CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, January 28, 2009

சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:03




நாளை கண்டிப்பாய் அவள் என்னை ஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கையுடனே என் அந்தி மாலை முடிந்தது.இரவுக்குள் நுழைந்த நான் எழுதுகோலெடுத்து என்னவள் பெயரை என் நோட்டுபுத்தகங்கள் முழுக்க எழுதிகொண்டிருந்தேன்..
எவ்வளவு எழுதியும் என் தாகம் தீர்வதாயில்லை.எனக்கு வயிற்றுபசிதான் எடுத்ததாயில்லை..சாப்பிட அழைத்த அம்மாவிடம் படிக்கவேண்டும் என்றுபொய் சொல்லிவிட்டு உனக்காய் உன் முகம் பற்றிய சிலவரிகளை கிறுக்கினேன்.

பௌர்ணமி நிலவினுள்
ஓர் அமாவாசைஅழகாகவே!

என்னவளின் உதட்டோரமச்சம்!

உன் உதட்டுக்கு கீழிருந்த அந்த மச்சம் எத்தனை அழகாய் இருக்கும்.இதை எழுதிவிட்டு பார்த்தேன்.அந்த ஐந்து வார்த்தைகளிலே நான் கவிதை எழுதிவிட்டதாய் சிலாகித்துகொண்டு இருந்தேன். இப்படியே சிலநேரம் அதை ரசித்து விட்டு அடுத்து ஒரு உதட்டையும் அதன் கீழ் இடது ஓரத்தில் மச்சமும் வரைந்து உன்னையே வரைந்ததாய் நினைத்து வெகுநேரம் பார்த்திருந்தேன்.

நள்ளிரவையும் தாண்டி நான் விழிகளை மூடாமல் கனவு கண்டுகொண்டிருந்தேன்..நாளை அவள் முன் அழகாக தோன்றவேண்டுமென்று அர்த்தராத்திரியில் இஸ்திரி பணியில் இறங்கிய என்னை பார்த்து என் தந்தை என்ன தான் ஆச்சோ இவனுக்கு என்றபோது மனதுக்குள் சிரிப்பு மட்டுமே!
கட்டுரைப்போட்டியில் முதல்பரிசாய் வென்ற அலாரம் எனக்கு அன்று தேவைப்பட ஒரு அரைமணிநேர தேடலுக்கு பின் ஐந்து மணிக்கு அலாரம் வைத்தபோது மணி நான்கினை தொட்டிருந்தது.ஒரு வழியாய் கண்மூடி படுக்கையில் நாளை என்ன நடக்கும் என்ற ஆவலிலே என்னன்னவோ கற்பனை. நீயாகவே என்னிடம் வந்து பேசுவது போலவும் அதன் பின் திருமணம் குழந்தை என ஒரு பத்து பதினைந்து வருடங்களை தாண்டி பயணித்துகொண்டிருந்த மனதை அலாரம் திசை திருப்ப வேக வேகமாய் எழுந்து கிளம்பினேன்.

வழக்கமாய் வெறுப்புடன் நடந்து செல்லும் மூன்றரை கிலோமீட்டர் தூரம் கூட எனக்கு பெரிதாய் தெரியவே இல்லை.ஏழரை மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்தவன் உன் வருகைக்காக பேருந்து நிலையம் வரை வந்து காத்திருந்தேன்!
சில நிமிட காத்திருப்பின் பின்னர் இறங்கி வந்த நீ எதையுமே அறியாதவள் போல் நடக்க தொடங்கினாய்.நேற்றைய கனவுகோட்டைகள் எல்லாம் நொருங்கி விடுமோ என்ற பயத்துடனே உன் பின்னே நடக்க ஆரம்பித்தேன்!

கடைசிவரை திரும்பாதவள் உன் வகுப்பறைக்குள் நுழையும் முன் திரும்பி புன்னகைத்து சென்ற கணம் வேரோடு புடுங்கவிருந்த ஒரு மரத்திற்கு கொடுத்த முட்டுகொம்பினை போல் இருந்தது!
பின் மதியவேளை வரை உனை காணும் வாய்ப்பு கிட்டாமல் வகுப்பறையில் தலைவலி என்று சொல்லி ப்டுத்திருந்தேன்.மதியம் ஓடிவந்து அத்தை மகளிடம் கேட்டபோது அவளின் முகத்தில் இருந்த சந்தோசமே சம்மதம் என காட்டியது !
ஆமாடா ! அவள் ஓகே சொல்லிட்டான்னு சொல்லும் போது சில அடி தூரத்தில் நின்றிருந்த உனை பார்க்கையில்இதழ்விரித்து நீ புன்னகைத்தாய் மீண்டும்! ரொம்ப நன்றி சத்யா என்று சொல்லிவிட்டு சிட்டென பறந்து ஓடிப்போய் என் நண்பர்களிடம் மச்சான் சக்சஸ்டா என்று சொன்ன போது வலிகளுக்கு பின்னால் வரமாய் பிறக்கும் குழந்தையினை பெற்ற தாயின் மகிழ்ச்சியை பெற்றிருந்தேன்!

ஒருவழியாய் என் நினைவுகள் பூலோகம் திரும்பி வந்து உன்னிடம் எப்படி பேசுவதென்ற யோசனைக்குள் இறங்கினேன்....
பேசுவதறகான இடம்,பொருள் தேடி...............


தொடரும்....

Tuesday, January 27, 2009

சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:02




இரண்டு மாதங்களுக்கு பிறகு நீயும் மேல்நிலைபடிப்பிற்காக வருவாய் என எப்போதுமே சேர்க்கை நடக்கும் மேடையையே பார்த்திருந்தேன்.ஆனால் நீ என் கண்ணில் தென்படவே இல்லை.சேர்க்கை முடிந்தது என தொங்கிய பலகையை பார்த்தபோதுஎன் காதலும் முடிந்ததாய் அழுதுகொண்டிருந்தேன்.அடுத்த நாளில் புதியமாணவர்கள் அனைவரும் வருவார்கள் என அறிவிப்பு கேட்டும் எந்த வித சலனமும் இல்லாமல் சென்றேன்.
இரவு எனக்கு வெறுமையையும் அழுகையுமாகவே முடிந்தது.சோகம் தோய்ந்த முகத்துடனே வழக்கம் போல் வந்தேன் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி.நான் வளாகத்துள் நுழைந்து நேரே என் அறைக்கு செல்ல முற்படும் போது ஒரு முப்பது அடி தூரத்தில் நீ நின்றிருந்தாய்!

வெயிலின் வாட்டத்தில் வறண்டு போய் வெடிப்புகள் விட்ட ஒரு நிலத்தில் அடைமழைபெய்யும் போது இருக்கும் இனிமையில் நான் !என்ன செய்வதென்று புரியாமல் நான் அப்படியே உன்னையே பார்த்திருந்தேன்.நீயும் புன்னகை மறைத்த இதழோடு விழி விரித்து என்னை நோக்கினாய்!
ஒரு சில நிமிடங்கள் அசையாமல் நின்றவன் நினைவுக்கு வந்து வகுப்பறை நோக்கி நடந்தேன்.திரும்பிய உடலும் திரும்பாத நினைவுமாய்! அறைக்குள் சென்றவன் அடுத்தகட்ட போருக்கு ஆயத்தமாக யோசித்தேன்..

இடைவேளையின் போது உன்னறை நோக்கி வந்தபின்புதான் தெரிந்தது..உன்னுடன் மீண்டும் என் அத்தைமகள் சேர்ந்தே படிப்பது..ஒரு வழியாய் அவளிடமே மீண்டும் என் காதலை தூதனுப்ப முடிவுகட்டி கடிதம் எழுதவா? முன் எழுதிய கவிதையினையே எழுதி தரலாமா ? என்று யோசனைகள் இருநாட்களை கடத்தியிருந்தது..

பின் எதுவுமே இல்லாமல் மீண்டும் ஒரு முறை எனக்காய் அவளிடம் சொல்வாயா? என்று என் அத்தைமகளிடம் கேட்டேன்.அவளும் சரி என்று சொன்னது தான்..நீயே சரி என்று சொல்வதாய் எனக்கு பட்டு வானுக்கும் கீழுக்கும் பறந்தேன். மறுநாள் விடியலை எதிர்நோக்கி காலை ஏழு மணிக்கெல்லாம் வகுப்பறையில் குடிபுகுந்தேன்..மதியவேளை வரை உனை பார்க்கவோ நான் முயற்சிக்கவில்லை..

மதிய உணவையும் மறந்து என் அத்தை மகளிடம் வந்து சொன்னாயா ? என்றேன்.ம்ம்ம்ம்..இது மட்டுமே பதிலாய்.. அவள் உதடு விரியாதா? பதில் தெரியாதா என ஏக்கத்துடன் அவள் என்ன சொன்னாள் என்று கேட்டேன்..
சிலநாழிகை மவுனத்திற்கு பின் ஒரு நாள் நேரம் வேண்டும் அவள் யோசிப்பதற்கு " என்று சொன்னதுமே என் காதல் அலை அவள் மனதில் அடித்து இருக்கும் என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு சுதந்திரம் பெற்ற போராளியாய் மகிழ்ச்சியோடு மறுநாளினை நோக்கி பயணிக்க தொடங்கிய மனதோடு உன்னை பார்க்க வந்தேன்!

புன்னகை மட்டும் தந்தவளாய் சென்று கொண்டிருந்தாய்!நாளைக்கு நல்லதொரு முடிவும் வருமென்ற நம்பிக்கையில் நானும் நடக்க ஆரம்பித்தேன்......

தொடரும்...............

Tuesday, October 21, 2008

இலக்கு


Thursday, October 9, 2008

தீவிரவா(வ)தம்!!!!!!!!

ஒரு சமூக முன்னேற்றத்திற்காகவோ
ஒரு சமய பரப்புதலுக்காகவோ
ஒரு நம்பிக்கையை நிலைப்படுத்துவதாகவோ
ஒரு மெய்ப்பொருள் அறிவதாகவோ
ஒரு தனிமனிதனின் சுயநலத்திற்காகவோ

திரித்து சொல்லப்பட்டிருக்கலாம்
அன்றிலிருந்து இன்று வரை!

இன்னமும் மரபுகளாய்
இன்னமும் மெய்ப்பொருளாய்
இன்னமும் இறையாய்

உணர்த்தபட்டிருக்கிறது!
உணர்பவர்களும் மிகுதியாகலாம்!

சிறுபான்மையை காரணம் காட்டி
சிறுசிறு போராட்டங்கள் நடத்தபட்டிருக்கலாம்!
நடந்தவைகள் முடக்கப்பட்டிருக்கலாம்!

அடக்கபடும்போது திருப்பி
அடிக்கலாம் தான்!
மனித இயல்பில் ஆச்சர்யம் ஏதுமில்லை!

அழிக்கவே ஆரம்பித்தால்?

சத்தமின்றி தூங்கி கொண்டிருக்கிறது
பிணவறையில் உயிரை வெடிக்க செய்த
சில சதைதுண்டுகளும்
பல எதிர்பார்ப்புகளை தாங்கியதொரு
மனித குருதிசொட்டுகளும்!

சத்தமின்றி தூங்கி கொண்டிருக்கிறது
கருவறையில் உலகம் இன்னதென்று
அறியாத ஒரு கொடூரனின் சிசுவும்
மகிழ்ச்சியை எதிர்நோக்கி உயிர்நீத்தவனின்
குழந்தையும்!

சத்தமின்றி தூங்கி கொண்டிருக்கிறது
சட்டசபையில் மகிழுந்தில் பயணம்
செய்யும் அமைச்சர்களின் சேவையும்!

சத்தமின்றி விழித்துகொண்டிருக்கிறது
பாசறையில் அடுத்த கட்ட தாக்குதலுக்கான
அசத்தலான திட்டங்களும் அதனோடு
வெடித்து சிதறபோகும் கொடுரனும்!

Friday, September 26, 2008

முதல்மழை




குருவிகளும் காக்கைகளும் சப்தமிட்டு கொண்டிருந்தது.பொழுது விடிந்துவிட்டதாய் எழுந்து முகம் கழுவி தன்னுடைய அழுக்கு சட்டையும் கால்சட்டையும் எடுத்து மாட்டிகொண்டு மெக்கானிக் கடைக்கு புறப்பட்டான்.

சிவாவுக்கு வயது ஒன்பது.இரண்டாம் வகுப்பு படித்திருந்த சமயம் தினமும் அவன் அப்பா குடித்துவிட்டு வர ஆரம்பித்திருந்தார்.சிலநாட்களில் வீட்டில் தினமும் சண்டை,அழுகை என மாறிபோனது.

பட்டினி,உதை என்பதாய் இருந்த அவன் அம்மாவுக்கு உடல்நிலைசரியில்லாமல் போய் ரொம்பவே சிரமப்பட்டாள்.அப்பனின் இந்த போக்கை அவ்வளவாய் அறியாமல் போனாலும் அவன் அம்மாவின் அழுகையையும் சிரமத்தையும் பார்த்து அவனே வேலைக்கு போவதாய் முடிவெடுத்து பள்ளியை விட்டு நின்று மெக்கானிக் கடைக்கு வேலைக்கு போக ஆரம்பித்தான்..

இரண்டுவருடங்களாக இவனின் சம்பாத்யம் தான் அவன் அம்மாவின் மருந்துசெலவுக்கும் அரைவேளை கஞ்சிக்குமென இருந்தது.இதிலும் அவன் அப்பா காசை பிடுங்கி கொண்டால் அன்றைய இரவு பட்டினியாகவே முடியும்.

குடித்துவிட்டு வந்து அவர் செய்யும் அட்டகாசங்களை தடுக்கமுடியாதவனாய் அழுதுகொண்டே வேலைக்கு செல்வது இவன் அன்றாட வாழ்க்கையாகியிருந்தது.

நேற்று இரவும் இப்படிதான்..எழுந்து வழக்கம் போல வேலைக்கு சென்றுகொண்டிருந்தான்.சிவா வின் கடைக்கு அருகில் தான் பள்ளிகூடம்.
ஒன்பது மணியானால் ஒலிக்கும் இறைவாழ்த்தை கேட்கையில் சிவாவுக்கு கண்ணில் கண்ணீர் மளமளவென வந்துவிடும்..

இன்றும் அப்படி தான்.வேலைசெய்துகொண்டே இறைவாழ்த்தை முணுமுணுத்துகொண்டே இருந்தான்..
"பெரிய தொரை இவரு..பாட்டு பாடுறாரு" ன்னு கையிலிருக்கும் ஸ்பேனரில் முதுகிலே அடித்தான் அவனுடைய ஓனர்..

அழுதுகொண்டே தன் அப்பனை நொந்துகொண்டு வேலையைதொடர்ந்தான்.
சாயங்காலம் அம்மாவுக்கு மருந்து வாங்கணும் பணம்கொடுங்க என்று கேட்டு மருந்தை வாங்கிகொண்டு வீட்டுக்கு விரைந்தான்.அங்கு அவன் அப்பா கையை பிசைந்துகொண்டு உட்கார்ந்திருந்தார்.
இவன் சென்றதும் ஹேய் காசு இருக்கா,குடுடா எனகேட்டார்,
இல்லப்பா இருந்த காசுக்கு மருந்து வாங்கிட்டு வந்தேன்.சுத்தமா இல்லப்பா"ன்னு சொன்னான்.

என்னடா இப்ப மருந்து தான் முக்கியமோ அப்படீன்னுகையில் இருந்த மருந்தை பிடிங்கி கொண்டுபோய் மெடிக்கலில் கொடுத்து காசு வாங்கி குடித்துவிட்டு வந்து அவன் அம்மாவை அடித்து உதைக்க ஆரம்பித்தார்.ஏற்கனவே உடல்நிலைசரியில்லாத அவளோ உயிர்போகும் நிலையில் கிடந்தாள்.

"இன்னையோட நான் போயிடுவேண்டா.நீ இந்தாளை நம்பாத.உன்னைவித்து கூட குடிக்க தயங்கமாட்டான்.நீ எங்கயாச்சும் போய் பொழச்சுக்கோடா"ன்னு சொல்லும் போதே கண்கள் மூடிபோனது.
"சிவாவின் கதறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்து அவன் அப்பனை திட்டிவிட்டு பொழுதுவிடிந்ததும் பிணத்தை எடுக்கமுடிவு செய்துவிட்டு பெண்கள் அழுதுகொண்டிருந்தனர்.
தலைமாட்டில் உக்கார்ந்த படியே அம்மாவினை வெறித்துகொண்டிருந்தான் சிவா.எல்லாம் முடிந்ததும் அழுதுகொண்டே படுத்துவிட்டான்.கடைசிவரை அவன் அப்பனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.மறுநாள் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி போகையில் வாசல்படியிலே உட்கார்ந்திருந்தார் அவன் அப்பா..
எதுவும் பேசாமல் போய் விட்டான்..இதுவே ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்தது.அவன் அப்பா குடிப்பதை விட்டிருந்தார்..காலையில் எங்கோ செல்வதும் மாலையில் வீடு வருவதுமாய் இருந்தார்.ஒரு வாரம் கடந்து வேலை முடித்துவீட்டுக்கு வரும் போது சிவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம் அவன் அப்பாவின் கண்ணில் கண்ணீர் வந்திருந்தது..டேய் நான் பண்ணினது தப்பு தாண்டா,இனிமே இப்படி பண்ணமாட்டேண்டா,நீவேலைக்கு போகாதே.படிடான்னு "கட்டிபிடித்து அழுதுகொண்டே அவனுக்கான பள்ளி சீருடையை எடுத்து கையில் திணித்தார்..அவனுக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.
இவனும் தன்னுடைய தாயினை நினைத்து கண்ணீர் வடிக்க தொடங்கினான். நீ நல்லா படிக்கணும்டா ன்னு அவன் அப்பாவின் குரலில் அம்மா தெரிந்திருந்தாள். வெளியில் மழைவர தொடங்கியிருந்தது.
சிவா ஆனந்த கண்ணீரோடு மழையில் நனைய தொடங்கினான்.அவனுக்கு இது முதல்மழையாய் தெரிந்தது...

சிவாவின் அப்பா கையில் துண்டை வைத்துகொண்டிருந்தார் அவனின் தலைதுவட்ட........

Thursday, September 25, 2008

ஒரு சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:01



திரும்ப காதலைசொல்லும் தருணங்களை தேடிய என் இரவுகள் எல்லாம் தூக்கமின்றி தொலைந்து போயிருந்தது.நினைவுகள் உன்னை பற்றிய நினைவுகள் மட்டுமே எனக்கு தூக்கமாயிருந்தது.நான் தூக்கத்தை தேடவில்லை இரவுகளில்.என் துக்கத்தை மட்டுமே போக்குவதற்கு வழிதேடி கொண்டிருந்தேன்.ஆம் உன்னிடம் காதல் சொல்ல வழிதேடினேன்.


என் பாடபுத்தகங்களில்,கையில் கிடைக்கும் தாள்களிலெல்லாம் நான் மட்டுமல்ல.என் பேனாவும் பிதற்றிகொண்டிருந்தது உன் பெயரை மட்டுமே!உன்பெயர்மட்டுமே அலங்கரித்தது என் வாழ்க்கையை என்று நினைத்திருந்தேன் அப்போது.உனைகாணும் தருணங்களை தவிர புன்னகையை மறந்து போயிருந்தது என் உதடுகள்.வேறு யாரிடமும் என் புன்னகையை நான் காட்டவிரும்பவில்லை என்பதை விட வராமல் இருந்தது என்றே சொல்லலாம்!


உன்னிடம் புன்னகைக்கும் போது கூட இதயத்தில் வலி இருந்துகொண்டே இருக்கும்.நீ என்னை சற்றும் பாராததினால்!உன் பார்வை என் மேல் விழுவதற்காகவே காலையிலிருந்து மாலை வரை உன்னை சுற்றி வந்து கொண்டிருப்பேன்.வட்டத்துக்குள் வந்துவிட்ட என்னை பார்த்திருந்தும் பாராமுகம் காட்டியிருந்தாய்!


வலிதாள முடியாத இரவொன்றில் என் சிந்தையும் பேனாவும் உனக்காக ஒரு கவிதை எழுத துடித்தது.நள்ளிரவு ஒருமணியிருக்கும் என் முதல்கவிதை ஜனனிக்கும் போது!


