CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, September 12, 2007

மண்ணின் மைந்தனே-நீ தானே மன்னவன்

வாரிச் சுருட்டும்

வக்கிர மந்திரிகளிருக்க

வழிமொழிய

வகைதெரியா மக்களிருக்க

வாரிக்கொடுக்கும்

வள்ளல்களும்

வலுவிழக்க

வசதியில்லா ஏழை வாழ்வில்

வசந்தம் தான்

வந்திடுமா?


உதவிக்கு அலைந்தவன் கூட

பதவிக்கு வந்துவிட்டால்

கதவடைப்பான்

கதம் என்று சொல்லியே

மதம் பிடித்து


- ஆயினும் எம்மக்கள்

அகம் முழுக்க அவனை நினைத்து

யுகம் முழுக்க உழைத்தாலும்

நகமளவு கூட நினைக்காமல்

சுகமான வாழ்க்கை அவனுக்கு

சோகமான வாழ்க்கை எம்மக்களுக்கு


வெளிச்சம் வேண்டி

பளிச்சிடும் சின்னங்களில்

அளித்திடும் வாக்குகளால்

பகட்டான வாழ்வு உனக்கு

இக்கட்டான நிலை எமக்கு


பாவணை செய்வோன் உன்னிடம்

ஆவணத்தை அளித்துவிட்டு

கோவணத்தோடு

அவலமாய் எம்மக்கள்.

அவர் சார்பாய் அறை

கூவல் விடுகிறேன் உனக்கு....

-கேள்


மஞ்சத்திலே

கொஞ்சிக்கொண்டிருப்பவனே

பஞ்சத்தில் அடிபட்டு

மிஞ்சிய எம்மக்கள்

அஞ்சாமல் உனக்கு

நெஞ்சம் கொதித்தால்

தஞ்சம் புகுவாய் நீ

தரைக்குள்...

பாதகம் செய்வோனே

ஆதவன் அஸ்தமிக்கும் காலம்

அருகில் தான் உள்ளது.


எம்மக்களே

ஆதவன் உமக்கு

உதயமாக வேண்டுமானால்

மாதர் பின் அலையாதே

சோதனை முறியடிக்க

சாதனத்தை கையில் எடு


சரித்திரம் படைக்க சாமியை தேடாதே

தரித்திரம் ஒழி -உன்

விழித்திர முதலில்

தனித்திறம் வளர்


உயர்வுக்காக

ஊன் பலி கொடுக்காதே

உன் பலியாம் திறமையை கொணர்


ஊமையாய் இருந்துகொண்டு

ஆமையை குறை கூறாதே

தீமையை சுடு


வேசிபின் அலையாமல்

பாசிகளை களைய முற்படு

தூசிகளை துடைத்து

நேசிப்பாய் சமத்துவத்தை.

யோசிப்பாய் ஒரு நிமிடம்


வேர்வை சிந்துவது நீ

போர்வை தூக்கம் அவனுக்கு

சோர்வை காணும் நீ -தொலைநோக்கு

பார்வை பார் சரியான

தீர்வை காண்..


இனியும் பொறுக்காதே

அணி திரள்வீர்

பணி முடிப்பீர்

கனி நம் கையில்


மண்ணின் மைந்தனே

மன்னவன் என்று நம்

முன்னவன் வினவினான்

உன்னவன் நானும்

வழிமொழிகிறேன்


நீ

இம்மண்ணின் மைந்தனென்றால்

நீ தான்

மன்னவன்...

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: