CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, July 15, 2009

என் இரக்கத்திற்குரிய ஒரே கடவுளுக்கு!


பொழுதுபோக்கிற்காகவோ
பிழைப்பு நடத்துவதற்காகவே
என் பாதங்களில் நசுங்கி மடியும்
சிற்றுயிரிலிருந்து என் கண்களுக்கு
எட்டாத கிரகங்கள் என எல்லாமும்
படைத்துவிட்டு எங்கேயோ போய்
முகம் மறைத்துக்கொண்டு இருக்கிறாய்!

நீ எனக்கு படைத்த புலன்களை
வரைந்துவிட்டு உன்னை யாம் படைத்து
உன்னிலிருந்தே ஆரம்பித்தோம் எம்மில் பிரிவுதனை!

மதமென்னும் வாளெடுத்துக்கொண்டு
வெட்டி வெட்டி பிரித்தோம்!
உயிர்களை மட்டுமல்ல
இனம் அதற்கொரு மொழி என்று
பலப்பல இத்யாதிகளாய் பிரிந்தோம்!

நீ இயற்கையாய் தரும் மரணங்களையும்
தாண்டி நாமே செயற்கையாய் தருகிறோம்
எமக்கு பிடிக்காதவனுக்கோ
அல்லது பிடிக்கொடுக்காதவனுக்கோ!


இது எல்லாவற்றையும் நீ பார்த்துகொண்டிருப்பதாய்
நாம் வைத்த பெயர்களோடு எம்மவர்களே
உன்பெயரில் அருள்வாக்கு தந்துகொண்டிருக்கிறார்கள்!

என் காதலியின் அழிச்சாட்சியத்தில்
தொலைந்துபோன என் காதலின் முடிவிலிருந்து
நீ இல்லவே இல்லை என்று வாதிட்டுகொண்டிருந்த
எனக்கும் ஏனோ உன் மேல் இரக்கம்
வரத்தொடங்கியிருக்கிறது இப்போதெல்லாம்!

ஆம்
என் இரக்கத்திற்குரிய கடவுளே!

உன்னை மையப்படுத்தியே சுழலவேண்டிய
உலகம்
உன்மேல் பழிசுமத்தியே சுழன்றுகொண்டு
இருக்கிறது!

ஒருவேளை உன் கண்கள் குருடாயிருந்தாலும்
நான் கண்தானம் செய்துவிட்டு இறந்துபோகிறேன்!

எடுத்துப்பொருத்திக்கொண்டு
இங்கு வந்துதான் பார்த்துவிட்டுப்போயேன்
உன் படைப்பின் அவலத்தை!

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

Unknown said...

உங்க கவிதை எல்லாம் ரொம்ப நல்லா இருக்குங்க, நான் உங்க AC ஆயிட்டேன், எத்தனை நாள் விசிறி, பேன்னு சொல்றது அதான் ஹி ஹி