CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, September 10, 2008

எழுதி ம(மு)டித்த கவிதை!!!!

நீ என்னிடம்
சொல்லிவிட்டு செய்திருக்கலாம்
நானும் உன்னுடனே
அதை செய்திருப்பேன்!

பார்
இப்போது நீ மட்டும்
தனியாக சென்றுவிட்டாய்
நான் தனிமரமாகவே
நின்றிருக்கிறேன்!

எதை செய்வதானாலும்
இதயமே செய்யவா என
கேட்டுகொண்டிருப்பாயே!

இதை மட்டும் ஏன்
நீ கேட்க மறந்தனையோ
இல்லை கேட்காமல்
மறைத்தனையோ!

தந்தையின் சாதீயத்தில்
தாயின் பணத்தாசையில்
போராடி வென்றுவிடுவதாய்
சொல்லியிருக்கிறாய்!

என்னிடம் சொல்லாமலே
இப்போது சென்றிருக்கிறாய்!
நானும் இப்போது உன்னிடமே
வந்து விடுவதாய் முடிவெடுத்துவிட்டேன்!

இந்த கவிதையை எழுதி
முடிக்கும் இந்த கணத்தில்
நானுண்ட நஞ்சும் உன்னிடம்
அனுப்பிகொண்டிருக்கிறது!

வருவேன்! கவிதையை
தொடர்ந்து காவியமொன்றினை
படைத்து விட!!!!!!!!

நோக்க நோக்க

பேருந்து பயணம்

நானும் நோக்கினேன்
அவளும் நோக்கினாள்
அவள் அன்னையும்
என்னையே நோக்கினாள்!!

நான் அடுத்த சீட்டிலுள்ள
பெண்ணை நோக்கினேன்!
அவளும் நோக்கினாள்
இவளும் நோக்கினாள்
அவளன்னையும் நோக்கினாள்!

நான் அந்தரத்து கூரையை
நோக்குகிறேன்
யாரும் என்மீது கை
நோக்காமலிருக்க!

நான் மீண்டும் காதலிக்கிறேன்..

எனக்கு
எப்போதெல்லாம் தோன்றியிருக்கிறதோ
அப்போதெல்லாம் தோன்றியிருக்கிறேன்!
உனக்கு முன்பாக!!

உனக்கும்
அப்போதெல்லாம் என் நினைவுகள்
வந்து போவதாய் சொல்லிடுவாய்!

~ஆம்~
நாம் அப்போது காதலித்து
கொண்டிருந்தோமென
நினைக்கிறேன்.

வாடிய உன் தலைப்பூவோடு
என் காதலையும் ஒரு அந்தி
மாலையில் உன்னால் வீசியெறியப்பட்ட
போது தான் உணர்ந்தேன்!

ஒரு அர்த்தமற்ற கவிதையை
ஆறு வருடங்களாக எழுதி
கொண்டிருந்தமையை!

எனக்கும் அதில் வருத்தம் தான்!

எனினும்
மீண்டும் காதலிப்பது என
முடிவு செய்திருந்தேன் நான்!


ஆம்
இப்போது நான் மீண்டும்
காதலித்து கொண்டிருக்கிறேன்

வெற்றிலைகுடுவையின் டொக் டொக்
சத்தத்தில் வெறுத்தொதுக்கிய என்
இறந்து போன பாட்டியின் பாசத்தையும்

தலைவலிக்கான மருந்து மட்டுமல்லாமல்
அலைபோலடிக்கும் அன்னையின்
அன்னையின் அன்பினையும்

கால் இடறி கீழிருந்த தருணங்களில்
தோள்பிடித்து தூக்கி நிறுத்திய
தந்தையின் உன்னத உணர்வினையும்

நான் இப்போது
மீண்டும் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்!

இப்போது என்பக்கங்கள்
அர்த்தமுள்ள கவிதையெழுதி
கொண்டிருக்கிறது!

இன்னொன்றும் சொல்லிகொள்வதில்
நான் பெருமைபடுகிறேன்!

நான் இப்போது
காதலிக்கபடுகிறேன்!

விதை முளைக்க ஆரம்பித்தாயிற்று!

Tuesday, September 9, 2008

எனக்குள் ஒரு தாக்கம் தபூசங்கர்-3

முத்தம்

உன் எல்லாசெயல்களையும்
கண்கொட்டாமல் பார்க்கும் நான்
நீ முத்தமிடும் போது மட்டும்
பதில்கொடுக்க மறப்பதில்லை..
**************************************************
எத்தனை வேண்டுமானாலும்
தருகிறேன் என்கிறாய்!
எத்தனை வேண்டுமானாலும்
தந்துவிடு என்கிறேன் நான்!
உதட்டோடு உதடாய் இருந்தால்
*****************************************************
நீ கேட்கவே வேண்டாம்
நானே தருவேன் என்கிறேன்..
நீ கேட்க வாய்ப்பே இல்லையென
இதழ்கவ்விகொண்டிருக்கிறாய் நீ!
****************************************************
நீ ஒன்று
நான் ஒன்று
என மாறிமாறி கொடுக்கிறோம்
நாம் ஒன்று என்று மாறாமல்
இருக்கிறது முத்தமும் காதலும்
*****************************************************
இந்த முத்தம் மட்டும்
அதிக உஷ்ணமாயும்
அதிக காதலோடும் இருக்கிறது!
தாமதமாய் வந்ததற்கு
தண்டனையாய் அரைமணிநேரமுத்தமா!


