CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, September 22, 2009

அழுதுலர்ந்த மலரொன்றின் மரணம் குறித்து....


மகிழ்ச்சியின் அத்தனையெல்லைகளையும்
கடந்து போயிது தன்னெல்லையென
மனங்கள் யாவற்றையும் வியப்பில்
ஆழ்த்தி விடுவதென்று வேர்களை
ஆழமாய் பரப்பிக்கொண்டு
தூரல்களிலிருந்து கனத்து போன
மழையனைத்திலும் நனைந்தவாறே
மெல்லமாய் பூக்கத்துவங்கியிருந்த
பூவொன்றின் வாசமானது
பூமியெங்கும் வீசத்தொடங்கியத்தருணத்தில்
நீ அந்த பூவினை கசக்கிவிட்டெறிந்திருக்கிறாய்!

உனக்கும் அவனுக்கும் மிகப்பிடித்தமான
அந்த பூவின் நிலைகண்டு
அவனுக்கு மட்டுமான வலியில்
ஜனனித்த உப்புநீரானது அவன்
மரணத்தின் மீது தெளிக்கப்போகும்
பன்னீர்த்துளிகளின் மாதிரிகளாய்
உணர்ந்தழுது உலர்ந்து போகலாம்
உன்னால் கொலைசெய்யப்பட்ட பூ..........

Wednesday, August 19, 2009

ரசிக்கவியலாத மழை....

காதலியுடன் உரையாடியவாறு மொட்டைமாடியிலேயே கவிழ்ந்துபோன தலையை தட்டி எழுப்பி அலுவலகம் கிளம்புடா நேரம் ஆயிடுச்சுன்னு அம்மா
சொல்லிமுடித்த நிமிடத்திலிருந்து சிறிதாய் ஆரம்பித்த தூரலில் நனைந்தவாறே அரைமணிநேரத்தில் அலுவலுக்கான வேடம் பூண்டு கிளம்பிவிட்டேன்!

அடுத்த சிலநொடிகளில் தாமதமாவது கூட தெரியாமல் தூங்குகிறாயே என்று வானம் கொஞ்சம் வேகமாய் தான் கொட்டத்தொடங்கியது! ஏற்கனவே நனைந்து காய்ந்திராத என் முடிகள் மேலும் நனையத்தொடங்கியதில் காதலியின் நேற்றைய முத்தத்தினை கதகதப்புக்காய் கடன் வாங்கிக்கொண்டிருந்தது நினைவுகள்!

மெல்லிய புன்னகையானது எனக்கு மட்டும் உரித்தானதாய் நினைத்துக்கொண்டு புன்னகைத்துக்கொண்டே தொடர்ந்த ஈருருளி பயணத்திற்கு விளக்கேதும் தேவையில்லை என்பதாய் வெளிறத்தொடங்கியது வானம்!

அவளும் இந்நேரம் விழித்திருப்பாள் ..அதனால் தான் எனக்கு வெளிச்சம் வந்துவிட்டதாய் அல்பமாய் சிந்தித்துக்கொண்டிருந்த மனதில் ஏனோ அவளின் முகத்தை நேரில் காணமுடியாத ஒரு வருத்தமும் சிலமழைத்துளிகளின் மூலமாய் வந்து ஒட்டிக்கொண்டிருக்கலாம்!

அவைகளை துடைத்தெறியும் எண்ணமேதுமின்றி நண்பனிடம் ஈருருளியை கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறி யாருமற்ற பின்புற இருக்கையில் உட்கார்ந்துக்கொண்டு ஜன்னலோரத்தில் ஒழுகிக்கொண்டிருந்த சில மழைத்துளிகளை தொட்டு தொட்டு கீழ் தள்ளி ரசித்துக்கொண்டிருந்தேன்!

சிலமைல் தூரத்திற்கு அப்பால் ஒரு பேருந்துநிறுத்தத்தின் அருகில் ஒரு பெண்மனியின் அழுக்குச்சேலையை போர்வையாக்கி என்னசெய்வதென்று புரியாமல் இங்குமங்குமாய் விழிந்த்துக்கொண்டிருந்தது அவளின் காலுக்கு கீழ் நான்கு கண்கள் ..மொத்தமாய் நனைந்துபோன கற்றை கற்றையான அந்த ஒட்டிய முடிகள் ஏதோ ஒரு விளம்பரத்திற்கு வரும் நாயகனின் தலையை ஒத்திருந்தது!

மெல்லமாய் தலைமுடியிலிருந்து வழியத்தொடங்கிய மழைத்துளிகளோடு
கலந்து கொண்டிருந்த ஆறுகண்களின் உப்புநீரை பார்த்து கதறத்தொடங்கிய பேருந்து நகர்ந்தும் அங்கேயே நகராமல் நின்று கொண்டிருந்த மனமானது
அதுவரை சன்னலோடு விளையாடிக்கொண்டிருந்த விரல்களை மெல்லமாய்
உள்ளிழுத்துக்கொண்டு அமைதியானது!

மதமெனும் பெயரில் புனையப்பட்ட கற்சிலைகள் அல்லாததொரு எனக்கான கடவுளொன்று இருப்பதாய் இன்று வரை நான் வணங்கிக்கொண்டிருக்கும் ஒரு உருவமற்ற கடவுளிடம் இவர்களுக்காய் வேண்டத்தொடங்கினேன்!

"இறைவா ! இந்த மழையொன்றும் அவ்வளவாய் ரசிக்கத்தகுந்ததாய் இல்லை"

Tuesday, August 18, 2009




*
உன்
இமைகள் திறப்பதனாலேயே
என்
பொழுதுகள் விடிகிறது!

*
உன்
இதழ்கள் திறப்பதனாலேயே
என்
மொழிகள் பிறக்கிறது!

*
இரவும்
பகலும்
உன் இமைகளால் நிர்ணயிக்கப்படுகிறது!

மொழியும்
மௌனமும்
உன் இதழ்களால் உருவாக்கப்படுகிறது!

*
நீ
எனக்கு கொடுத்த
முத்தத்தின் ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளவே
சூரியனும் தன் கதிர்களை
நீட்டியிருக்கலாம்!

ஓசோனின்
ஓட்டைக்கு உன் முத்தமும்
காரணம் தான்!

*
என்
உயிருக்குள் புதைக்கப்பட்ட
அந்த முதல் முத்தத்தினை
எதாலும் தொடமுடியாத படி
ஒளித்துவைத்திருக்கிறது காதல்!

*
அந்த
முத்தத்தின் இனிமையை
மாதிரியாய் கொண்டே என்னால்
பலமுத்தங்கள் தரமுடிகிறது!

*
உன்
இதழ்களிலிருந்து
வருபவை போலில்லை என்று
திட்டி தீர்க்கிறது
என் முத்தம்!

*
ஒரு
முறை உன்னிதழிலிருந்து
என்னிதழுக்கு இனிமையை
ஒட்டிக்கொள்ளவா?

*
"ச்சீ போடா"
என்று மெல்லமாய் தலைத்தூக்கி
விழிமூடி கிடக்கையில்
சட்டென திருடிக்கொள்கிறது
என்னிதழ்கள்
உன் இனிமையை!

*
"இவ்ளோ தானா" என்று
நீ உதட்டை பிதுக்கும் போது
ஒரு சில முத்தங்களை
காற்று திருடிக்கொண்டிருக்கலாம்!

*
காற்றோடு
மல்லுக்கட்டி நானே
ஜெயித்துவிடுகிறேன்!
இடைவெளியில்லாமல்
இதழ் பதித்தவாறு........

*
நம்
இருவரின் முத்தத்தையும்
மூச்சிலிருந்து உள்வாங்கி
வீசத்தொடங்கியதால் தான்
காற்றின் பெயர் தென்றல்..

*
நீ
தரும் முத்தங்கள்
தன்னை விட இதமாய் இருக்கிறதென்று
பொறாமையில் வேகமாய்
வீசுவதனால் தான்
தென்றலின் பெயர் புயல்...

*
உலகுக்கே
உயிரூட்டும் காற்றுக்கு
பலப்பரிமாணங்களை தரும்
நம் காதல் கடவுள்!



*

Sunday, July 19, 2009

நேசம் முறிந்த பகலுக்கான இரவொன்றில்...




எதிர்வீட்டுக்காரனின் வாயால்
உதைபட திராணியற்று பண்பலையின்
தொண்டையை அறுத்துவிட்டு
வறண்டுகிடக்கும் வெறும்குடலினை
மல்லாக்கவோ
குப்புறப்படுக்கவைத்தோ
ஒப்பாரி வைத்துச்சென்றது சிகரெட்...
இரைச்சல்களூடான யாருமற்ற
நிசப்தத்தில் நாளைக்கு போதையில்
ஆழ்த்திவிடுவதாய் ஆறுதல் சொல்லிவிட்டு
அறையின் மூலையில் கிடந்தது
கோபமாய் வீசியெறியப்பட்ட சட்டைப்பை...

நாளையோ அதற்கடுத்தநாளோ
ஏதாவதொரு கொலையை அல்லது
தற்கொலையை செய்துமுடிக்குமாறு
கட்டளையிட்டவாறு விசும்புகிறது மனது...
எந்தக்காரணங்களுமின்றி
எனை சல்லடையாக்கிய அவளின்
வார்த்தைகளின் தாக்கம் குறைவதாயில்லை


Wednesday, July 15, 2009

என் இரக்கத்திற்குரிய ஒரே கடவுளுக்கு!


பொழுதுபோக்கிற்காகவோ
பிழைப்பு நடத்துவதற்காகவே
என் பாதங்களில் நசுங்கி மடியும்
சிற்றுயிரிலிருந்து என் கண்களுக்கு
எட்டாத கிரகங்கள் என எல்லாமும்
படைத்துவிட்டு எங்கேயோ போய்
முகம் மறைத்துக்கொண்டு இருக்கிறாய்!

நீ எனக்கு படைத்த புலன்களை
வரைந்துவிட்டு உன்னை யாம் படைத்து
உன்னிலிருந்தே ஆரம்பித்தோம் எம்மில் பிரிவுதனை!

மதமென்னும் வாளெடுத்துக்கொண்டு
வெட்டி வெட்டி பிரித்தோம்!
உயிர்களை மட்டுமல்ல
இனம் அதற்கொரு மொழி என்று
பலப்பல இத்யாதிகளாய் பிரிந்தோம்!

நீ இயற்கையாய் தரும் மரணங்களையும்
தாண்டி நாமே செயற்கையாய் தருகிறோம்
எமக்கு பிடிக்காதவனுக்கோ
அல்லது பிடிக்கொடுக்காதவனுக்கோ!


இது எல்லாவற்றையும் நீ பார்த்துகொண்டிருப்பதாய்
நாம் வைத்த பெயர்களோடு எம்மவர்களே
உன்பெயரில் அருள்வாக்கு தந்துகொண்டிருக்கிறார்கள்!

என் காதலியின் அழிச்சாட்சியத்தில்
தொலைந்துபோன என் காதலின் முடிவிலிருந்து
நீ இல்லவே இல்லை என்று வாதிட்டுகொண்டிருந்த
எனக்கும் ஏனோ உன் மேல் இரக்கம்
வரத்தொடங்கியிருக்கிறது இப்போதெல்லாம்!

ஆம்
என் இரக்கத்திற்குரிய கடவுளே!

உன்னை மையப்படுத்தியே சுழலவேண்டிய
உலகம்
உன்மேல் பழிசுமத்தியே சுழன்றுகொண்டு
இருக்கிறது!

ஒருவேளை உன் கண்கள் குருடாயிருந்தாலும்
நான் கண்தானம் செய்துவிட்டு இறந்துபோகிறேன்!

எடுத்துப்பொருத்திக்கொண்டு
இங்கு வந்துதான் பார்த்துவிட்டுப்போயேன்
உன் படைப்பின் அவலத்தை!

Friday, July 10, 2009

தனிமையில் உன்னுடன்....


நெரிசல்களோடான
என் பயணத்தில் எனை ஆட்கொண்ட
தனிமையின் நினைவில்
ஏதோ ஒரு பிரதேசத்தில்
கைக்கோர்த்தபடியே நடந்துகொண்டிருந்தோம்!
ஒருகையில் உன் விரல்களை
பின்னிக்கொண்டு
ஒரு கையில் செவ்வானத்தை
இழுக்கமுற்படும் என் மௌனங்களின்
சப்தம் யாருக்குமே கேட்டிருக்கவாய்ப்பில்லை!
உன்னை உரசியபடியே
அதோ தூரத்தில் பறக்கும் அவ்விரு
பறவைகளின் நேசத்தையும்
உனையே சுழலும் என் காதலையும்
என்னுடன் பயணிப்பவர்களுக்கோ
உனக்கோ தெரிந்திருக்கவாய்ப்பில்லை!
ஏனோ உனக்கு தெரியப்படுத்தவும்
எனக்கு தெரியவில்லை!

Friday, June 12, 2009

தேவதையானவள்:02




உன் சொல்லுக்கு
கட்டுப்பட்டவாறே விழிமூடுகிறேன்
இனியகனவு காண..

எந்தவித அபிமானமும்
இல்லாமல் மீண்டும் வனத்தினுள்
சென்று இரைதேட தொடங்கியது
என் கவிதை...

அதே
முகம் தெரியா
இறகுகளற்ற தேவதை உருவம்
வந்து செல்கையில்

அலைபேசி
சிணுங்குகிறது சிந்துபைரவி
ராகத்தோடு ..


"என்ன தேவதைகனவில் வந்தாளா"
என்ற கேள்வியுடன்
மீண்டும் உன் குறுந்தகவல்....