CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, May 20, 2009

அனுதினமும் அவளோடு -4

எனை
காத்திருக்க வைப்பதே
உனக்கு வாடிக்கையாகிவிட்டது!

நீயும்
அரசியல் வாதி தான்

எனை
இயல்பாய் வழிநடத்தும்
அரசு நீ!

பலபோட்டிகளுக்கு
நடுவே உனையே முதல்வராய்
தேர்ந்தெடுத்தது
என் ஜனநாயகம்!

வாக்குறுதிகளை
காப்பாற்றுவாய் என நம்புகிறேன்
உறுதியாகவே!

காக்கவைத்து
முத்தத்தால் மூச்சடைக்கும் போது
மட்டும் நீ ஏன்
கொடுங்கோலாட்சி செய்கிறாய்!

அதிலும்
நான் நலம் பெறுகிறேன்!

நான்
தவறுகள் செய்யும் போது
குட்டுவைத்து கொஞ்சிபேசி
செங்கோலாட்சி செய்கிறாய்!

உன்
இரு ஆட்சிமுறையும்
எனை ஆட்டிபடைத்தாலும்
போட்டியின்றி தேர்ந்தெடுக்கிறேன்

உன்னுடனான
என் நேரங்களை!

வாக்குறுதியே தராமல்
என் வயிறு நிரப்புகிறது
உன் நினைவுகள்!

மின்வெட்டானாலும்
மின்னல் வெட்டிப்போகும்
உன் பார்வைக்கு ஈடாகுமா
இலவசகலர் டிவி!

விலையே
இல்லாமல் என் மனம்நிரப்பும்
மானியமுத்தங்கள்

இதுவரை
எந்த திட்டங்களுக்கும்
ஈடுபடுத்தவில்லை!

எந்தமாநிலத்தோடும்
சண்டையிடாமல் உன் எச்சிலால்
என் தாகம் தீர்த்த
சாணக்கிய அரசியல்வாதி நீ!

என்
பாராளுமன்றத்தில்
உனை பற்றிய அறிக்கையை
தாக்கல் செய்தேன்!

முடிவும்
எனக்கே சாதகமாய் வந்தது!
நீ
இனிமேல்
என் நா(வீ)ட்டு அதிபர்!

அனுதினமும் அவளோடு-3

என்
வாழ்க்கை
உனக்கான தேடல்!

என்
சொர்க்கம்
உன்னுடனான கூடல்!

என்
நரகம்
உன்னுடனான ஊடல்!

என்
கோடைக்கால குளிர் நீ!

என்
குளிர்கால வெம்மை நீ!

முரணாக
தெரிந்தாலும்

என்
தட்பவெப்பங்களை
நடுநிலையாக்கும் அரண் நீ!

உனை
மட்டுமே சிந்திக்கும்
என் சிந்தை!

எனக்கு
காதல் நடை கற்பித்த
தந்தை நீ!

உன்
கைப்பிடித்தே
மேலோங்கி நடந்தது
என் காதல்!

கெஞ்சலில்
தொடங்கி கொஞ்சிய
முத்தங்கள் தந்து பாடம்
நடத்திய ஆசானும் நீ!

நான்
காதல் தேர்வில்
கரையேறி முதல்மாணவனாய்
முன்னின்றது உன் திறமையால்!

என்
எழுதுகோலின் சிந்தை
உனையே சிந்திக்கும்!

என்
கவிதைகளனைத்தும்
உனையே வர்ணிக்கும்!

அவனன்றி
ஓர் அணுவும் அசையாது!

அவன் தந்த
உனையன்றி
என் அணுக்கள் அசையாது!

என்
வாழ்க்கை
உனக்கான தேடல்!

என்
சொர்க்கம்
உன்னுடனான கூடல்!

என்
நரகம்
உன்னுடனான ஊடல்!

~ஆம்~

என்
வாழ்க்கைக்கும்
வாழ்க்கைக்கு பின்னும்
என் விதியை
தீர்மானிக்கும் கடவுள் நீ!

Sunday, May 17, 2009

அனுதினமும் அவளோடு -2

உன்
புன்னகை
பூக்களை சேர்த்தெடுத்து
மாலையாக்க நினைக்கிறேன்!

நீயோ
உதட்டை விட்டு
உதிர்ப்பதாய் இல்லை!

ஒரு
மழைவரா விடினும்
என்னால்
வானவில்லை பார்க்க
முடிகிறது!

தலை முதல்
கால் வரை வர்ணங்களை
வாரியிறைத்திருக்கிறான்
உனைபடைத்த
ஓவியன்!

அருவிகளின்
பிறப்பிடம் மலை!
என் கவிகளின்
பிறப்பிடம் பிரம்மனின் கலை!

~ஆம்~
உன்னிலிருந்தே
தொடங்குகிறது என்
எல்லா கவிதைகளும்!

என்
நெஞ்சத்தில்
காதல் நோயை
வளர்த்துவிட்டது

உன்
புன்னகை கிருமி!

அவைகளை
அழிக்க போவதில்லை!
இன்னும்
அதிகமாக்க நான்
என்ன செய்ய வேண்டும்!

என்
தமனி முதற்கொண்டு
சிரை வரை எல்லாமே
சுத்த இரத்தத்தையே
எடுத்து திரிகிறது!

உன்
நினைவுகள் என்
இரத்தம் முழுக்க
கலந்ததால் நான்
பரிசுத்தமாயிருக்கிறேன்!

உன்னால்
வீசியெறியப்பட்ட
பயணசீட்டும்
என்னால் பத்திரமாய்
பாதுகாக்க படுகிறது
என் சான்றிதழ்களை விட!

வேடந்தாங்கலில்
எல்லா குயில்களும்
கழுத்து வரை நீரில் நின்று
சாதகம் கற்றுகொள்கிறதாம்!

உன்
குரலை தோற்கடிக்க!

இப்போதெல்லாம்
நியூட்டனின் புவி ஈர்ப்புவிசை
வேலை செய்யவே இல்லை போல

நான் பறந்துகொண்டே
இருக்கிறேன் உன்
நினைவுகளில்!

அனுதினமும் அவளோடு...1

இப்போதெல்லாம்
நான் கர்வத்தோடே
அலைகிறேன்..

உலகின்
குறிப்பிட தகுந்த அழகியை
மிக அருகில் பார்த்தவர்களில்
நானும் ஒருவன் என்பதால்...

ஆம் ~
ஒருதேடல் பயணத்தில்
ஒன்றை தொலைத்துவிட்டு
திரும்பியிருந்தேன் உன்னிடத்தில்!

முன்பெல்லாம்
எதுவாயினும் தொலைந்துபோயின்
என் மனம் பதறும்..

இந்த முறை
பதறுவதற்கு மனமில்லை
தொலைந்ததே அதுவாயிருக்கையில்...

நீ
என் மனம்
திருடினாய்!
உன் நினைவுகள்
என் தூக்கம் திருடின!

இந்த
இழப்புகள் எவையும்
எனக்கு வலிக்கவே இல்லை!
இதமாகவே இருக்கிறது!

உன்
நினைவு உரத்தால்
என் தனிமைப்பூக்கள்
அதிகமாய் பூக்கின்றன!

என்
தனிமைப்பூக்களை
பறிக்கும் உரிமையை
உனக்கே கொடுப்பதாய்
என் செயற்குழு தீர்மானம்
நிறைவேற்றியாயிற்று!

உன் கண்கள்
எந்த வைரத்தால் செய்தது
என சொல்லேன்!
எனக்கு மட்டும்
இரவுகள்வெளிச்சமாக இருக்கிறது
உன் பார்வையால்!

ஒரு வேளை
உனை மீண்டும்பார்க்க நேர்ந்தால்
உன் கண்களை பார்க்கவே
கூடாதென்று தான் வந்தேன்!

மூடாத
உன் விழிகள்இரண்டும்
தேடுவதெது என்பதைபார்த்துக்கொண்டே
இருக்கும்படிஆகி விட்டதே!

சரி !
இனி நீயே கண்களை மூடிக்கொள்
என்னால் பார்க்கவும் முடியவில்லை
பார்க்காமல்இருக்கவும் முடியவில்லை!

ஒரு குழந்தையிடம்
ஒரேயொருமுத்தம் கேட்டு
கெஞ்சிக்கொண்டிருந்தாய்!

கொஞ்சப்படவேண்டிய
சித்திரம் கெஞ்சிக்கொண்டிருப்பதில்
ஆதங்கம் எனக்கு!

நான் மட்டும்
அந்த குழந்தையாய் இருந்திருந்தால்
உன் கன்னத்திலிருந்து
என் உதட்டை எடுத்திருக்கவேமாட்டேன்!

என்
சீதல உடம்பு இப்போதெல்லாம்
வியர்ப்பதில்லை!
உன் மீதானகாதலால்
உறைந்து போயிருக்கிறது!

உன்
பெயர்கேட்க நினைக்கையில்
நான் உயர்இரத்த அழுத்தத்திற்கு ஆளாகிறேன்!

உன்
அருகில்வர நினைத்தாலோ
அணுக்கள் பிளவுபட்டு
நிலைகுலைந்து போகிறேன்!

(தொடரும்.......