CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 28, 2010

இரவின் சாபம் பெற்ற தேவன்

1.
கடலுக்கு அடியிலிருந்து
பறந்துவந்தது
சில வெந்நிற புறாக்கள்.
அவைகளை
திடீரென தோளில் ஏந்தியவாறு
தோன்றின சில தேவதைகள்
உறக்கமற்ற அவனது
இரவை தாலாட்டுப்பாடி
தூங்கவைத்தது ஒரு அழகிய குரல்.
காதல் உள்ளிறங்கிய
அவன் கனவில் தேவனாக மாறிப்போயிருந்தான்..


2.
வெண்பனிப்புகை சூழ்ந்து ஈரம்
படர்ந்த விடியலில்
மஞ்சளும் சிவப்பும் கலந்த
பட்டாம்பூச்சி சிறகுகள் பல
அவன் காதல் மேல் பறக்கத்தொடங்கின..
மல்லிகைப்பூக்களின் வாசம்
முதல்முறையாய் அவன்
நுகர்வுக்குள் நுழைந்தது..
அவள் இவன் மார்பில் சாய்ந்து
காதலை ஊற்றிக்கொண்டிருந்தாள்..

3.
பின்னொரு இரவில்
அதே கடலுக்கடியிலிருந்து
பறந்துவந்தன கருநிற கழுகுகள்.
அவைகளை கடித்துகுதறியவாறு
தோன்றின சில இரத்தக்காட்டேரிகள்
வழிந்த குருதியில் அழிந்துபோன
அவன் உறக்கத்தினெதிரில்
இன்னொருவனோடு புணர்ந்துக்கொண்டிருக்கிறாள்
அவள்.
இந்த
இரவின் சாபம் பெற்ற
தேவன் இன்னமும்
தேவனாகவே இருக்கிறான்...

அவள்
இன்னதென்று சொல்லமுடியாததாய்
இருக்கிறாள்

கனவுகள் விளையாடும் தெருக்கள்

1.
இதழ்களில் நுழையும் ஒரு
மழையிலாடிக்கொண்டிருக்கிறாள்
சிறுமியொருத்தி.
யுவனொருவன் அவனுக்கான
யுவதியோடு கைக்கோர்த்து
நடந்துகொண்டிருந்தான்..
மழைத்துளிகள் தெறித்த
ரோஜா ஒன்றை வாங்கியவனொருவன்
கனவில் பறக்கத்தொடங்கினான்.
நீலநிறக்குடைக்குள்ளொருத்தி
கம்பியிலொழுகும் துளிகளோடு
விளையாடிக்கொண்டே போனாள்.
ஓடிக்கொண்டிருந்த
வெள்ளத்தில் கரைந்துபோன
கனவுகளை கண்டவாறு
உட்கார்ந்திருந்தன இரு கண்கள்....

2.
நீ
சொன்னவாறே
பிறந்துபார்க்கிறேன்
இன்னொருத்தியின் கணவனாக
நீ
பெற்றடுக்காத குழந்தையின் தகப்பனாக
நீ
இல்லாத ஓர் உலகிலும்......

எல்லாப்பிறப்பின்
தெருக்களிலும் விளையாடிக்கொண்டிருக்கின்றன
நீயும் நானும்
சேர்ந்துகண்ட கனவுகள்
வேறு பலர்களோடு..

நீயும் விளையாடலாம்
அதேகனவுகளோடும்
யாரோ ஒருவனோடும்........

சுவாரஸ்யங்கள் நிறைந்த கொடுங்கனவொன்று.

1.
அந்த ரம்மியமான
காலைப்பொழுதில் அரவங்கள்
நிறைந்த தொட்டிலில் ஒரு
குழந்தை புன்னகைத்து கொண்டிருந்தது..
ஒரு
காக்கை பரிணாமம் பெற்றுக்கொண்டிருந்தது
மிகப்பெரிய தோகைகொண்ட மயிலாய்..
மஞ்சள் நிறப்பட்டாம்பூச்சிகள் பல
புற்றிலிருந்து புறப்படத்துவங்கின
கூட்டுப்புழுவெடித்து இலவம்பஞ்சு
பூமியெங்கும் பரவிக்கொண்டிருந்தன..
சுவாரஸ்யங்கள் நிறைந்த இந்நிகழ்வுகள்
நீ வந்தபின்பு தான் மாறியிருக்கும்
ஒரு கொடுங்கனவாய்....

2.
வலிகளுக்கு
அப்பால் பெற்றெடுத்த
குழந்தையை பசிக்காய்
புசிக்கும்
ஏதோ ஒரு மிருகம் நீ!

சாத்தானுக்கு விற்கப்பட்ட தேவதையின் மொழி

துடுப்புகளில்லாது திசையறியாது சமுத்திரத்தை குடித்துக்கொண்டு திரிந்த படகினை போலிருந்த எனக்கு கலங்கரைவிளக்கத்தின் மீது நின்று கொண்டு எனக்கான என் வாழ்க்கைக்கான திசையிதுவென அழைத்தாய்.
வெண்ணிற சிறகுகளோடு பறந்து வந்த நீ பேசிய மொழிகள் தான் எத்தனை இன்பமானது.உனது ஆசைகள்
என்று நீ சொல்லிய ஒவ்வொன்றும் எத்தனை அற்புதமானது.ஒரு பின்னிரவின் தனிமையில் மெல்லிசைதரும்
மென்மையும் இன்பத்தையும் உனது மொழிகள் தந்ததே எனக்கு..

தேவதை பூமியிலும் வாழும்.அதைவிட என்னுடன் வாழ்கிறது வாழக்கற்றுத்தருகிறது என்று நினைத்துப்பூரித்துப்போயிருந்த தருணத்தில் இந்த இரவுக்குள்ளும் உனக்குள்ளும் இத்தனை கொடூர வன்மங்களை கட்டவிழ்த்துவிட்டது யார்?.தேவதை உனது மொழிகள் எதற்காக யாருக்காக சாத்தானுக்கு விற்கப்பட்டது அல்லது விற்றுவிட்டாய்..புன்னகையால் என்னை சாய்த்துப்போட்டவள் இப்போது அலறுகிறாய் கூரியப்பற்களோடு என் குரல்வளை குருதியின் வாசம் தேடி..

யாருமே வாழமுடியாத வாழ்க்கையை நாம் வாழவேண்டுமென்று நீ முன் சொன்னபோது உன் பார்வையிலிருந்த எதிர்ப்பார்ப்புகள் ஏக்கங்கள் எல்லாம் இப்போது துளிகூட இல்லாமல் போயிருக்கிறது.ஒரு கொடிய சர்ப்பத்தின் பார்வையிலிருக்கும் வன்மம் தலைதூக்கி இருக்கிறது. என் கண்ணீரையும் செந்நீரையும் ருசிக்கவேண்டி நீள்கிறது உனது நாக்கு. எனக்கான தேவதை சிறகுகள் தீப்பிடித்து எரிகிறது..இப்போதும் என்னை அணைத்துக்கொள்கிறாய். வாழவேண்டி அல்ல உன் வெப்பத்தில் என்னை சாம்பலாக்கவேண்டி..

எப்படி இத்தனை வன்மமும் குரூரமும் குருதியின் மீதான இச்சையும் கடைசியில் மரணமும் தருமளவுக்கு சாத்தானின் மொழியாய் மாறிப்போயிருக்குமென சிந்த்தித்துக்கொண்டிருக்கிறேன்

.என் இரவுகளின் தூக்கத்தையும்
தின்று தின்று சிரிக்கிறது உன் அலறல்கள்,

நெஞ்சணைத்து தாலாட்டிதூங்கவைப்பேன் என்று சொன்னவள் இன்று முட்கள் நிறைந்த ஒரு நெருப்புத்தொட்டிலில் போட்டு தாலாட்டுப்பாடுகிறேனென்று கத்துகிறாய்.நீ பாடுவது மரணத்திற்கு பின்னான ஒப்பாரி ராகமென்று கூட தெரியாத அளவுக்கு வன்மத்தில் ஊறித்திளைத்திருக்கிறாய். நீ ஆசையாய் பாடுகிறாய் இல்லை இல்லை மரணவெறிப்பிடித்து பாடுகிறாய்.. நான் மரணத்தை சம்பவிக்க தொடங்கிவிட்டேன்..
வெகுவிரைவில் நமக்குள் நடந்த சம்பவங்களை மரணத்திற்குள் ஆழ்த்திவிட்டு மீண்டும் நீ தேவதை ஒப்பனையோடு புன்னகைக்கலாம் பற்களில் ஒட்டியிருக்கும் குருதியை துடைத்துவிட்டு......