CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, February 26, 2008

என் கனவு தேவதை

எல்லாரும் கவிதை கதைகளை படிச்சுட்டு அழுவாச்சி அழுவாச்சியா வருதுன்னு ரொம்ப சோகத்தில மூழ்கிட்டதால இந்த கனவு தேவதையை பற்றி எழுதிடாலம்னு முடிவு பண்ணிட்டேன்..படிக்க நேரமிருக்கரவங்க படிச்சிக்கோங்க..


நான் முதலில் இரு அணுக்களாய் தான் இருந்தேன்..பின்பொருநாள் இரண்டும் ஒன்றாய் சேர்ந்து எனக்குள் சில இரசாயனமாற்றம் நிகழ்ந்து ஆனால் உணர்வுகளின்றி ஒரு புள்ளியாய் இருந்தேன்..சிலநாட்கள் நகர்ந்து நானும் கொஞ்சம் பெரியதாக ஆரம்பித்தேன்..சரியா மூனு மாசம் இருக்கும்..நான் இருந்த அந்த இருட்டறை சட்டென சாய்கிறது..எனக்குள் மிதமான ஒரு அதிர்வு..அப்போது தான் எனக்கு சிலவற்றை உணர முடிகிறது..நான் இருக்கும் அறை சாய்ந்த வுடன் ஒரு சின்னதாய் ஒரு குரல் "அப்பா அம்மா கீழ விழுந்துட்டாங்க " என்று..

" அய்யோ என்னா ஆச்சு " என்று கணீரென்ற அந்த ஆண்குரல்.எனக்கு ஒன்னுமே புரியலை..
" தண்ணிர் கொண்டு வாடா சீக்கிரம் " பயத்தோடு அந்த குரல்..சிலநேரத்திற்கு பின் என்னம்மா ஆச்சு.ஹாஸ்பிடலுக்கு போலாம் வா என்றது..

ஒன்றுமே புரியவில்லை எனக்கு..என்ன இது இத்தனை நாளில்லாமல் ஏதேதோ குரல்கள் என்னை சுற்றி எனக்கு கேட்கிறது என்று.

கொஞ்சநேரத்தில் மீண்டும் அந்த குரல்" டாக்டர் இவங்க என் மனைவி.திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க.என்னன்னு தெரியலை."
நான் இருக்கும் அறையை யாரோ அழுத்துகிறார்.எனக்கு ஒரே பயம்..புரியாமால் விழிக்க ஒரு மெல்லிய குரல் "சந்தோசமான விசயம் தான் .உங்க மனைவி பிரகனண்ட் ஆக இருக்காங்க" என்றது..

ஹய்யா என்று சந்தோசம் தொணித்த அந்த ஆணின் குரலுக்கு பின்னால் நான் இருக்கும் அறை சற்று மேலே சென்று சுழல ஆரம்பிக்க

விடுங்க ..ஹாஸ்பிடல்ல போய் இப்படி எல்லாரும் பார்க்கிறாங்க இல்ல..என்றது ஒரு அழகான பெண்குரல்..எனக்கு இதுவரை இல்லாத ஒரு ஈர்ப்பு இந்த குரலை கேட்டதும் தான்..யோசிக்கிறேன் இவர் யாராயிருக்குமென்று...ஆனால் விளங்க வில்லை..

அதன் பின் அறை நகர்ந்து சிலநேரங்களுக்கு பின்னால் நான் முதன் முதலில் கேட்ட அந்த சின்ன குரல் மீண்டும் அப்பா அப்பா அம்மாவுக்கு என்னப்பா ஆச்சு.ஏம்பா அம்மா கீழவிழுந்துட்டாங்க..என்றது.

ஆண்குரல்" உனக்கு தங்கச்சி பாப்பா வேணுமின்னு கேட்ட இல்ல..அம்மா வயிற்றில் தான் இருக்கா..நீ அண்ணாவாயிட்ட..." என்றது

ஹையா ஜாலி..அம்மா அம்மா தங்கச்சி எங்கம்மா இருக்கா காட்டு..என்று யாரோ என் அறையை தொட்டு பார்த்தார்.

அப்போது தான் புரிந்தது..இவங்க தான் என்னுறவுகள் என்று..ஆனால் என்னால் வெளி வர தோணவில்லை..

சில மாதங்கள் நகர நான் பெருத்துக்கொண்டே போகிறேன்..என்னை அடிக்கடி தொடுவதும் அந்த ஆண்குரலில் விசாரிப்புகளும் மெதுவான தடவல்களும் ம்ம்ம் என்ற சத்தங்களும் கேட்டு கொண்டே இருக்கின்றேன்..

பத்து மாதங்கள் ஆகியிருக்கும்..என்னவோ தெரியவில்லை..என்னால் உள்ளே இருக்கமுடியவில்லை..நான் இருக்கும் அறையை என் காலால் எட்டி உதைக்கிறேன்..வெளியே அந்த அழகிய குரலின் கதறல்..என்னால் உள்ளே இருக்கவே முடியவில்லை..என்ன ஆனது என் அம்மாவுக்கு என்று வெளியே வரதுடிக்கிறேன்..

சிலநேரத்திற்கு பின் என் அம்மா பயங்கரமாய் கதறுகிறார்.நான் வெளியே வரமுடியாத இயலாமையில் உதைக்கிறேன்..சில பெண்குரல்கள் அம்மாவை திட்டியும் சிலர் ஆறுதலாய் பேசியும் என்னவோ செய்கின்றனர்..

என் அம்மாவின் பெரிய அலறல் அப்படியே அமைதியாகிறது..அங்கிருந்த பெண்குரல்கள் அப்பாடா அவங்க அப்பா சொன்ன மாதிரியே பெண்குழந்தை தான் பிறந்திருக்கு..என்ற குரலில் ஒரு மகிழ்ச்சி தெரிகிறது..

அப்போது தான் புரிகிறது..நான் உதைத்ததால் தான் அம்மா கதறியிருக்கிறாள் என்று..நானும் மன்னிப்பு கேட்டு கதற ஆரம்பிக்கிறேன்..
ஒரே வெளிச்சம்..பெரிய பெரிய உருவங்கள்..என்னை எடுத்துசென்று ஏதோ திரவம் விட்டு சுத்தபடுத்துகிறார்கள்..

பின் அந்த பெண்குரலில் ஒரு குரல் மட்டும் வந்து இங்க பாரும்மா குழந்தை மூக்கு உன்னை மாதிரியே இருக்கு என்று ஒரு பெண்ணின் பக்கத்தில் படுக்க வைக்க அந்த பெண் ஹப்பா பிறை நிலவின் நெற்றிகொண்ட அவள் என் தலையில் வருடி என் நெற்றியில் முத்தமிடுகிறாள்..அந்த முகம் அப்படியே என்மனதில் பதிகிறது..அவள் தான் என் அம்மா என்றும் தெரிந்து கொண்டேன்..

அதன் பின் அழுகை..பசிக்காய் பால் ஊட்டுகிறாள் என் அம்மா..பயணம் செய்கிறேன்..

ஹைய்யா தங்கச்சி பாப்பா வந்துடுச்சு..என்று என் அண்ணனின் குரல்..

சூ பாப்பா தூங்குது கத்தாதே எழுந்தா அழுவும் னு அப்பாவோட குரல்..

எத்தனை பாசமான குடும்பம் என்று பெருமிதத்தோட தூங்குகிறேன்.

சிறிது நேரத்தில் அண்ணன் ஏம்மா தங்கச்சி தூங்கிகிட்டே சிரிக்கிறா ன்னு கேட்டான்.
அதுக்கு அம்மா சொன்னா "பாப்பா கனவுல தேவதைங்க வந்து சிரிக்கவெப்பாங்கடா அதான் சிரிக்கரா"
நான் என்னை முதன் முதலில் வருடி முத்தமிட்ட பிறை நிலவின் நெற்றி கொண்ட உன் முகம் கண்ட ஆனந்தத்தில் தான் சிரிக்கிறேன்..நீ தானம்மா என் கனவு தேவதை என்று சொல்ல வாயெடுக்கிறேன்,,

அவர்களை போல அழகிய வார்த்தைகளை என்னால் வெளிப்படுத்த முடியாமல் மீண்டும் அழத்தொடங்குகிறேன்.

என் செல்லம் என் பட்டு என்று எனக்கான கொஞ்சல்களோடும் அரவணைப்புகளோடும் பயணித்து கொண்டிருக்கிறேன்..

இத்தனை நாளா எனக்குள்ளிருந்த இந்த ஏக்கங்களையெல்லாம் எப்படியாச்சும் சொல்லணும்னு தவிச்சப்ப தான் என்னை படைச்ச பிரம்மா வந்து சொன்னாரு.. தணிகைன்னு ஒருத்தன் இருக்கான்..அவன் கனவுல வரது எல்லாத்தையும் போய் எல்லார்கிட்டயும் உளருவான்..நீயும் போய் அவன் கனவுல சொல்லு..அவனே சொல்லிடுவான்னு" அதான் நேத்து ராத்திரி தணிகா மாமா கனவுல வந்து எல்லாத்தையும் சொன்னேன்..

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: