திரும்ப காதலைசொல்லும் தருணங்களை தேடிய என் இரவுகள் எல்லாம் தூக்கமின்றி தொலைந்து போயிருந்தது.நினைவுகள் உன்னை பற்றிய நினைவுகள் மட்டுமே எனக்கு தூக்கமாயிருந்தது.நான் தூக்கத்தை தேடவில்லை இரவுகளில்.என் துக்கத்தை மட்டுமே போக்குவதற்கு வழிதேடி கொண்டிருந்தேன்.ஆம் உன்னிடம் காதல் சொல்ல வழிதேடினேன்.
என் பாடபுத்தகங்களில்,கையில் கிடைக்கும் தாள்களிலெல்லாம் நான் மட்டுமல்ல.என் பேனாவும் பிதற்றிகொண்டிருந்தது உன் பெயரை மட்டுமே!உன்பெயர்மட்டுமே அலங்கரித்தது என் வாழ்க்கையை என்று நினைத்திருந்தேன் அப்போது.உனைகாணும் தருணங்களை தவிர புன்னகையை மறந்து போயிருந்தது என் உதடுகள்.வேறு யாரிடமும் என் புன்னகையை நான் காட்டவிரும்பவில்லை என்பதை விட வராமல் இருந்தது என்றே சொல்லலாம்!
உன்னிடம் புன்னகைக்கும் போது கூட இதயத்தில் வலி இருந்துகொண்டே இருக்கும்.நீ என்னை சற்றும் பாராததினால்!உன் பார்வை என் மேல் விழுவதற்காகவே காலையிலிருந்து மாலை வரை உன்னை சுற்றி வந்து கொண்டிருப்பேன்.வட்டத்துக்குள் வந்துவிட்ட என்னை பார்த்திருந்தும் பாராமுகம் காட்டியிருந்தாய்!
வலிதாள முடியாத இரவொன்றில் என் சிந்தையும் பேனாவும் உனக்காக ஒரு கவிதை எழுத துடித்தது.நள்ளிரவு ஒருமணியிருக்கும் என் முதல்கவிதை ஜனனிக்கும் போது!
என்னவளே!
உன் மௌனம் தூக்கத்தை
கலைத்து போனது.
-எதிர்பார்க்கிறேன்
உன் இதழ்களின் இயக்கம் துக்கத்தை
கலைக்குமென!!!!!
வலிகளுக்கு பின்னால் பிறந்த குழந்தையை காணும் ஒரு தாயின் மகிழ்ச்சியைகொண்டிருந்தேன் இந்த வலிகளை வரிகளாய் எழுதிவிட்டு!
அடுத்தநாள் காலையில் என்னுடைய காதலை உன்னிடம் சொல்லிவிட முயற்சித்ததில் வழக்கத்தை விட அதிகமாகவே தோற்றுபோயிருந்தேன்.இயலாமையின் உச்சக்கட்டத்தில் இருந்தேன் நான்!
உன்னுடன் படிக்கும் என் மாமன் மகளிடம் உன்மீதான காதலை சொல்லவே எனக்கு பலமணித்தியாலங்கள் பிடித்திருந்தது.வேறு வழியே இல்லை என இயலாமையின் காரணமாய் அவளையே தூதூவாய் அனுப்பியிருந்தேன்.
காதலுக்கு தூதென்பது அந்தகாலம் முதல் உள்ளது தானே!
ஒரு அரையாண்டு தேர்வை எழுதிவிட்டே அங்கலாய்த்துகொண்டிருந்தது என் மனது முடிவை எதிர்நோக்கி!உன்னை எதிர்பார்த்ததை விட என் மாமன் மகளை இன்று அதிகமாய் எதிர்பார்த்திருந்தேன்!மாலை பொழுது எனக்கு அதிக வேதனையும் எதிர்பார்ப்பை உடையதாயும் இருந்தது!
அவளின் பதிலில் குருதி லேசாகவழிந்தது என் கண்ணில்.ஆம் இதயவலியில் வெளிப்படும் கண்ணீர் குருதிகலந்ததாக இருந்தது.அது இன்னமும் என் வலியை அதிகபடுத்தியிருந்தது.
இப்போது காதலை பற்றிய யோசனைகள் இல்லையெனவும் படிப்பு முடிந்தவுடன் வீட்டில் திருமணம் என்றும் சொல்லி வைத்திருந்தாய்.வாழ்க்கை நழுவி விட்டதாய் நடக்க ஆரம்பித்தேன்!ஆனால் உன்னை பார்ப்பதை விடுவதாய் எண்ணம் இல்லை எனக்கு!
ஆறு மாதங்கள் கழித்து ஒரு கடைசி நாளின் தேர்வுக்காய் நீயும் நானும் எதிரெதிரே அமர்ந்து படித்துகொண்டிருக்கும் போது நல்லா இருக்கீங்களா என்ற உனது விசாரிப்பில் நான் கொண்ட மகிழ்ச்சி தான் மகிழ்ச்சிக்கே உச்சம் எனசொல்வேன்.
இதுதான் நீ என்னிடம் பேசிய முதல்வார்த்தை.திறக்கபடாத சிப்பியிலிருந்து திடிரென வெளிவரும் முத்துக்களை காண்கையில் எத்தனை மகிழ்ச்சி இருக்கும்.அது எனக்கு அப்போது இருந்தது.
அது தான் நான் உனை காணும் கடைசி நாளென்று அறியாமல் இருந்தேன்.மாலை பேருந்துக்காக நீ காத்திருக்கையில் கடைசியாய் நீ புன்னகையை எனக்கு தந்திருந்தது..அது எனக்கு இரண்டு மாதங்கள் கழித்து உனை மீண்டும் பார்ப்பேனா? மாட்டேனா ? என்ற கேள்வியையும் கேட்டுகொண்டிருந்தது!
உனை மீண்டும் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துகொண்டு...
தொடரும்......
1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
ennga thodarum potutu appadiye vettu irukenga sekaram next part poduga kathai naal a than iruku
Post a Comment