்போதுமே சேர்க்கை நடக்கும் மேடையையே பார்த்திருந்தேன்.ஆனால் நீ என் கண்ணில் தென்படவே இல்லை.சேர்க்கை முடிந்தது என தொங்கிய பலகையை பார்த்தபோதுஎன் காதலும் முடிந்ததாய் அழுதுகொண்டிருந்தேன்.அடுத்த நாளில் புதியமாணவர்கள் அனைவரும் வருவார்கள் என அறிவிப்பு கேட்டும் எந்த வித சலனமும் இல்லாமல் சென்றேன்.
இரவு எனக்கு வெறுமையையும் அழுகையுமாகவே முடிந்தது.சோகம் தோய்ந்த முகத்துடனே வழக்கம் போல் வந்தேன் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி.நான் வளாகத்துள் நுழைந்து நேரே என் அறைக்கு செல்ல முற்படும் போது ஒரு முப்பது அடி தூரத்தில் நீ நின்றிருந்தாய்!

வெயிலின் வாட்டத்தில் வறண்டு போய் வெடிப்புகள் விட்ட ஒரு நிலத்தில் அடைமழைபெய்யும் போது இருக்கும் இனிமையில் நான் !என்ன செய்வதென்று புரியாமல் நான் அப்படியே உன்னையே பார்த்திருந்தேன்.நீயும் புன்னகை மறைத்த இதழோடு விழி விரித்து என்னை நோக்கினாய்!
ஒரு சில நிமிடங்கள் அசையாமல் நின்றவன் நினைவுக்கு வந்து வகுப்பறை நோக்கி நடந்தேன்.திரும்பிய உடலும் திரும்பாத நினைவுமாய்! அறைக்குள் சென்றவன் அடுத்தகட்ட போருக்கு ஆயத்தமாக யோசித்தேன்..

இடைவேளையின் போது உன்னறை நோக்கி வந்தபின்புதான் தெரிந்தது..உன்னுடன் மீண்டும் என் அத்தைமகள் சேர்ந்தே படிப்பது..ஒரு வழியாய் அவளிடமே மீண்டும் என் காதலை தூதனுப்ப முடிவுகட்டி கடிதம் எழுதவா? முன் எழுதிய கவிதையினையே எழுதி தரலாமா ? என்று யோசனைகள் இருநாட்களை கடத்தியிருந்தது..

பின் எதுவுமே இல்லாமல் மீண்டும் ஒரு முறை எனக்காய் அவளிடம் சொல்வாயா? என்று என் அத்தைமகளிடம் கேட்டேன்.அவளும் சரி என்று சொன்னது தான்..நீயே சரி என்று சொல்வதாய் எனக்கு பட்டு வானுக்கும் கீழுக்கும் பறந்தேன். மறுநாள் விடியலை எதிர்நோக்கி காலை ஏழு மணிக்கெல்லாம் வகுப்பறையில் குடிபுகுந்தேன்..மதியவேளை வரை உனை பார்க்கவோ நான் முயற்சிக்கவில்லை..

மதிய உணவையும் மறந்து என் அத்தை மகளிடம் வந்து சொன்னாயா ? என்றேன்.ம்ம்ம்ம்..இது மட்டுமே பதிலாய்.. அவள் உதடு விரியாதா? பதில் தெரியாதா என ஏக்கத்துடன் அவள் என்ன சொன்னாள் என்று கேட்டேன்..
சிலநாழிகை மவுனத்திற்கு பின் ஒரு நாள் நேரம் வேண்டும் அவள் யோசிப்பதற்கு " என்று சொன்னதுமே என் காதல் அலை அவள் மனதில் அடித்து இருக்கும் என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு சுதந்திரம் பெற்ற போராளியாய் மகிழ்ச்சியோடு மறுநாளினை நோக்கி பயணிக்க தொடங்கிய மனதோடு உன்னை பார்க்க வந்தேன்!

புன்னகை மட்டும் தந்தவளாய் சென்று கொண்டிருந்தாய்!நாளைக்கு நல்லதொரு முடிவும் வருமென்ற நம்பிக்கையில் நானும் நடக்க ஆரம்பித்தேன்......

தொடரும்...............