CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, February 28, 2008

பிப்ரவரி 17 அறிமுகமானாள் என் கனவு தேவதை..

பிப்ரவரி 17 அட இன்னிக்கு ஞாயிற்றுகிழமை..எப்பவும் போல 10 மணிக்கு எந்திருச்சு காலைகடன் முடிச்சு காலையில சிக்கனோட இட்லி..நல்லா தான் இருந்துச்சு ..சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருந்தேன்.
திடீர்னு ஒரு யோசனை ..3 கிலோ மீட்டர் தாண்டினா பிரண்டு வீடு.அவன கூட்டிகிட்டு கோவளம் பீச்சுக்கு போலாம்.அங்க நிறைய கலர் கலரா பிகர்ஸ் வரும்.அப்படியே சைட் அடிச்சமா ன்னு நம்ம பிரம்மா மூணு நாளுக்கு முன்னாடி வந்து சொல்லிட்டு போன அந்த தேவதை மாட்ட மாட்டாளான்னு மனசு மூலையில
சின்னதா ஒரு ஏக்கம்.னு பொய் சொல்ல மாட்டேன் மனசு முழுக்க அவள பத்தி மட்டும் தான் நினைச்சிருந்தேன்..

ஏக்கத்தோடயே வழக்கமா நான் போடற கேஷிவல்ல இருந்து பார்மல் ட்ரஸ்க்கு மாறி கிளம்பலாம்னு முனியம்மாவை ஒரு உதை உதைச்சேன்..

"டேய் அண்ணா, எங்க போற" தங்கச்சிங்க எப்பவுமே இவ்ளோ மரியாதையா தான் கூப்பிடுவாங்க..

"( போவும் போதேவா) என்ன இப்ப"
" அம்மா அப்பாலாம் கிளம்பறாங்க வெளிய போகணுமாம்,அவங்க கூட உன்னையும் வரசொல்றாங்க"

"எதுக்கு எங்க போறாங்களாம்.இருக்கரதே ஒரு நாள் லீவு.அதைக்கூட" அப்படின்னு வண்டிய ஆப் பண்ணிட்டு வீட்டுக்குள்ள போய்

" என்ன எங்க போறீங்க நான் எதுக்கு வரணும்.எப்ப பாரு"

"கீதா அந்த போட்டோவ அண்ணா கிட்ட காட்டு.அதை பார்" அம்மா முடித்தாள்

" என்ன போட்டோ,எதுக்கு நான் பார்க்கணும் தெளிவா எதாச்சும் சொல்லுங்களேன்" டென்சனா முறைச்சேன் தங்கச்சிய

" இந்தாடா எவ்ளோ அழகா இருக்கு பாரு அண்ணி.உனக்கு பொண்ணு பார்க்க தான் போறீங்க எல்லாரும்"
ரகசிய மூட்டை அவிழ்த்தாள் தங்கை.

" எனக்கென்ன அவசரம் கல்யாணத்துக்கு.என்ன வயசாச்சி இப்ப.அதெல்லாம் முடியாது,என்னை விட்ருங்கோ"
வெறுப்பாய் பேசினேன்.

" டேய் எவ்ளோ அழகா இருக்காங்கடா அண்ணி, மிஸ்பண்ணிடாதே போட்டோ மட்டும் பாரு, உனக்கே பிடிச்சுடும்"

" இங்க பாருப்பா உனக்கு இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிவெக்க ஆசையா என்ன? நல்ல பொண்ணுடா.ரொம்ப அழகா இருக்கா..விசாரிச்சதில் எல்லாம் நல்லவிதமா தான் சொல்றாங்க.அதான் விடமுடியலை.எங்களுக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு.என்ன வயசாகலை உனக்கு..அதெல்லாம் கல்யாணம் பண்ர வயசுதான்" அப்பா வழக்கம் போல நீண்ட வகுப்பெடுத்தார்..

எனக்கும் ஒரு சின்ன ஆசை என்னோட தேவதையா இவளே இருந்துட்டா..சட்டென்று.

"போட்டோவ காட்டு பாத்துட்டு அப்புறமா முடிவு பண்ணலாம்.ஆனா எங்கிட்ட இவ்ளோ நாள் மறைச்சிவெச்சீங்க" மெதுவா சொல்ல

"திடீர்னு அமைஞ்சது.உன் போட்டொ எல்லாம் குடுத்தனுப்பிச்சு பொண்ணும் சரின்னு சொன்னதுக்கப்புறம் சொல்லிக்கலாம்னு தான்" அம்மா

அவர்கள் அதன் பின் பேசிகொண்டதெதையும் காதில் வாங்காமல் ரசித்துகொண்டிருந்தேன்..பின்ன என்னங்க இவ்ளோ அழகா முகத்திலே தெரியுதுங்க எனக்கு ஏத்த மனைவியா இவ இருப்பாள் என்று..

மூன்றாம் பிறை யளவு நெற்றி.சின்னதாய் ஒரு பொட்டு.அதன் இருபுறங்களும் ஆண்மையை தாக்கும் அம்புகளை எய்தும் வில்லாய் இரு புருவங்கள்.கருப்பு வண்ணமீன் கொண்ட அழகிய குளம் இரண்டு வில்லுக்கு ஏதுவாய் வளைந்து கொண்டீருக்க..

ரொம்பவே மெனகெட்டு பலமாதங்களாய் செதுக்கப்பட்ட சிற்பத்தின் வேலை பாடுகளுக்கு ஈடான ஒரு மூக்கு. பலாச்சுளையின் இதழ்களையும் ரோஜாவின் வண்ணத்தையும் குழைந்தெடுத்த உதடுகள் அழகாய் எனக்கென காதல் சொல்ல ததும்புவது போல் புகைப்படத்திலே உணர்ந்த அந்த நொடிகள். ஹப்பா சந்தனக்கட்டையை குழைத்தெடுத்த வண்ணம் கொண்ட தோல்.இப்படி ஏகத்துக்கும் என்னால் என் மனதுக்குள் வர்ணிக்கபட்டு கொண்டிருந்தாள் என் தேவதை..ஏனோ இன்னும் சிறப்பாய் வர்ணிக்க வார்த்தைகளை தேடி தமிழ் கடலுக்குள் குதிக்கிறேன்..வார்த்தை அலைகள் என்னை அடித்துவிட்டு போகிறதே தவிர அவளுக்கான வார்த்தைகளை என்னால் தான் தேர்ந்தெடுக்கமுடியாமல் சிக்குகிறேன்..

"என்னடா அண்ணா பகல்லயே கனவா' போய் முதல்ல பாத்து பேசி முடிச்சுட்டு வாங்க.அப்புறம் பாத்துக்கலாம்.அம்மா அப்பாலாம் எப்பவோ பாலண்ணா கார்ல போய் உக்காந்தாச்சு ..போடா" இவ்ளோ மரியாதை யும் கிண்டலும் வேற யாரு கீதா தான்.

வேக வேகமா போய் காரில் அமர்கிறேன்.முப்பது கிலோமீட்டர் பயணம் என் பொறுமையை சோதித்து கொண்டிருக்க ஏனோ வாகன நெரிசல்களை வெறித்துகொண்டிருக்கிறேன் கண்ணாடி வழியே..

ஒரு யுகம் கடந்ததை உணர்கிறேன்.தேவதை மாளிகையின் வாயிலை அடைந்ததும்..மனதிற்குள் ஒரு சின்னதாய் வலி ..பரிட்சையின் முடிவை எதிர்பார்க்கும் மாணவன் போல..

வழக்கம் போல இனிப்பு காரம் காபி என முடிகிறது.தேவதையின் அம்மா கையாலே..

என் ஏமாற்ற முகம் கண்ட என் அம்மா " பொண்ணை வரசொல்லுங்க,சம்பிரதாயத்துக்காக பாத்துடலாம்.எங்களுக்கு ஏற்கனவே பிடிச்சுடுச்சு..இருந்தாலும் பையனுக்காக"

(அம்மான்னா அம்மா தான்) மெலிதாய் ஒரு வழிச்சலோடு தலையை குனிகிறேன்.

"பொண்ணை பார்க்கறது என்ன .பேசவே சொல்லுங்க.அவ ரொம்ப வெட்க பட்டுகிட்டு மேலயே இருக்கா" கையை மேலெ காட்டியபடி பொறிந்து தள்ளுகிறார் கம்பீரகுரலில் மாமனார்.

குரலைகேட்ட படி கையின் திசைநோக்கி வேகமாக பயணிக்கிறேன்..மேலே

"ரொம்ப அவசரம் போல மாப்பிள்ளைக்கு" மாமியார் சொல்லி சிரிக்க அறையே சிரிப்பு சத்தத்துடன் ..ஏனோ மெதுவாக கூட போக தோணவில்லை..

வேகவேகமாக மாடியேறி கதவின் அருகே நின்றுவிட்டேன்.மரமண்டை இவ்ளோ தூரம் ரசிச்சு வர்ணிச்ச ..பேர கேக்கலியே என்ன சொல்லி கூப்பிடுறது என்னையே திட்டிகொண்டேன்..

சரி என்ன கெட்டுபோச்சு.தேவதை மாதிரி இருக்கா தேவதான்னு கூப்பிடலாம் தோண

" ஹாய் தேவதா நான் தணிகை வந்திருக்கேன்.உள்ள வரலாமா" வார்த்தைகள் பாம்பின் வாயிலிருக்கும் தவளையின் துடிப்பை போல கொஞ்ச கொஞ்சமாய் காற்றோடு கலந்து பயணிக்கிறது அவளது வளைவுநெளிவுகள் கொண்ட காதுக்கு..

வேக வேகமாய் ஒரு திறவல்.சொர்கத்தின் உள்ளே நின்று தேவதை என்னை அழைப்பதற்காய் மௌனம் மட்டுமே அல்லாது காற்றோடு சேர்ந்த மெல்லிய சத்தம் சைகைகளோடு சேர்ந்து அபிநயங்கள் கொண்டாடும் நாட்டிய பேரொளியாய் அவள் 'வாங்க " என்றாள்.

நானும் மெதுவான ஆனால் மனம் மட்டும் ஒரு புது உத்வேகத்துடனே உள்ளே சென்று கட்டிலில் உட்கார்ந்து நேருக்கு நேராய் அவளை பார்க்கமுடியாத என் கண்களை திட்டிக்கொண்டு சுழலவிடுகிறேன் பார்வையை.அறையின் அவளல்லாத பக்கங்களை..

சுழலும் இடமெங்கும் ரசனைகளின் அரசியென தெரிகிறது என்னவளின் அறையில் மாட்டபட்ட இயற்கை ஓவியங்களின் கண்ணாடி பூட்டப்பட்ட புகைப்படங்கள்.

மெதுவாய் என் அருகில் வந்து என்னை பார்த்தவள் என் கண்களை நோக்க அடுத்த நிமிடம் என்னையறியாமல் ஆடும் என் காலிலை தூக்கி இன்னொரு காலின் மேல் போட்டுகொண்டு "தப்பா எடுத்துகலைன்னா" என்று திக்கினேன்.

"இதையெல்லாம் ஆணாதிக்க போர்வைக்குள் செலுத்தி பார்க்கும் அளவுக்கு நான் இல்லை தாராளமாக" என்று சரளமாக நாட்டியமாடும் இதழ்களை பார்த்துகொண்டிருந்தேன்..

அட என்னடா இது நம்ம குழுமத்தில் இருக்கும் ஏதாச்சும் சைலண்ட் ரீடரா இந்த பொண்ணு ன்னு மனசுக்குள் தோணி "உங்க" முடிக்கிறேன்.