என்னவளே!

உன் மௌனம் தூக்கத்தை

கலைத்து போனது.

-எதிர்பார்க்கிறேன்

உன் இதழ்களின் இயக்கம் துக்கத்தை

கலைக்குமென!!!!!


வலிகளுக்கு பின்னால் பிறந்த குழந்தையை காணும் ஒரு தாயின் மகிழ்ச்சியைகொண்டிருந்தேன் இந்த வலிகளை வரிகளாய் எழுதிவிட்டு!


அடுத்தநாள் காலையில் என்னுடைய காதலை உன்னிடம் சொல்லிவிட முயற்சித்ததில் வழக்கத்தை விட அதிகமாகவே தோற்றுபோயிருந்தேன்.இயலாமையின் உச்சக்கட்டத்தில் இருந்தேன் நான்!


உன்னுடன் படிக்கும் என் மாமன் மகளிடம் உன்மீதான காதலை சொல்லவே எனக்கு பலமணித்தியாலங்கள் பிடித்திருந்தது.வேறு வழியே இல்லை என இயலாமையின் காரணமாய் அவளையே தூதூவாய் அனுப்பியிருந்தேன்.

காதலுக்கு தூதென்பது அந்தகாலம் முதல் உள்ளது தானே!


ஒரு அரையாண்டு தேர்வை எழுதிவிட்டே அங்கலாய்த்துகொண்டிருந்தது என் மனது முடிவை எதிர்நோக்கி!உன்னை எதிர்பார்த்ததை விட என் மாமன் மகளை இன்று அதிகமாய் எதிர்பார்த்திருந்தேன்!மாலை பொழுது எனக்கு அதிக வேதனையும் எதிர்பார்ப்பை உடையதாயும் இருந்தது!


அவளின் பதிலில் குருதி லேசாகவழிந்தது என் கண்ணில்.ஆம் இதயவலியில் வெளிப்படும் கண்ணீர் குருதிகலந்ததாக இருந்தது.அது இன்னமும் என் வலியை அதிகபடுத்தியிருந்தது.


இப்போது காதலை பற்றிய யோசனைகள் இல்லையெனவும் படிப்பு முடிந்தவுடன் வீட்டில் திருமணம் என்றும் சொல்லி வைத்திருந்தாய்.வாழ்க்கை நழுவி விட்டதாய் நடக்க ஆரம்பித்தேன்!ஆனால் உன்னை பார்ப்பதை விடுவதாய் எண்ணம் இல்லை எனக்கு!


ஆறு மாதங்கள் கழித்து ஒரு கடைசி நாளின் தேர்வுக்காய் நீயும் நானும் எதிரெதிரே அமர்ந்து படித்துகொண்டிருக்கும் போது நல்லா இருக்கீங்களா என்ற உனது விசாரிப்பில் நான் கொண்ட மகிழ்ச்சி தான் மகிழ்ச்சிக்கே உச்சம் எனசொல்வேன்.


இதுதான் நீ என்னிடம் பேசிய முதல்வார்த்தை.திறக்கபடாத சிப்பியிலிருந்து திடிரென வெளிவரும் முத்துக்களை காண்கையில் எத்தனை மகிழ்ச்சி இருக்கும்.அது எனக்கு அப்போது இருந்தது.


அது தான் நான் உனை காணும் கடைசி நாளென்று அறியாமல் இருந்தேன்.மாலை பேருந்துக்காக நீ காத்திருக்கையில் கடைசியாய் நீ புன்னகையை எனக்கு தந்திருந்தது..அது எனக்கு இரண்டு மாதங்கள் கழித்து உனை மீண்டும் பார்ப்பேனா? மாட்டேனா ? என்ற கேள்வியையும் கேட்டுகொண்டிருந்தது!


உனை மீண்டும் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துகொண்டு...


தொடரும்......

Tuesday, September 23, 2008

சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:00





என்னுடைய இதயம் சிதைக்கபடாமல் இருந்தது.முன்னொரு காலத்தில்.அது எனக்கு வசந்தகாலங்களாய் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள் என்னை எதிர்நோக்கி கொண்டிருப்பதாய் இருந்தது,ஆம் அப்போதெல்லாம் உன்னுடன் நான் இருக்கும் ஒவ்வொரு நொடிகளையும் இதயத்தில் செதுக்கி வைத்துகொண்டிருந்தேன்.

முதல் முதலாய் நான் உனை பார்த்த அந்த கணம் எனக்கு அலாதியான மகிழ்ச்சியை தந்திருந்தது.அதுவே உன்னை மறுபடியும் பார்க்க தூண்டியிருந்தது,எனக்கானவளை நான் கண்டுவிட்டதாய் நினைத்திருந்தேன்.
அப்படி தான் நீயும் என்னில் நுழைய ஆரம்பித்திருந்தாய்.

மாலை பொழுதானால் வீடு தேடிவரும் பசுவை பார்த்ததும் ஓடிபோய் மடிமுட்டும் கன்றினை போல் காத்து கிடந்திருப்பேன்.அந்த காத்திருத்தல்கள் எல்லாம் சுகமாகவே இருக்கும் அப்போது.பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒரு பெண்ணின் வலிகளையும் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஒத்ததாய் இருந்தது என் எண்ணங்கள் உன்னிடம் என் காதலை சொல்லும் வரை!

ஒரு கொடுரமான கொலைகாரனின் திட்டங்களை ஒத்திருந்தது என் பொழுதுகள்.சந்தர்ப்பம் தேடிகொண்டிருக்கும் நினைவுகள் எல்லாம் என் காதலை சொல்லிவிட.காதல் சுகமென்று படித்துவிட்டு அதில் இந்த மாதிரியான
சொல்லமுடியாத வலிகளை காணும்போதெல்லாம் காதல் என்ற வார்த்தையை கண்டுபிடித்தவனை திட்டி தீர்த்துகொண்டிருக்கும்.

ஆயினும் உன்னை கண்ட அடுத்த சிலநொடிகளில் காதல் என்ற வார்த்தையை கண்டுபிடித்தவனுக்கு கோவில் கட்டிவிட தோன்றும்..வார்த்தையை கண்டுபிடித்தவனுக்கே கோவில் என்றால் என் வாழ்க்கையில் நான் கண்டெடுத்தவள் நீ!

உன்னை நான் சொல்லமுடியாத ஒரு இடத்தில் வைத்திருந்தேன் என்பேன்.அதுவே காதலின் உச்சம் எனவும் சொல்ல நினைக்கிறேன். நான் உன்னை பார்க்கும் அந்த கணங்களை தான் காதலுக்கான உண்மையான அர்த்தங்கள் என சொல்வதிலும் பெருமைகொள்வேன்..

நெரிசல்களுக்கிடையில் சிக்கி திணறி எனக்காக என் தாய் தந்தை இறைவனை வேண்டியிருந்த திருவிழா கூட்டங்களில் முட்டி மோதி அருகில் வந்து உன் தாவணி முந்தானையில் விரல் தொட்டு சிலாகித்து கொண்டிருப்பேன்..

பந்தை எதிர்நோக்கிய ஒரு கிரிக்கெட் வீரனின் சரியான சமயத்தில் நோக்கும் திறனை நான் பெற்றிருக்காமல் இருந்தேன்.அருமையானதொரு சந்தர்ப்பத்தில் தனிமையில் உன்னை சந்தித்த போதும் ஒரு ஊமையை ஒத்திருந்தது என் கணங்கள்.

சூரியனை மிக அருகில் பார்க்கமுடியாத விண்வெளி வீரனை போலிருந்தது.உன் அருகில் நின்று என் காதலை பிரசவிக்க தவித்த நொடிகள்.என் கண்கள் உன் கண்களை நேரடியாய் பார்க்கமுடியாமல் தலை கவிழ்ந்து நான் நின்றது போருக்கு பாதி வரை சென்று புறமுதுகு காட்டி திரும்பி ஓடியவனை ஒத்திருந்தது என் அசைவுகள்..

திரும்பி நடந்துகொண்டிருந்தேன்.திரும்ப காதலை சொல்லும் தருணத்தை தேடி......................

தொடரும்......