CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, September 26, 2008

முதல்மழை
குருவிகளும் காக்கைகளும் சப்தமிட்டு கொண்டிருந்தது.பொழுது விடிந்துவிட்டதாய் எழுந்து முகம் கழுவி தன்னுடைய அழுக்கு சட்டையும் கால்சட்டையும் எடுத்து மாட்டிகொண்டு மெக்கானிக் கடைக்கு புறப்பட்டான்.

சிவாவுக்கு வயது ஒன்பது.இரண்டாம் வகுப்பு படித்திருந்த சமயம் தினமும் அவன் அப்பா குடித்துவிட்டு வர ஆரம்பித்திருந்தார்.சிலநாட்களில் வீட்டில் தினமும் சண்டை,அழுகை என மாறிபோனது.

பட்டினி,உதை என்பதாய் இருந்த அவன் அம்மாவுக்கு உடல்நிலைசரியில்லாமல் போய் ரொம்பவே சிரமப்பட்டாள்.அப்பனின் இந்த போக்கை அவ்வளவாய் அறியாமல் போனாலும் அவன் அம்மாவின் அழுகையையும் சிரமத்தையும் பார்த்து அவனே வேலைக்கு போவதாய் முடிவெடுத்து பள்ளியை விட்டு நின்று மெக்கானிக் கடைக்கு வேலைக்கு போக ஆரம்பித்தான்..

இரண்டுவருடங்களாக இவனின் சம்பாத்யம் தான் அவன் அம்மாவின் மருந்துசெலவுக்கும் அரைவேளை கஞ்சிக்குமென இருந்தது.இதிலும் அவன் அப்பா காசை பிடுங்கி கொண்டால் அன்றைய இரவு பட்டினியாகவே முடியும்.

குடித்துவிட்டு வந்து அவர் செய்யும் அட்டகாசங்களை தடுக்கமுடியாதவனாய் அழுதுகொண்டே வேலைக்கு செல்வது இவன் அன்றாட வாழ்க்கையாகியிருந்தது.

நேற்று இரவும் இப்படிதான்..எழுந்து வழக்கம் போல வேலைக்கு சென்றுகொண்டிருந்தான்.சிவா வின் கடைக்கு அருகில் தான் பள்ளிகூடம்.
ஒன்பது மணியானால் ஒலிக்கும் இறைவாழ்த்தை கேட்கையில் சிவாவுக்கு கண்ணில் கண்ணீர் மளமளவென வந்துவிடும்..

இன்றும் அப்படி தான்.வேலைசெய்துகொண்டே இறைவாழ்த்தை முணுமுணுத்துகொண்டே இருந்தான்..
"பெரிய தொரை இவரு..பாட்டு பாடுறாரு" ன்னு கையிலிருக்கும் ஸ்பேனரில் முதுகிலே அடித்தான் அவனுடைய ஓனர்..

அழுதுகொண்டே தன் அப்பனை நொந்துகொண்டு வேலையைதொடர்ந்தான்.
சாயங்காலம் அம்மாவுக்கு மருந்து வாங்கணும் பணம்கொடுங்க என்று கேட்டு மருந்தை வாங்கிகொண்டு வீட்டுக்கு விரைந்தான்.அங்கு அவன் அப்பா கையை பிசைந்துகொண்டு உட்கார்ந்திருந்தார்.
இவன் சென்றதும் ஹேய் காசு இருக்கா,குடுடா எனகேட்டார்,
இல்லப்பா இருந்த காசுக்கு மருந்து வாங்கிட்டு வந்தேன்.சுத்தமா இல்லப்பா"ன்னு சொன்னான்.

என்னடா இப்ப மருந்து தான் முக்கியமோ அப்படீன்னுகையில் இருந்த மருந்தை பிடிங்கி கொண்டுபோய் மெடிக்கலில் கொடுத்து காசு வாங்கி குடித்துவிட்டு வந்து அவன் அம்மாவை அடித்து உதைக்க ஆரம்பித்தார்.ஏற்கனவே உடல்நிலைசரியில்லாத அவளோ உயிர்போகும் நிலையில் கிடந்தாள்.

"இன்னையோட நான் போயிடுவேண்டா.நீ இந்தாளை நம்பாத.உன்னைவித்து கூட குடிக்க தயங்கமாட்டான்.நீ எங்கயாச்சும் போய் பொழச்சுக்கோடா"ன்னு சொல்லும் போதே கண்கள் மூடிபோனது.
"சிவாவின் கதறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்து அவன் அப்பனை திட்டிவிட்டு பொழுதுவிடிந்ததும் பிணத்தை எடுக்கமுடிவு செய்துவிட்டு பெண்கள் அழுதுகொண்டிருந்தனர்.
தலைமாட்டில் உக்கார்ந்த படியே அம்மாவினை வெறித்துகொண்டிருந்தான் சிவா.எல்லாம் முடிந்ததும் அழுதுகொண்டே படுத்துவிட்டான்.கடைசிவரை அவன் அப்பனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.மறுநாள் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி போகையில் வாசல்படியிலே உட்கார்ந்திருந்தார் அவன் அப்பா..
எதுவும் பேசாமல் போய் விட்டான்..இதுவே ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்தது.அவன் அப்பா குடிப்பதை விட்டிருந்தார்..காலையில் எங்கோ செல்வதும் மாலையில் வீடு வருவதுமாய் இருந்தார்.ஒரு வாரம் கடந்து வேலை முடித்துவீட்டுக்கு வரும் போது சிவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம் அவன் அப்பாவின் கண்ணில் கண்ணீர் வந்திருந்தது..டேய் நான் பண்ணினது தப்பு தாண்டா,இனிமே இப்படி பண்ணமாட்டேண்டா,நீவேலைக்கு போகாதே.படிடான்னு "கட்டிபிடித்து அழுதுகொண்டே அவனுக்கான பள்ளி சீருடையை எடுத்து கையில் திணித்தார்..அவனுக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.
இவனும் தன்னுடைய தாயினை நினைத்து கண்ணீர் வடிக்க தொடங்கினான். நீ நல்லா படிக்கணும்டா ன்னு அவன் அப்பாவின் குரலில் அம்மா தெரிந்திருந்தாள். வெளியில் மழைவர தொடங்கியிருந்தது.
சிவா ஆனந்த கண்ணீரோடு மழையில் நனைய தொடங்கினான்.அவனுக்கு இது முதல்மழையாய் தெரிந்தது...

சிவாவின் அப்பா கையில் துண்டை வைத்துகொண்டிருந்தார் அவனின் தலைதுவட்ட........

Thursday, September 25, 2008

ஒரு சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:01திரும்ப காதலைசொல்லும் தருணங்களை தேடிய என் இரவுகள் எல்லாம் தூக்கமின்றி தொலைந்து போயிருந்தது.நினைவுகள் உன்னை பற்றிய நினைவுகள் மட்டுமே எனக்கு தூக்கமாயிருந்தது.நான் தூக்கத்தை தேடவில்லை இரவுகளில்.என் துக்கத்தை மட்டுமே போக்குவதற்கு வழிதேடி கொண்டிருந்தேன்.ஆம் உன்னிடம் காதல் சொல்ல வழிதேடினேன்.


என் பாடபுத்தகங்களில்,கையில் கிடைக்கும் தாள்களிலெல்லாம் நான் மட்டுமல்ல.என் பேனாவும் பிதற்றிகொண்டிருந்தது உன் பெயரை மட்டுமே!உன்பெயர்மட்டுமே அலங்கரித்தது என் வாழ்க்கையை என்று நினைத்திருந்தேன் அப்போது.உனைகாணும் தருணங்களை தவிர புன்னகையை மறந்து போயிருந்தது என் உதடுகள்.வேறு யாரிடமும் என் புன்னகையை நான் காட்டவிரும்பவில்லை என்பதை விட வராமல் இருந்தது என்றே சொல்லலாம்!


உன்னிடம் புன்னகைக்கும் போது கூட இதயத்தில் வலி இருந்துகொண்டே இருக்கும்.நீ என்னை சற்றும் பாராததினால்!உன் பார்வை என் மேல் விழுவதற்காகவே காலையிலிருந்து மாலை வரை உன்னை சுற்றி வந்து கொண்டிருப்பேன்.வட்டத்துக்குள் வந்துவிட்ட என்னை பார்த்திருந்தும் பாராமுகம் காட்டியிருந்தாய்!


வலிதாள முடியாத இரவொன்றில் என் சிந்தையும் பேனாவும் உனக்காக ஒரு கவிதை எழுத துடித்தது.நள்ளிரவு ஒருமணியிருக்கும் என் முதல்கவிதை ஜனனிக்கும் போது!


என்னவளே!

உன் மௌனம் தூக்கத்தை

கலைத்து போனது.

-எதிர்பார்க்கிறேன்

உன் இதழ்களின் இயக்கம் துக்கத்தை

கலைக்குமென!!!!!


வலிகளுக்கு பின்னால் பிறந்த குழந்தையை காணும் ஒரு தாயின் மகிழ்ச்சியைகொண்டிருந்தேன் இந்த வலிகளை வரிகளாய் எழுதிவிட்டு!


அடுத்தநாள் காலையில் என்னுடைய காதலை உன்னிடம் சொல்லிவிட முயற்சித்ததில் வழக்கத்தை விட அதிகமாகவே தோற்றுபோயிருந்தேன்.இயலாமையின் உச்சக்கட்டத்தில் இருந்தேன் நான்!


உன்னுடன் படிக்கும் என் மாமன் மகளிடம் உன்மீதான காதலை சொல்லவே எனக்கு பலமணித்தியாலங்கள் பிடித்திருந்தது.வேறு வழியே இல்லை என இயலாமையின் காரணமாய் அவளையே தூதூவாய் அனுப்பியிருந்தேன்.

காதலுக்கு தூதென்பது அந்தகாலம் முதல் உள்ளது தானே!


ஒரு அரையாண்டு தேர்வை எழுதிவிட்டே அங்கலாய்த்துகொண்டிருந்தது என் மனது முடிவை எதிர்நோக்கி!உன்னை எதிர்பார்த்ததை விட என் மாமன் மகளை இன்று அதிகமாய் எதிர்பார்த்திருந்தேன்!மாலை பொழுது எனக்கு அதிக வேதனையும் எதிர்பார்ப்பை உடையதாயும் இருந்தது!


அவளின் பதிலில் குருதி லேசாகவழிந்தது என் கண்ணில்.ஆம் இதயவலியில் வெளிப்படும் கண்ணீர் குருதிகலந்ததாக இருந்தது.அது இன்னமும் என் வலியை அதிகபடுத்தியிருந்தது.


இப்போது காதலை பற்றிய யோசனைகள் இல்லையெனவும் படிப்பு முடிந்தவுடன் வீட்டில் திருமணம் என்றும் சொல்லி வைத்திருந்தாய்.வாழ்க்கை நழுவி விட்டதாய் நடக்க ஆரம்பித்தேன்!ஆனால் உன்னை பார்ப்பதை விடுவதாய் எண்ணம் இல்லை எனக்கு!


ஆறு மாதங்கள் கழித்து ஒரு கடைசி நாளின் தேர்வுக்காய் நீயும் நானும் எதிரெதிரே அமர்ந்து படித்துகொண்டிருக்கும் போது நல்லா இருக்கீங்களா என்ற உனது விசாரிப்பில் நான் கொண்ட மகிழ்ச்சி தான் மகிழ்ச்சிக்கே உச்சம் எனசொல்வேன்.


இதுதான் நீ என்னிடம் பேசிய முதல்வார்த்தை.திறக்கபடாத சிப்பியிலிருந்து திடிரென வெளிவரும் முத்துக்களை காண்கையில் எத்தனை மகிழ்ச்சி இருக்கும்.அது எனக்கு அப்போது இருந்தது.


அது தான் நான் உனை காணும் கடைசி நாளென்று அறியாமல் இருந்தேன்.மாலை பேருந்துக்காக நீ காத்திருக்கையில் கடைசியாய் நீ புன்னகையை எனக்கு தந்திருந்தது..அது எனக்கு இரண்டு மாதங்கள் கழித்து உனை மீண்டும் பார்ப்பேனா? மாட்டேனா ? என்ற கேள்வியையும் கேட்டுகொண்டிருந்தது!


உனை மீண்டும் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துகொண்டு...


தொடரும்......

Tuesday, September 23, 2008

சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:00

என்னுடைய இதயம் சிதைக்கபடாமல் இருந்தது.முன்னொரு காலத்தில்.அது எனக்கு வசந்தகாலங்களாய் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள் என்னை எதிர்நோக்கி கொண்டிருப்பதாய் இருந்தது,ஆம் அப்போதெல்லாம் உன்னுடன் நான் இருக்கும் ஒவ்வொரு நொடிகளையும் இதயத்தில் செதுக்கி வைத்துகொண்டிருந்தேன்.

முதல் முதலாய் நான் உனை பார்த்த அந்த கணம் எனக்கு அலாதியான மகிழ்ச்சியை தந்திருந்தது.அதுவே உன்னை மறுபடியும் பார்க்க தூண்டியிருந்தது,எனக்கானவளை நான் கண்டுவிட்டதாய் நினைத்திருந்தேன்.
அப்படி தான் நீயும் என்னில் நுழைய ஆரம்பித்திருந்தாய்.

மாலை பொழுதானால் வீடு தேடிவரும் பசுவை பார்த்ததும் ஓடிபோய் மடிமுட்டும் கன்றினை போல் காத்து கிடந்திருப்பேன்.அந்த காத்திருத்தல்கள் எல்லாம் சுகமாகவே இருக்கும் அப்போது.பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒரு பெண்ணின் வலிகளையும் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஒத்ததாய் இருந்தது என் எண்ணங்கள் உன்னிடம் என் காதலை சொல்லும் வரை!

ஒரு கொடுரமான கொலைகாரனின் திட்டங்களை ஒத்திருந்தது என் பொழுதுகள்.சந்தர்ப்பம் தேடிகொண்டிருக்கும் நினைவுகள் எல்லாம் என் காதலை சொல்லிவிட.காதல் சுகமென்று படித்துவிட்டு அதில் இந்த மாதிரியான
சொல்லமுடியாத வலிகளை காணும்போதெல்லாம் காதல் என்ற வார்த்தையை கண்டுபிடித்தவனை திட்டி தீர்த்துகொண்டிருக்கும்.

ஆயினும் உன்னை கண்ட அடுத்த சிலநொடிகளில் காதல் என்ற வார்த்தையை கண்டுபிடித்தவனுக்கு கோவில் கட்டிவிட தோன்றும்..வார்த்தையை கண்டுபிடித்தவனுக்கே கோவில் என்றால் என் வாழ்க்கையில் நான் கண்டெடுத்தவள் நீ!

உன்னை நான் சொல்லமுடியாத ஒரு இடத்தில் வைத்திருந்தேன் என்பேன்.அதுவே காதலின் உச்சம் எனவும் சொல்ல நினைக்கிறேன். நான் உன்னை பார்க்கும் அந்த கணங்களை தான் காதலுக்கான உண்மையான அர்த்தங்கள் என சொல்வதிலும் பெருமைகொள்வேன்..

நெரிசல்களுக்கிடையில் சிக்கி திணறி எனக்காக என் தாய் தந்தை இறைவனை வேண்டியிருந்த திருவிழா கூட்டங்களில் முட்டி மோதி அருகில் வந்து உன் தாவணி முந்தானையில் விரல் தொட்டு சிலாகித்து கொண்டிருப்பேன்..

பந்தை எதிர்நோக்கிய ஒரு கிரிக்கெட் வீரனின் சரியான சமயத்தில் நோக்கும் திறனை நான் பெற்றிருக்காமல் இருந்தேன்.அருமையானதொரு சந்தர்ப்பத்தில் தனிமையில் உன்னை சந்தித்த போதும் ஒரு ஊமையை ஒத்திருந்தது என் கணங்கள்.

சூரியனை மிக அருகில் பார்க்கமுடியாத விண்வெளி வீரனை போலிருந்தது.உன் அருகில் நின்று என் காதலை பிரசவிக்க தவித்த நொடிகள்.என் கண்கள் உன் கண்களை நேரடியாய் பார்க்கமுடியாமல் தலை கவிழ்ந்து நான் நின்றது போருக்கு பாதி வரை சென்று புறமுதுகு காட்டி திரும்பி ஓடியவனை ஒத்திருந்தது என் அசைவுகள்..

திரும்பி நடந்துகொண்டிருந்தேன்.திரும்ப காதலை சொல்லும் தருணத்தை தேடி......................

தொடரும்......

Thursday, September 18, 2008

மழையும் பெண்ணின் முத்தமும்

திடீரென்று பெய்யும்
மழையில் ஒதுங்கி
நிற்கிறேன்!

திருக்கோயில் தேவதை
நீ நனையாத வரைக்கும்!
*******************************************
அந்த நனைதலின்
முடிவில் குளிரின்
தன்மை போக்குவதாய்
தரப்பட்ட முத்தத்தின்
வெம்மையில் மழையை
திரும்பவேண்டுகிறேன்!
***********************************************

பூங்காவில் அமர்ந்திருந்த
அந்த தருணத்தில் வந்துவிட்ட
மழையினை பொருட்படுத்தாமல்

மனம் விட்டு பேசியிருந்தோம்!
உதடுமட்டும் விட்டதாயில்லை!
**************************************************
மழையை நான் ரசிப்பதற்கு
காரணம் கேட்கிறாய் நீ!

நான் மழையை விட
அதில் நனையும் உன்னை
ரசிப்பதற்கு ஆயிரம் காரணங்கள்
சொல்லுவேன் என தெரிந்தே
****************************************************
ஜன்னலோர மழைதுளி
கொஞ்சல்களில் உன் முகபாவங்களை

ரசித்து கொண்டேயிருக்கலாம்.
இயற்கையின் விசித்திரபடைப்பை
**************************************************
பெரும்பாலான மழைநேரங்களில்
மழை வரும் போது ஆரம்பித்திருப்போம்
முத்தத்தை மழையாய் நாம்!

மழை விட்டிருந்தாலும்
விட்டிருக்காது முத்தமழை!
********************************************************

நிலாப்பெண்...

பெரும்பாலானோர்
நிலாச்சோறு தின்றிருக்கலாம்!

நான்
மட்டும் தான்
நிலவின் கையாலே
சோறு உண்கிறேன்!
************************************************
எல்லாருக்கும்
அமாவாசை வந்திருக்கும்!

எனக்கு மட்டும்
வருவதாகவே இல்லை
தினம் உன் தரிசனத்தால்!
*************************************************
கதிரவனையும்
நிலவையும் ஒருசேர

பார்க்கமுடிகிறது
நீ வரும் போது மட்டும்!
*************************************************
நிலவை முதலில்
தொட்டது வேண்டுமென்றால்
ஆம்ஸ்ட்ராங்காக இருக்கலாம்!

நிலவை
தொட்டுக்கொண்டே இருப்பது
நான் மட்டும் தானே!
***************************************************
எல்லாருக்கும்
சூர்யோதயமே விடியலாயிருக்கும்!

எனக்கு மட்டுமே
சந்திரோதயம் விடியலாய்
இருக்கும்!

எனதறையில் உன்புகைப்படம்!
*****************************************************
நிலாவில்
கால்பதிக்க எத்தனையோ
பேர் ஆசைபடலாம்!

நிலாவில்
உதடுபதிக்க மட்டும் தான்
எனக்கு ஆசை!
*****************************************************
சந்திரகிரகணத்தன்று
யாரும் நிலவை
பார்க்க கூடாதென
செய்தி படிக்கிறேன்!

நிலவை அருகில்
பார்த்து கொண்டு!
********************************************************
நிலவை பெண்ணாய்
உருவகித்து எத்தனையோ
கவிதைகள் வந்திருக்கும்!

நிலவே உருவமென்று
நான் எழுதிகொண்டிருக்கிறேன்
உன்னை பற்றி!
******************************************************

Monday, September 15, 2008

சிதைவுறும் மனவெளி..

என் மனவெளியானது
விரிந்தும் விசாலமானதாகவுமே
இருக்கிறது..

சந்தோசங்களையும்
துன்பங்களையும் தாங்ககூடியதாகவே
இருக்கிறது!

தாங்கி கொண்டும்
தான் இருக்கிறது!

அதிகபட்ச சந்தோசங்களை தாங்கிய
ஒரு காலையும்
அதிகபட்ச துன்பங்களை தந்துபோன
ஒரு மாலையும்

என் மனவெளிக்குள்
பயணம் செய்கையில்
கனம்தாங்க முடியாத மனவெளியானது
பின்னிரவில் வெடித்து சிதறி

ஒரு வட்டத்துக்குள்
விழுந்துவிடுகிறது!

சிதறிய நினைவுகளை கோர்த்து
வட்டத்துக்குள்ளாகவே பயணம்
செய்துகொண்டிருக்கும் மனவெளியின்

தொலைந்து போனதொரு
நினைவலையை தேடி
வட்டம் தாண்டி பயணிப்பதற்காய்

மீண்டும் வெடித்து வெளித்தள்ள
பட்டது இன்னொரு வட்டத்தில்!

வட்டங்களை உருவாக்கி கொண்டிருக்கிறது கல்!
குளம் தாங்கிய படியே இருக்கிறது!

எரிந்துகொண்டிருக்கிறது ஒரு கவிதை

அந்த கவிதை
அவர்களால் தான்
படைக்கப்பட்டது

எனக்கு
பிடித்தமானதால்
அந்த கவிதை
என்னால் ரசிக்கபட்டது!

ரசித்தலின் ஆழத்தில்
அந்த கவிதை
என்னால் காதலிக்கப்பட்டது!

அந்த கவிதையும்
என்னை காதலித்திருந்தது!

படைத்தவர்களின்
வலியுறுத்தலோ வற்புறுத்தலோ
அந்த கவிதை
என்னிலிருந்து பிடிங்கபட்டது!

ஆம்
அந்த கவிதை
வேறொருவனுக்கு
கொடுக்க பட்டுவிட்டது!

அந்த கவிதை
அவனால் அனுபவிக்கபட்டது!

இல்லை இல்லை
அந்த கவிதை
அவனால் கசக்கபட்டிருந்தது!

அவனின்
ரசனையில்லாமையால்
அந்த கவிதை
எரிந்து கொண்டிருக்கிறது!

ஆம் எரிந்து
கொண்டிருக்கிறது
என் மனமும்! காதலும்!

காதிலிக்க கற்றுக்கொள்!!

எல்லாம் இருந்தும்
தொலைந்து போயிருந்தது
இன்றைய நாளின் மகிழ்ச்சி

நீ வராததால்!
*****************************************
யாதுமற்ற ஒருபொழுது
எல்லாம் தந்து சென்றது..

நீ வந்து போனதால்
********************************************

காதலிக்க கற்றுகொள்வதாய்
ஆரம்பித்த என் தேடலில்
முதலில் கண்ணில் பட்டது

உன் கடைக்கண் பார்வை..
காதலிக்க கற்றுகொள்கிறேன்
இப்போது
********************************************
ஒரு வருடபிரிவின் முடிவில்
நீ தந்த முத்தத்தின் ஈரம்
ஒரு வருடத்தின் முன்
நீ தந்த முத்தத்தின் வறட்சியை

ஈரமாக்கி விட்டது..
இன்னும் நீ என் உதட்டை விடுவதாயில்லை
நானும் தான்!
**********************************************
உன் வருகையை
எதிர்பார்த்திருக்கும் என் பொழுதுகளுக்கு
பொழுதுபோக்கு நேற்றைய
உன் பார்வையும் கொஞ்சல்களும் தான்

காத்திருத்தலும்
அதிலுள்ள சுகங்களையும்
கற்றுகொண்டிருக்கிறேன்
************************************************
செய் !
எதாவது செய்!
பாடலை கேட்கும் [போதெல்லாம்
நேற்றைய அந்த
அழுத்தமான முத்தம் நினைவில்
வரமால் இல்லை
************************************************
காதலை முழுமையாய்
கற்றுகொள்ள ஆசை!

உன்னை உடனடியாய்
மணமுடித்து
கொள்ள சொல்கிறது காதல்!
***************************************************
காதல் சொன்னபடி
செய்து முடித்தாயிற்று

எனக்கே சொந்தமாகி
போயிருக்கிறது காதல்!
*
*
*
*
காதலிக்க கற்றுகொள்!
*******************************************************

Friday, September 12, 2008

அனுதாபமில்லாத மனிதன் நான்.....

என்னால்
இப்போது அனுதாபபடக்கூட
முடியவில்லை!

ஒரு சமூகமே
உரிமையிழந்ததல்லாமல் உயிரையும்
இழந்துகொண்டிருக்கிறார்கள்!

என்னால்
இப்போதும் அனுதாபபடக்கூட
முடியவில்லை!

சமூகத்துக்காய் போராடிய
போராளியொருவனின் படை
அரசியல் சித்துவிளையாட்டுகளில்
செத்துவிட்ட ஒருவருக்காய்
தடை செய்யப்படிருப்பதில் வருத்தமில்லை!

ஒரு சமூகமே
இன்றளவும் அழிந்து கொண்டிருக்கையில்
அனுதாப படக்கூட முடியவில்லை
என்பதில் எனக்கு வருத்தம் தான்!

எதிர்த்து பேசிவிட
துணிவில்லாமல் இல்லை
எதிர்த்து பேசிவிட
துணை தான் இல்லை..

சட்டம் திட்டம் போட்டு
எனை சிக்கலுக்குள் ஆழ்த்தலாம்
என அறிவுரைகள் வீழ்த்திவைக்கிறது!

அனுதாப பட்டால் கூட
சட்டசிக்கல் வந்து கொக்கரித்து
கூப்பாடு போடுமென்றால் எப்படி?

சாபம் பெற்ற சமூகம் அழிய
தூபம் போடுபவன் தலைவன்
கோபபடுபவன் தீவிரவாதி! -அனு
தாபப்படுபவன் ??????????

என்னால்
இப்போது அனுதாபபடக்கூட
முடியவில்லை!

சட்டத்தை திருத்த முயலவேண்டாம்!
சட்டத்தை திருப்ப முயலாமலிருங்கள் போதும்!

Thursday, September 11, 2008

அது வனாந்திரமாயிருக்கலாம்.....

அந்த இடம் இப்போது
வனாந்தரமாகியிருக்கிறது.
நான் வழக்கமாய் செல்லும்
இடம் தான் அது!

இருளில் மூழ்கிய ஓங்கி
உயர்ந்த மரங்கள் விசித்திரமாய்
காட்சியளிக்கின்றது!

பாதைகளில் உள்ள பள்ளங்களை
என்னால் அறியமுடியவில்லை
மனிதர்கள் அங்கிருப்பார்களா
என சந்தேகத்துடன் இன்னும்
உள் நுழைகிறேன்!

மின்மினி பூச்சிகளோடு
போட்டியிடமுடியாத வெளிச்சங்கள்
ஆங்காங்கே தெரியாமலில்லை

நம்பிக்கையோடு நகர்கிறேன்
மேல்சட்டை இல்லாத ஆண்கள்
காற்றுக்காய் வீதியில் வீரியமான
விவாதம் நிகழ்த்திகொண்டிருக்கிறார்கள்!

வரலாற்றில் படிப்பிக்கபட்ட
பழங்காலத்துக்குள் நுழைந்து
விட்டதான சந்தேகம் எனக்குள்!

நான் செல்லநினைத்த இடத்தை
இப்போதடைந்திருந்தேன்!
அது என் வீடுதான் என்பதில்
எனக்கு ஐயமில்லாமல் இல்லை!

அச்சச்சோ
தேவயாணி என்ன ஆனாளோ?
அம்மாவின் குரல் சொல்லிவிட்டது
எங்கள் வீடு தான் என!

தீடிரென வந்த வெளிச்சம்
என்னை இக்காலத்திற்கு
அழைத்து வந்திருந்தது..

வெளிச்சத்தையே இப்போது தான்
பார்ப்பது போல் குழந்தைகள்
கூச்சலிடுகின்றனர்

கோலங்களுக்காய் போடப்படும்
தொலைகாட்சி பெட்டியில்
அவசர செய்திகளாய்

"மின்வெட்டினால் தற்கொலை
செய்துகொள்ளும் நிலை-
புலம்பும் சிறுதொழிற்துறையினர்"

"மற்ற மாநிலங்களிலும்
இப்படி தான் - மத்திய
அமைச்சர் அறிவிப்பு"

அறிவியல் வளர்ந்தாலும்
அரசியலை மாற்றமுடியாது
அடிமனதில் ஓடிகொண்டிருக்கிறது!!

Wednesday, September 10, 2008

எழுதி ம(மு)டித்த கவிதை!!!!

நீ என்னிடம்
சொல்லிவிட்டு செய்திருக்கலாம்
நானும் உன்னுடனே
அதை செய்திருப்பேன்!

பார்
இப்போது நீ மட்டும்
தனியாக சென்றுவிட்டாய்
நான் தனிமரமாகவே
நின்றிருக்கிறேன்!

எதை செய்வதானாலும்
இதயமே செய்யவா என
கேட்டுகொண்டிருப்பாயே!

இதை மட்டும் ஏன்
நீ கேட்க மறந்தனையோ
இல்லை கேட்காமல்
மறைத்தனையோ!

தந்தையின் சாதீயத்தில்
தாயின் பணத்தாசையில்
போராடி வென்றுவிடுவதாய்
சொல்லியிருக்கிறாய்!

என்னிடம் சொல்லாமலே
இப்போது சென்றிருக்கிறாய்!
நானும் இப்போது உன்னிடமே
வந்து விடுவதாய் முடிவெடுத்துவிட்டேன்!

இந்த கவிதையை எழுதி
முடிக்கும் இந்த கணத்தில்
நானுண்ட நஞ்சும் உன்னிடம்
அனுப்பிகொண்டிருக்கிறது!

வருவேன்! கவிதையை
தொடர்ந்து காவியமொன்றினை
படைத்து விட!!!!!!!!

நோக்க நோக்க

பேருந்து பயணம்

நானும் நோக்கினேன்
அவளும் நோக்கினாள்
அவள் அன்னையும்
என்னையே நோக்கினாள்!!

நான் அடுத்த சீட்டிலுள்ள
பெண்ணை நோக்கினேன்!
அவளும் நோக்கினாள்
இவளும் நோக்கினாள்
அவளன்னையும் நோக்கினாள்!

நான் அந்தரத்து கூரையை
நோக்குகிறேன்
யாரும் என்மீது கை
நோக்காமலிருக்க!

நான் மீண்டும் காதலிக்கிறேன்..

எனக்கு
எப்போதெல்லாம் தோன்றியிருக்கிறதோ
அப்போதெல்லாம் தோன்றியிருக்கிறேன்!
உனக்கு முன்பாக!!

உனக்கும்
அப்போதெல்லாம் என் நினைவுகள்
வந்து போவதாய் சொல்லிடுவாய்!

~ஆம்~
நாம் அப்போது காதலித்து
கொண்டிருந்தோமென
நினைக்கிறேன்.

வாடிய உன் தலைப்பூவோடு
என் காதலையும் ஒரு அந்தி
மாலையில் உன்னால் வீசியெறியப்பட்ட
போது தான் உணர்ந்தேன்!

ஒரு அர்த்தமற்ற கவிதையை
ஆறு வருடங்களாக எழுதி
கொண்டிருந்தமையை!

எனக்கும் அதில் வருத்தம் தான்!

எனினும்
மீண்டும் காதலிப்பது என
முடிவு செய்திருந்தேன் நான்!


ஆம்
இப்போது நான் மீண்டும்
காதலித்து கொண்டிருக்கிறேன்

வெற்றிலைகுடுவையின் டொக் டொக்
சத்தத்தில் வெறுத்தொதுக்கிய என்
இறந்து போன பாட்டியின் பாசத்தையும்

தலைவலிக்கான மருந்து மட்டுமல்லாமல்
அலைபோலடிக்கும் அன்னையின்
அன்னையின் அன்பினையும்

கால் இடறி கீழிருந்த தருணங்களில்
தோள்பிடித்து தூக்கி நிறுத்திய
தந்தையின் உன்னத உணர்வினையும்

நான் இப்போது
மீண்டும் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்!

இப்போது என்பக்கங்கள்
அர்த்தமுள்ள கவிதையெழுதி
கொண்டிருக்கிறது!

இன்னொன்றும் சொல்லிகொள்வதில்
நான் பெருமைபடுகிறேன்!

நான் இப்போது
காதலிக்கபடுகிறேன்!

விதை முளைக்க ஆரம்பித்தாயிற்று!

Tuesday, September 9, 2008

எனக்குள் ஒரு தாக்கம் தபூசங்கர்-3

முத்தம்

உன் எல்லாசெயல்களையும்
கண்கொட்டாமல் பார்க்கும் நான்
நீ முத்தமிடும் போது மட்டும்
பதில்கொடுக்க மறப்பதில்லை..
**************************************************
எத்தனை வேண்டுமானாலும்
தருகிறேன் என்கிறாய்!
எத்தனை வேண்டுமானாலும்
தந்துவிடு என்கிறேன் நான்!
உதட்டோடு உதடாய் இருந்தால்
*****************************************************
நீ கேட்கவே வேண்டாம்
நானே தருவேன் என்கிறேன்..
நீ கேட்க வாய்ப்பே இல்லையென
இதழ்கவ்விகொண்டிருக்கிறாய் நீ!
****************************************************
நீ ஒன்று
நான் ஒன்று
என மாறிமாறி கொடுக்கிறோம்
நாம் ஒன்று என்று மாறாமல்
இருக்கிறது முத்தமும் காதலும்
*****************************************************
இந்த முத்தம் மட்டும்
அதிக உஷ்ணமாயும்
அதிக காதலோடும் இருக்கிறது!
தாமதமாய் வந்ததற்கு
தண்டனையாய் அரைமணிநேரமுத்தமா!


இப்படியான முத்தம் தொடருமானால்
இப்படியாகவே தாமதமும் தொடரும்..
***************************************************
சத்தம் போடாமலிருந்தால்
முத்தம் கிடைக்குமென்கிறாய்
முத்தம் கொடுத்தாலே
சத்தம் வராதென்கிறேன் நான்!

உள்நாக்கில் உயிரை செருகும்
உச்சந்தலை மயிர்கூச்செறியும்
முத்தவித்தையை உன்னையன்றி
வேறெவரறிவார் சொல்லடி?
******************************************************

எனக்குள் ஒரு தாக்கம்-தபூசங்கர் -2

கன்னங்கள்..

அரைமணிநேரமாய்
பேசிகொண்டிருக்கிறாய்..
வாழ்நாள் விமோட்சனம்
அடைந்துவிட்டதாய் கூச்சலிடுகிறதுசெல்போன் பொத்தான்கள்..
*******************************************************
அழகான கன்னமென
சொல்லி கிள்ளுகிறாய்
பக்கத்துவீட்டு குழந்தையை!
தன்னுடையதை விட
உன்னுடையது அழகென
பொறாமையில் அழுகிறது குழந்தை
*********************************************************
நீ கொடுத்த
சாக்லெட்டுக்காக உன்
கன்னத்தில் முத்தமிடும்
உன் தம்பியின் உதடுகளாய்
பிறக்கவில்லையென
குறைப்பட்டுகொண்டிருக்கிறேன்..
**********************************************************
வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காய்
நீ தடவும் அழகுசாதனங்கள்
உன் கன்ன அழகை ஒருபடி
குறைத்து விடுகிறது
தெரியுமா?
*******************************************************
கற்பனையில் வரையகூட
முடியாத உன் கன்னத்தை
கவித்துவமாய் செதுக்கிவிட்ட
பிரம்மன் மீதெனக்கு
சத்தியமாய் பொறாமை தான்!
**********************************************************
உன் கன்னம் கிள்ளிவிட்ட
எனக்கு தண்டனை தருவதற்காய்
என்னை அழைக்கிறாய்..
இன்னொருமுறை கிள்ளிவிட்டு
மரணமெய்த தயாராகிவிடுகிறது மனது
**********************************************************

Friday, September 5, 2008

நிர்ணயமில்லா முடிவுகள்-( 100 ஆவது பதிவு)

அந்த முடிவின் ஆரம்பத்தில்
அந்த முடிவை யூகித்திருக்கவில்லை.

இப்படிதான் எல்லாமுடிவின்
ஆரம்பமும் என்று கூட சொல்லலாம்..

ஆனால் எதாவதொருமுடிவினை
எதிர்பார்க்காமல் ஆரம்பித்ததில்லை.

சிலநேரங்களில் சிலகாரணங்களில்
முடிவை நிர்ணயித்துவிடமுடிகிறது..

வேறொரு முடிவையும் அதற்கான
பலகாரணங்களும் வந்துவிடுவதில்
பெரிதான ஆச்சர்யமொன்றுமில்லை தான்!

செயலுக்கான முடிவு நிர்ணயித்தலோ
நிர்ணயமில்லாத முடிவோடு செயலோ

நடக்காமல் இருந்ததே இல்லை...

கவிதை எழுதுதலும் அழித்தலும்
நடந்துகொண்டு தானிருக்கிறது....

Wednesday, September 3, 2008

நீ தராமலிருந்திருக்கலாம்....

நீ அந்த
முத்தத்தை தராமல்
இருந்திருக்கலாம்!

நான் அந்த
முத்தத்தை பெறாமல்
இருந்திருக்கலாம்!

காதலர்களின் அடையாளங்களை
தேடி சுற்றிய காலங்களில்
கடற்கரையில் முத்தமும்
அடையாளமென அதையும்


நீ தந்துவிட்டாய்!
நான் பெற்றுவிட்டேன்!

நீ இல்லாத
இல்லறத்தில் சுற்றிய
இடங்களிலெல்லாம் உன்
இடத்தினில் இல்லாளை
வலியநுழைக்க முடிகிறது!

நுழைத்து கொண்டு தானிருக்கிறேன்!

உன் இடத்தில் அவளை
நிறுத்திவிடுவதில் அவ்வளவு
சுலபமானதாய் இல்லை,

இருந்தும் முடிகிறது என்னால்!

எனக்கான என் மனைவியின்
முத்தத்தில் மட்டும் அவளை
பார்க்க முடிவதே இல்லை...

நீ
அந்த முத்தத்தை
தராமலிருந்திருக்கலாம்!

நானும்
அந்த முத்தத்தை
பெறாமலிருந்திருக்கலாம்!

நான்
அந்த முத்தத்தோடு
இறந்துமிருக்கலாம்!