CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, May 29, 2008

எழுதப்படாமலே.....

தேர்விற்கு படிப்பதாய் சொல்லிவிட்டு
பக்கங்கள் புரள்கிறது நேற்றுவரை
புன்னைகையை மட்டுமே சிந்தியவள்
இன்று வார்த்தைகளை உதிர்த்த நினைவுகளோடு..

மௌனஓடையின் அலம்பலில் கண்ட
உதடு சுழித்தல்களை வர்ணிக்க
வார்த்தைகள் தேடும் என் எழுதுகோல்....

கற்பனையில் மிதந்து கவிதை
தேடும் என் சிந்தனை மேல்
எச்சத்தை உமிழ்ந்து போகிறது

எதிர்பார்ப்புகளோடு பால்கொடுக்க சொல்லும்
தந்தையின் வார்த்தைகளின் முடிவில்
பாலோடுநிற்கும் தாயின் அன்பு...

வார்த்தைகள்....

துயிலுரித்த கணங்களிலிருந்து
துரத்தும் வார்த்தைகள் வணக்கங்களாகும்
விசாரிப்புகளாய் உருவெடுக்கும்
தருணங்களில் காரணமில்லாமல்
தேவையற்றதாய் போகும் சில..

உதட்டோடு நின்றுபோகும் புன்னகையை
பதிலுக்கு கக்கிவிட்டு இடம் பெயர்கையில்
கோபத்தொனியில் தொற்றிகொள்ளும்
வீம்புகளுக்கு முறைத்தலையும்
கோபத்தையும் கனையாக்கி திரும்புகையில்

எதிர்பார்ப்புகளினூடான விமர்சனங்கள்
விருவிருப்பாக்கும் பொழுதுகள்
நன்றிகளை நவின்று நகரும்..

அஸ்தமிக்கும் பொழுதோடு சேர்ந்து
முடியும் மீண்டும் வணக்கங்களாய்
இரவின் தனிமையின் வெறிக்கும்
பொழுதின் வார்த்தைகளானது
உதிரும் மயிர்களாகவும்
ஊன்றும் விதைகளாகவும்
கலந்தே விழுகிறது ....

இன்ப துன்பத்தை போல....

Friday, May 2, 2008

தேடலில்....

தொடரும் தோல்விகளின் இறுக்கத்தில்
படும் அவஸ்தைகளில் நொறுங்கும்
மனத்தினூடே வெறுத்துப்போகும் வாழ்க்கை.

எதிர்பார்த்தவைகள் கிடைக்காத கோபத்தில்
தற்கொலையை நாடவிழையும் மனம்
தனிமையை தேடி அலையும் பொழுது

திரவத்தினை கயிறுதிரித்து வலைபின்னும்
சிலந்தியொன்று இடறலினால் கீழுக்கு
தொங்கிகொண்டிருத்தலை நோக்கிய சிந்தைக்கு

கஜினியின் வரலாறு பாடத்தை
நினைவிலிருத்தி போகிறது.
தொடர் சறுக்கலில் முயற்சியூடான
சிலந்தியின் வெற்றி....

Saturday, April 26, 2008

கவிதை????

காதலிக்கான மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகளில்
புதுக்கவிதை வேடமிட்டு சிலாக்கித்திருந்த
என்னெழுத்துக்களின் மீதெழுந்த விமர்சனங்களின்
அறிவுறுத்தலில் ஆரம்பித்த யோசனைகள்
கவிதையா??? கவிகொலையா ??? இதுவென

கருவறைக்காதலியென் அன்னையையும்
கார‌ண‌மின்றி நிக‌ழ்த்த‌ப்ப‌டும் துர்ம‌ர‌ண‌ங்க‌ளையும்
உள்ளடக்கிய‌ கவிதை வரிகள் முகத்திலுமிழ்ந்து
உணர்த்துக்கிறது கவிதை இதுவென..

விமர்சனங்களை தாண்டி எதிர்பார்ப்புகளோடு
எடுத்துரைக்கிற‌து ந‌ண்ப‌ரின் குரல்
என்கொலையின் தேவையற்ற அலம்பல்களையும்
சொல்லப்படாத நிதர்சனங்களையும்...

எண்ணக்கடலில் கவிதைமீன்க‌ளிருந்தும்
வெளிக்கொண‌ர‌ வார்த்தைவ‌லைக‌ளின்றி
தவித்தகணத்தில் வலைகளை கொடுத்து
காத்திருக்கும் தோழமை....

நானுமே வலைவீசி காத்திருக்கிறேன்
மீன்கள் வ‌லையேறுமென‌...

Thursday, April 17, 2008

புரிய முற்படுகையில்...

அமைதியாகதான் விடிகிறது
ஒவ்வொரு காலைபொழுதும்
அலுவல்களின் சுமூகமான ஆரம்பங்கள் கூட
அதிகபட்சமான கோபங்களால்
அலையடித்து சின்னாபின்னமாகிறது

அறிவுரைகள் குவியத்தொடங்கி
அதிகமாகிப்போகிறது இயலாமையின்
கோபத்தினூடே உளைச்சல்களும்
அதனூடான சிகரெட் எண்ணிக்கையும்.
தோழனின் தோள்தட்டல்களூடான
ஆசுவாசத்தின் கழிவிறக்கம்
தனிமையை நாட விழைகிறது

விரலுக்கிடையில் அக்னிகக்கும்
சிகரெட்டுடன் விசாலமான பூங்காவை
தாண்டுகையில் விரிந்து படர்ந்திருந்த
விலாமரமானது எதையோ உணர்த்தியபடி
உதிர்க்கிறது அதன் பழுத்த இலைகளை
தென்றலது முகம் வருடியதை சுகித்தப்படி
தாண்டிசெல்ல கோடை வெம்மையின்
புழுதிக்காற்று முகத்தில் அறைந்து
எதையோ உணர்த்த யத்தனிக்கிறது

புரியாமல் ஆழ்கடலில் முத்துக்கள் தேடுபவனாய்
யோசிக்கையில் விரல் சுட்டு புரியவைத்து
சாம்பலாகிறது சிகரெட் துண்டு..

மூன்றையும் ஒன்றாய் திணித்து
எண்ணுகையில் தெளிவாகி திரும்புகிறேன்
வாழ்க்கை வாழ்வதற்கென்று...

Wednesday, April 16, 2008

ஞாயிறொன்றில்....

அரசு உத்தியோகத்தவனின் வருகையாய்
விடியலெடுக்கிறது இந்த ஞாயிறும்
மெதுவான கசக்கலுக்குபின் தெளிவாகிறது
ஜன்னலூடன வெளிச்சமும் ஓடாத
என் கட்டிலறை கடிகாரமும்...

நேரவிசாரிப்பின் முனகலில் அன்னையின்
அர்ச்சனைகள் நினைவுபடுத்துகிறது
புதுவருட எண்ணைகுளியலையும்
அப்போதைய பத்து மணியையும்..

கட்டிலில் சாய்ந்தபடியே ஜன்னலூடே
தலைதூக்கும் எண்ணங்களை வருடிசெல்கிறது
நிழலின் தன்மையை ஏந்திவந்த தென்றலும்
மாட்டுதொழுவத்தின் புதுவரவும்

மடிமுட்டி பாலருந்தும் கன்றதனை
புதியவனா?புதியவளா ?புதிரோடு
ரசிக்கும் நினைவுலகை கலைக்கிறது
அண்டைவீட்டு மழலைப்பசியின் அழுகை

ஏனென்ற கேள்வியோடே வெளியேறும்
எரிச்சலூடான வார்த்தைகளுக்கிடையில் நுழைகிறது
அண்டைவீட்டாரின் அர்த்தமற்ற சண்டையும்
தங்கையின் குழந்தைக்கான தாலாட்டும்...

Friday, April 11, 2008

தப்பித்தும் மரணிக்கிறேன்...

அர்த்தராத்திரியொன்றில் முடிகிறது எனக்கான
அலுவல் வேலைகளும் அதனூடான உளைச்சல்களும்
கயிறவிழ்த்து தாயின் மடிநோக்கியோடும் கன்றைபோல
கண்களின் தூக்கத்தினூடே பயணிக்கிறேன்..

அரசின் நெடுஞ்சாலைதிட்டம் வேக வேகமாய்
அரங்கேறிகொண்டிருக்கிறது சாலையில் இருபுறமும்
உணவுக்காய் கண்விழித்து இரைதேடும் ஆந்தையாய்
உழைத்துகொண்டிருக்கும் மனிதர்கள் சுறுசுறுப்பாய்

சாலைப்பணிகள் விரைவாகுதையெண்ணி மகிழ்ச்சி
சாப்பாட்டுக்காய் உழைக்கும் இவர்களையெண்ணி கவலை
மாறி மாறி மனதினுள் படையெடுத்துகொண்டிருக்க
காதை கிழிக்கும் காற்றொலிப்பான் பின் தொடர

அதிர்ந்து போய் திரும்பிபார்த்தேன்
நிலைதவறி வரும் கனரகவாகனமொன்று
என்னை நோக்கி வேகமாய் வரவே
திடுக்கிட்டு சாய்க்கிறேன் சாலையோர பள்ளத்தில்..

தப்பித்த மகிழ்வோடு எழுந்து நிற்க அடுத்தநொடி
அலறலோடு அழைக்கிறது நிறைய குரல்
தூக்குகண்ட கைதியாய் பதறிப்போய் பார்க்கையில்
தூக்ககூட நாதியின்றி பாதைசமைத்தவர் சிதறிபோய் கிடக்கையில்

உயிர் தப்பியும் மரணித்தேன் மறுபடியும்.....