இப்படியான முத்தம் தொடருமானால்
இப்படியாகவே தாமதமும் தொடரும்..
***************************************************
சத்தம் போடாமலிருந்தால்
முத்தம் கிடைக்குமென்கிறாய்
முத்தம் கொடுத்தாலே
சத்தம் வராதென்கிறேன் நான்!

உள்நாக்கில் உயிரை செருகும்
உச்சந்தலை மயிர்கூச்செறியும்
முத்தவித்தையை உன்னையன்றி
வேறெவரறிவார் சொல்லடி?
******************************************************

எனக்குள் ஒரு தாக்கம்-தபூசங்கர் -2

கன்னங்கள்..

அரைமணிநேரமாய்
பேசிகொண்டிருக்கிறாய்..
வாழ்நாள் விமோட்சனம்
அடைந்துவிட்டதாய் கூச்சலிடுகிறதுசெல்போன் பொத்தான்கள்..
*******************************************************
அழகான கன்னமென
சொல்லி கிள்ளுகிறாய்
பக்கத்துவீட்டு குழந்தையை!
தன்னுடையதை விட
உன்னுடையது அழகென
பொறாமையில் அழுகிறது குழந்தை
*********************************************************
நீ கொடுத்த
சாக்லெட்டுக்காக உன்
கன்னத்தில் முத்தமிடும்
உன் தம்பியின் உதடுகளாய்
பிறக்கவில்லையென
குறைப்பட்டுகொண்டிருக்கிறேன்..
**********************************************************
வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காய்
நீ தடவும் அழகுசாதனங்கள்
உன் கன்ன அழகை ஒருபடி
குறைத்து விடுகிறது
தெரியுமா?
*******************************************************
கற்பனையில் வரையகூட
முடியாத உன் கன்னத்தை
கவித்துவமாய் செதுக்கிவிட்ட
பிரம்மன் மீதெனக்கு
சத்தியமாய் பொறாமை தான்!
**********************************************************
உன் கன்னம் கிள்ளிவிட்ட
எனக்கு தண்டனை தருவதற்காய்
என்னை அழைக்கிறாய்..
இன்னொருமுறை கிள்ளிவிட்டு
மரணமெய்த தயாராகிவிடுகிறது மனது
**********************************************************

Friday, September 5, 2008

நிர்ணயமில்லா முடிவுகள்-( 100 ஆவது பதிவு)

அந்த முடிவின் ஆரம்பத்தில்
அந்த முடிவை யூகித்திருக்கவில்லை.

இப்படிதான் எல்லாமுடிவின்
ஆரம்பமும் என்று கூட சொல்லலாம்..

ஆனால் எதாவதொருமுடிவினை
எதிர்பார்க்காமல் ஆரம்பித்ததில்லை.

சிலநேரங்களில் சிலகாரணங்களில்
முடிவை நிர்ணயித்துவிடமுடிகிறது..

வேறொரு முடிவையும் அதற்கான
பலகாரணங்களும் வந்துவிடுவதில்
பெரிதான ஆச்சர்யமொன்றுமில்லை தான்!

செயலுக்கான முடிவு நிர்ணயித்தலோ
நிர்ணயமில்லாத முடிவோடு செயலோ

நடக்காமல் இருந்ததே இல்லை...

கவிதை எழுதுதலும் அழித்தலும்
நடந்துகொண்டு தானிருக்கிறது....

Wednesday, September 3, 2008

நீ தராமலிருந்திருக்கலாம்....

நீ அந்த
முத்தத்தை தராமல்
இருந்திருக்கலாம்!

நான் அந்த
முத்தத்தை பெறாமல்
இருந்திருக்கலாம்!

காதலர்களின் அடையாளங்களை
தேடி சுற்றிய காலங்களில்
கடற்கரையில் முத்தமும்
அடையாளமென அதையும்


நீ தந்துவிட்டாய்!
நான் பெற்றுவிட்டேன்!

நீ இல்லாத
இல்லறத்தில் சுற்றிய
இடங்களிலெல்லாம் உன்
இடத்தினில் இல்லாளை
வலியநுழைக்க முடிகிறது!

நுழைத்து கொண்டு தானிருக்கிறேன்!

உன் இடத்தில் அவளை
நிறுத்திவிடுவதில் அவ்வளவு
சுலபமானதாய் இல்லை,

இருந்தும் முடிகிறது என்னால்!

எனக்கான என் மனைவியின்
முத்தத்தில் மட்டும் அவளை
பார்க்க முடிவதே இல்லை...

நீ
அந்த முத்தத்தை
தராமலிருந்திருக்கலாம்!

நானும்
அந்த முத்தத்தை
பெறாமலிருந்திருக்கலாம்!

நான்
அந்த முத்தத்தோடு
இறந்துமிருக்கலாம்!