CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, June 27, 2008

பாக்கெட் சாராயம்

சிவா தாங்க என்னோட ஒரே பிரண்டு..ரெண்டுபேரும் தான் எப்பவுமே கில்லியாட போறதிலிருந்து பள்ளிகூடத்துக்கு போறவரைக்கும் எப்பவுமே ஒன்னா தான் போவோம்..இன்னிக்கு நான் பள்ளிக்கு கெளம்பி சிவாவை போய் பார்த்தா இன்னும் கிளம்பாம அழுதுட்டு இருந்தான்..

இன்னாடா சிவா அழுதுகினு இருக்கன்னு கேட்டா எங்க அப்பா அடிச்சிட்டாருடான்னு ஹிரும்பவும் தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுட்டான்..உள்ள பாத்தா சித்திரை அண்ணன் அதான் சிவாவோட அப்பா அவுங்கம்மாவவயும் போட்டு அடிச்சிகிட்டு இருந்தாரு..

பாவி மனுஷா காலங்காத்தால குடிச்சிட்டு வந்து இன்னும் இப்படி போட்டு அடிக்கிறியே ..அந்த பள்ளிகொடத்துக்கு போற புள்ள இன்னாயா பாவம் பண்ணுச்சு..என் வயித்துல வந்து பொறந்ததுட்டு இப்படி எங்கூட அதுவும் இப்படி சாவுதேன்னு அழுதுட்டு இருந்துச்சு..

பஞ்சாயத்துபண்றதுக்குன்னே பக்கத்துல இருந்த பெருசுங்க ஏண்டா இந்த மாதிரி பண்ணிட்டிருக்கன்னு கேட்க எதுவுமே காதுல வுழாதமாதிரி சித்திர அண்ணன் டேய் போங்கடா என் பொண்டாட்டி இன்னா வசியம் காட்டி வரவெச்சாளா தேவிடியான்னு திரும்ப போய் எட்டி உதைச்சாரு அந்தண்ணிய..

இவன்லாம் என்ன சொன்னாலும் திருந்தமாட்டான்யான்னு வந்த பெருசுங்க திரும்ப போயிடுச்சு..தெருவில இருக்க பொம்பளைங்கல்லாம் வேடிக்க பாத்தகதியா நின்னுட்டு இருந்ததுங்க.டேய் சிவா அழுவாதடா ன்னு அவன் கண்ணை தொடச்சிவிட்டு மூஞ்ச கழுவிட்டு வாடான்னு தண்ணிமொண்டு கொடுத்து பையை எடுத்துகிட்டு கூட்டிட்டு போனேன்..

பள்ளிகுடமுடிச்சு வரவரைக்கும் சிவா அழுதுட்டே தான் இருந்தான்..பாதிவழியில கல்லுமோட்டு பக்கமா சித்தரண்ண லுங்கி இல்லாம வெரும் டவுசரோட மண்ணுல கிடந்தாரு..தூக்கமுயற்சி பண்ணி பாத்தோம் ரெண்டுபேரும் முடியலை..அதுக்கப்புறம் வுட்டு தள்ளுடா இந்தாளு வூட்டுக்கு வராம இருந்தாலே நிம்மதிடா எங்களுக்குன்னு முன்னாடி போயிட்டிருந்தான்..

இன்னாடான்னு கேக்க வூட்ல சோறு பொங்கி ரெண்டுநாளாச்சுடா..நாய்க்கர் வீட்டாண்ட ஊத்துன பழைய கஞ்சிய மிச்சம் வெச்சுதாண்டா நேத்துவரைக்கும் குடிச்சோம்..இந்தாளுக்கு மட்டும் எப்படிதான் குடிக்கறதுக்கு காசு வருதுன்னே தெரியலைன்னு புலம்பனான்..

டேய் யாருடா அங்க வாங்கடா இந்த வெறகு கட்ட தூக்கி தலையில வைங்கடான்னு நாராயனந்தாத்தா கண்ணசுருக்கிகின்னே கூப்புட்டாரு..சரின்னு போய் எங்க தாத்தா போற வூட்டுக்கா நானே தூக்கிட்டு வரேன்னு சிவா தூக்கிகிட்டான்..டேய் வூட்டுக்கில்ல இப்பை கல்லுமோட்டு பக்கமா வான்னு வேலிக்காத்தா பொதருக்காகூட்டிட்டு போனாரு ..

பின்னாடியே போய் பாத்தா பாக்கெட்டுல அங்கதான் சாராயம் வித்துகினு இருந்தானுவ.இன்னா தாத்தா இங்க கூட்டியாந்துகீறன்னு நான் கோவமா கேட்டா மடைபயமவனே காசுக்கு நான் எங்கடா போவேன் அதான் வெறகு வெட்டியாந்து குடுத்தா மூனு பாக்கெட் குடுப்பானுவன்னு அதுபக்க ஞாயத்தை அது சொல்லுச்சு..

தலையிலிருந்த வெறக தொப்புன்னு போட்டுட்டு போயாகிழவான்னு வேகமா சிவா நடக்க பின்னாடியே நானும் போனேன்,,டேய் எங்கப்பனும் இப்படி தான் குடிக்கிறான்போலன்னு ஏதோ யோசிச்சுகிட்டு வீட்டுக்கு போனான்.மறுநா காலையிலெழுந்து டேய் வாடான்னு என்னையும் கூட்டிகிட்டு காட்டுபக்கமா போனாக்கா வெறக வெட்டிவெச்சிட்டு வேலி ஓரமா திரும்பி ஒன்னுக்கு போயிட்டிருந்தாரு சித்தரண்ன,,

என்னடா பண்ண போறன்னு கேட்க வெறகதூக்கிகினு இன்னைக்கு எப்படி குடிக்கிறபாருய்யான்னு ஓட ஆரம்பிச்சுட்டான்..அவரு கண்ணுக்கு அப்பால ஓடி வந்தா நாராயணந்தாத்தா எதிர வந்துச்சு ..தாத்தா வெறகு ஓனுமின்னா எடுத்துக்கோன்னு அவருகிட்ட குடுத்துட்டு வீட்டாண்ட வந்தோம்..பாத்தா அங்க கையில கொம்போட அவுங்கப்பா கோவமா நின்னுட்டு இருந்தாரு..

திரும்ப எந்தபக்கமா ஓடுரதுன்னு தெரியாம பயத்துல ஓட ஆரம்பிச்சோம்..பின்னாடியே தொரத்திட்டு ஓடியாந்தாரு அவரும்..டேய் கல்லுமோட்டு பக்கமா பொதார்ல ஓடிரலாம் வாடான்னு இழுத்துட்டு ஓடுனேன்..

பாத்தா அங்க சாராயம் விக்குற இடத்துல சனமெல்லாம் கூடி எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டு இருக்குங்க..உள்ள நுழைஞ்சு பாத்தா நாராயணந்தாத்தால இருந்து பதினஞ்சு பேருக்கு வாயில நுரைதள்ளிட்டு கிடந்தாங்க..

பொம்பளைங்கெல்லாம் ஓன்னு அழுதுட்டே இருந்ததுங்க..என்னன்னு புரியாம திரும்பி பாத்தா பின்னாடி அவுங்கப்பா .பயத்தில நடுங்க அவரோ கொம்ப போட்டுட்டு திரும்ப போயிட்டிருந்தாரு..

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: