CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, April 26, 2008

கவிதை????

காதலிக்கான மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகளில்
புதுக்கவிதை வேடமிட்டு சிலாக்கித்திருந்த
என்னெழுத்துக்களின் மீதெழுந்த விமர்சனங்களின்
அறிவுறுத்தலில் ஆரம்பித்த யோசனைகள்
கவிதையா??? கவிகொலையா ??? இதுவென

கருவறைக்காதலியென் அன்னையையும்
கார‌ண‌மின்றி நிக‌ழ்த்த‌ப்ப‌டும் துர்ம‌ர‌ண‌ங்க‌ளையும்
உள்ளடக்கிய‌ கவிதை வரிகள் முகத்திலுமிழ்ந்து
உணர்த்துக்கிறது கவிதை இதுவென..

விமர்சனங்களை தாண்டி எதிர்பார்ப்புகளோடு
எடுத்துரைக்கிற‌து ந‌ண்ப‌ரின் குரல்
என்கொலையின் தேவையற்ற அலம்பல்களையும்
சொல்லப்படாத நிதர்சனங்களையும்...

எண்ணக்கடலில் கவிதைமீன்க‌ளிருந்தும்
வெளிக்கொண‌ர‌ வார்த்தைவ‌லைக‌ளின்றி
தவித்தகணத்தில் வலைகளை கொடுத்து
காத்திருக்கும் தோழமை....

நானுமே வலைவீசி காத்திருக்கிறேன்
மீன்கள் வ‌லையேறுமென‌...

Thursday, April 17, 2008

புரிய முற்படுகையில்...

அமைதியாகதான் விடிகிறது
ஒவ்வொரு காலைபொழுதும்
அலுவல்களின் சுமூகமான ஆரம்பங்கள் கூட
அதிகபட்சமான கோபங்களால்
அலையடித்து சின்னாபின்னமாகிறது

அறிவுரைகள் குவியத்தொடங்கி
அதிகமாகிப்போகிறது இயலாமையின்
கோபத்தினூடே உளைச்சல்களும்
அதனூடான சிகரெட் எண்ணிக்கையும்.
தோழனின் தோள்தட்டல்களூடான
ஆசுவாசத்தின் கழிவிறக்கம்
தனிமையை நாட விழைகிறது

விரலுக்கிடையில் அக்னிகக்கும்
சிகரெட்டுடன் விசாலமான பூங்காவை
தாண்டுகையில் விரிந்து படர்ந்திருந்த
விலாமரமானது எதையோ உணர்த்தியபடி
உதிர்க்கிறது அதன் பழுத்த இலைகளை
தென்றலது முகம் வருடியதை சுகித்தப்படி
தாண்டிசெல்ல கோடை வெம்மையின்
புழுதிக்காற்று முகத்தில் அறைந்து
எதையோ உணர்த்த யத்தனிக்கிறது

புரியாமல் ஆழ்கடலில் முத்துக்கள் தேடுபவனாய்
யோசிக்கையில் விரல் சுட்டு புரியவைத்து
சாம்பலாகிறது சிகரெட் துண்டு..

மூன்றையும் ஒன்றாய் திணித்து
எண்ணுகையில் தெளிவாகி திரும்புகிறேன்
வாழ்க்கை வாழ்வதற்கென்று...

Wednesday, April 16, 2008

ஞாயிறொன்றில்....

அரசு உத்தியோகத்தவனின் வருகையாய்
விடியலெடுக்கிறது இந்த ஞாயிறும்
மெதுவான கசக்கலுக்குபின் தெளிவாகிறது
ஜன்னலூடன வெளிச்சமும் ஓடாத
என் கட்டிலறை கடிகாரமும்...

நேரவிசாரிப்பின் முனகலில் அன்னையின்
அர்ச்சனைகள் நினைவுபடுத்துகிறது
புதுவருட எண்ணைகுளியலையும்
அப்போதைய பத்து மணியையும்..

கட்டிலில் சாய்ந்தபடியே ஜன்னலூடே
தலைதூக்கும் எண்ணங்களை வருடிசெல்கிறது
நிழலின் தன்மையை ஏந்திவந்த தென்றலும்
மாட்டுதொழுவத்தின் புதுவரவும்

மடிமுட்டி பாலருந்தும் கன்றதனை
புதியவனா?புதியவளா ?புதிரோடு
ரசிக்கும் நினைவுலகை கலைக்கிறது
அண்டைவீட்டு மழலைப்பசியின் அழுகை

ஏனென்ற கேள்வியோடே வெளியேறும்
எரிச்சலூடான வார்த்தைகளுக்கிடையில் நுழைகிறது
அண்டைவீட்டாரின் அர்த்தமற்ற சண்டையும்
தங்கையின் குழந்தைக்கான தாலாட்டும்...

Friday, April 11, 2008

தப்பித்தும் மரணிக்கிறேன்...

அர்த்தராத்திரியொன்றில் முடிகிறது எனக்கான
அலுவல் வேலைகளும் அதனூடான உளைச்சல்களும்
கயிறவிழ்த்து தாயின் மடிநோக்கியோடும் கன்றைபோல
கண்களின் தூக்கத்தினூடே பயணிக்கிறேன்..

அரசின் நெடுஞ்சாலைதிட்டம் வேக வேகமாய்
அரங்கேறிகொண்டிருக்கிறது சாலையில் இருபுறமும்
உணவுக்காய் கண்விழித்து இரைதேடும் ஆந்தையாய்
உழைத்துகொண்டிருக்கும் மனிதர்கள் சுறுசுறுப்பாய்

சாலைப்பணிகள் விரைவாகுதையெண்ணி மகிழ்ச்சி
சாப்பாட்டுக்காய் உழைக்கும் இவர்களையெண்ணி கவலை
மாறி மாறி மனதினுள் படையெடுத்துகொண்டிருக்க
காதை கிழிக்கும் காற்றொலிப்பான் பின் தொடர

அதிர்ந்து போய் திரும்பிபார்த்தேன்
நிலைதவறி வரும் கனரகவாகனமொன்று
என்னை நோக்கி வேகமாய் வரவே
திடுக்கிட்டு சாய்க்கிறேன் சாலையோர பள்ளத்தில்..

தப்பித்த மகிழ்வோடு எழுந்து நிற்க அடுத்தநொடி
அலறலோடு அழைக்கிறது நிறைய குரல்
தூக்குகண்ட கைதியாய் பதறிப்போய் பார்க்கையில்
தூக்ககூட நாதியின்றி பாதைசமைத்தவர் சிதறிபோய் கிடக்கையில்

உயிர் தப்பியும் மரணித்தேன் மறுபடியும்.....

Wednesday, April 9, 2008

விதிவிலக்கா???

உலக காதலர்களின் மத்தியில்
விதிவிலக்காய் இருப்போமென
பேசிமுடித்தே ஆரம்பித்தோம்-நம்
இனிய காதல் பயணத்தை

தொலைபேசியின் தொடர்தலின்
தொட்டுபேசும் அளவுக்கு நெருக்கமானோம்
அடிக்கடி காத்திருக்கும் கடற்கரைசந்திப்புகள்
அமுதமென மாறும் ஐஸ்கிரீம் பகிர்தல்
அருவருப்பென சொல்லிய முத்தபறிமாறல்
அனைத்துமே அரங்கேறியது நமக்குள்ளும்

விதிவிலக்காய் ஆரம்பித்த நம் காதல்
விதியை விலக்கி தான் போனதின்று.
முத்தத்தின் வெம்மையில் தாளாமல்
முகம் நிமிர்கிறேன் நான்.

தலையிலடித்துகொண்டு தாண்டிசெல்லும்
நம் பெற்றோரின் வயதொத்த பெரியவரும்
நம் தங்கையின் வயதொத்த சிறுபெண்ணும்
உணர்த்தினார்கள் வரம்புமீறிய இழிசெயலை...

Friday, April 4, 2008

நள்ளிரவொன்றில்.....

பின்னேரபணியெனதில் இன்று தாமதாகி
நள்ளிரவில் முடித்து கிளம்பினேன்
ஆழ்ந்ததூக்க நேரத்தில் கசக்கிய கண்களுடனே
ஆரம்பித்தேன் வீடு நோக்கிய பயணத்தை..

விசாலமான நெடுஞ்சாலையின் இருபுறமும்
விருட்டென சீறிப்பாயும் கனரக வாகனங்கள்
பயத்துடனே தொடர்கிறது சாலையோரத்தில்
என் பயணமானது...

சிலதூரம் சென்றதும் சாலையொட்டிய
புதரிலிருந்து முகத்திலறைந்த வெளிச்சம்
புரியாது திரும்பி பார்க்கிறேன் ஆங்கே
புதுப்பெண்ணாய் வேடமிட்ட விலைமாதங்கே
பிழைப்புக்காய் காத்திருக்க கனத்த மனதோடே பயணித்தேன்

பயணத்தின் தொடர்தலில் தொடர்ந்தது
பணத்துக்கான விலைமாதுக்களின் வெளிச்சமும்
பரிதாபத்தோட பயணித்த சில நொடியில்
படார் சத்தம் பயத்தோடே நின்றதென் வாகனம்

முகம்தெரியா அளவுக்கு சிதைந்து போய்
குருதியொழுகிய நிலையில் துடிக்கிறது
அவனது கால்கலோடு என் மனதும்
புரிதலின் தாமதத்தில் நிலைக்கு வருவதற்குள்
நின்று விட்டது துடிப்பும் உயிருமே..

எதுவுமே செய்ய முடியா இயலாமையின்
கோபத்தில் மீண்டுமே தொடர்ந்தது
என் வீடு நோக்கிய நள்ளிரவின் பயணம்.

அதிர்ச்சியினோடே படுக்கையில் சாய்கிறேன்
அடுத்தடுத்து வந்து போகிறது என்னில்
விலைமாதுகளின் வெளிச்சமும்
முகம்தெரியா மரணத்தின் இருட்டும்......