"ஆமா நான் கேக்கணும் உள்ள வரும் போது என்ன பேர் சொல்லி கூப்பிட்டீங்க" என்றாள்.

என்னடா இது நாம நினைச்சா இவ சொல்லிடறாளே.இவ தான் நமக்கு சரியான துணை என்று நினைத்துக்கொண்டே

"தேவதான்னு சொன்னேன்" நான்.

" யார் சொன்னது என் பேர் தேவதா ன்னு ,நான் யார்கிட்டயும் பேர் சொல்லகூடாதுன்னு தானே சொல்லிவெச்சேன்" அவள் மெதுவாய் கதவின் வழி பார்வை செலுத்த.

"இல்லை யாரும் சொல்லலை.நானே தான் பேர் தெரியாம தேவதை மாதிரி யிருக்கரதாலே தேவதான்னு கூப்பிட்டேன்.அதான் உங்க பேரா?" கேள்வியோடு மிகபெரிய சந்தோசகடலில் நீச்சலடிக்கிறேன் நீண்ட வசனம் ஒன்றை பேசியதற்காய்..

"பரவாயில்லையே.நல்ல ரசனையாளர் தான் போல நீங்க,கெஸ்ஸிங் ல யே பேரை கண்டுபிடிச்சிட்டீங்க" இன்னும் நெருக்கமான பார்வையோடு .

"உங்களை பத்தி சொல்லுங்களேன்" ன்னு நான் முடிப்பதற்குள்

"ரெண்டு பேரும் கீழ வரீங்களா.எல்லாம் கல்யாணத்துக்கப்புறம் பேசிக்கலாம்.இப்ப நாள் குறிக்க போறாங்களாம் கல்யாணத்துக்கு"
அவளின் தங்கை..

" நாங்க இன்னும் பேசவே ஆரம்பிக்கலை.நாளெல்லாம் அவங்களே குறிச்சிக்க சொல்லும்மா.நாங்க வரலை" அப்படின்னு அதட்டலும் கெஞ்சலும் சேர்ந்து நான் வழிய.

" எல்லாம் பேசிக்கலாம் காலம் முழுக்க நீங்க ரெண்டுபேரும் தானே பேசப்போறீங்கன்னு" கோரஸா கீழ இருந்து வர

" வாங்க நாம எங்கயாச்சும் வெளிய போய் பேசிக்கலாம்னு" அவ

" இல்ல பார்க் பீச்சுன்னு எங்க போய் பேசினாலும் சாந்தி அக்கா திட்டுவாங்க வேணாம்.நாம உள்ளேயே பேசலாம்" நான் முடிப்பதற்குள்

திரும்பவும் அதே கோரஸ் போடவே நானும் அவளும் ஒன்னா போய் நாங்க பேசணும் எங்களை விட்டுடுங்க ன்னு கோரஸா கத்தலாம்னு முடிவு பண்ணி போய்ட்டு

நாங்க பேசணும் எங்களை விட்டுடுங்க ன்னு கத்துறோம்.

"டேய் அண்ணா என்னடா எப்பவுமே பத்துமணிக்கு எழுந்திருக்கரவன் இன்னிக்கு 12 மணிக்கு வரையும் தூங்கறானேன்னு பார்த்தா கனவு கண்டுட்டு இருக்கியா" ன்னு என் தங்கச்சி சொல்லிட்டு இருந்தா..

ச்சீ இதுவும் கனவா ன்னு எழுந்து நொந்துகிட்டே போக என் அம்மா பாத்த பார்வையிருக்கே அப்படியே தலைய குனிஞ்சுண்டு பிரஷ் எடுத்துட்டு வெளிய வந்துட்டேன்...


என்ன மக்கா எல்லாரும் எதோ இருக்குன்னு தானே உள்ள வந்தீங்க..எனக்கு கனவுல மட்டும் தான் லே இந்த மாதிரி எல்லாம் நடக்கும்..நிஜமா நடக்கும் போது சொல்லவே மாட்டேன் உங்ககிட்ட..வர்ட்டா

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: